சென்னை: திமுக., தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து இந்த அளவுக்கு வதந்தி பரப்புபவர்கள் யார் என்று திமுக.,வினர் ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளனர். அதன்படி, திமுக தலைவர் கருணாநிதி பற்றி பாஜக., மற்றும் நாம் தமிழர் கட்சிகள்தான் வதந்தி பரப்பி வருவதாக குற்றச்சாட்டு வெளியிட்டுள்ளனர்.
அடுத்து, ஓபிஎஸ்.,தான் காரணமாம்!
ஓபிஎஸ்., சொத்துக் குவிப்பு வழக்கு குறித்து பேசாமல் இருக்கவும், நிர்மலா சீதாராமனின் ராணுவ ஹெலிகாப்டர் உதவி குறித்து விவாதிக்கப் படாமல் இருக்கவும், குறிப்பாக ஸ்டாலின் இது குறித்து மேலும் பேசாமல் இருக்கவும், எடப்பாடி – மோடி செய்யும் சந்திச்செயல்தான் கருணாநிதி உடல் நலம் குறித்த வதந்திகளாம்.
இதற்காகத்தான், சாதாரணமாக சிறுநீர்த் தொற்று காரணமாக ஏற்பட்ட ஒரு காய்ச்சலுக்குப் போய் இவ்வளவுக்கு ஆர்ப்பட்டம் செய்து, கருணாநிதியின் உடல் நலம் குறித்து மோசமான வதந்திகளை அவர்கள் பரப்பி வருகிறார்கள் என்று திமுக.,வினர் இப்போது சமூக வலைத்தளங்களில் பல விதமாக பகிர்ந்து வருகின்றார்கள்.
முத்தமிழ் அறிஞர் தமிழினத் தலைவர் திமுக தலைவர் கலைஞர் உடல் நிலை குறித்து நமது கழகத்தின் செயல் தலைவர் தளபதி அவர்களின் அறிவிப்பு உலகமெங்கும் உறையும் உடன்பிறப்புகளுக்கும் அவரின் பால் அளப்பரிய அன்பு கொண்டுள்ள அன்பர்களுக்கும் ஆறுதலை நல்குகிறது. இறைவனின் பேருளால் கலைஞர் நலம் பெறுவார். கழகத்தை அரியணை ஏற்றிட தமிழரிடையே வலம் வருவார். தளபதியை முதல்வராக கண்டு மகிழ்வார். நூறாண்டு வாழ்வாங்கு வளமுடன் வாழ்வார்… என்று தங்கள் சமூக வலைத்தளப் பதிவுக் கடனை செவ்வனே செய்து வருகிறார்கள் திமுக., வலைத்தள தொண்டர்கள்.




