சென்னை: பகுத்தறிவுக் கொள்கையில் ஊறிய திமுக., தலைவர் கருணாநிதி உடல் நிலை மோசமான நிலையில் சென்னை ஆழ்வார் பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு தீவிர சிகிச்சையில், மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார்.
கடவுள் நம்பிக்கை, ஜோதிட நம்பிக்கை இவை எல்லாம் இல்லாவிட்டாலும், கருணாநிதியின் குடும்பத்தில் உள்ள பெண்கள் சிலருக்கு கடவுள் நம்பிக்கையும் ஜோதிடத்தில் தீவிர நம்பிக்கையும் உண்டு என்பது உலகறிந்த விஷயம். தேர்தல் நேரத்தில் தலைவர்களின் ஜாதகங்களை அலசி ஆராய்ந்து இவர் வெற்றி பெறுவார், இவருக்கு சிரமம் என்றெல்லாம் கணித்துச் சொல்லும் ஜோதிடர்கள், கருணாநிதி உடல் நலம் குன்றி இருக்கும் இந்த நேரத்தில் ஜாதகத்தைக் கணித்து அவரவர் புலமையை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
பொதுவாக, ஒருவருக்கு ஆயுள் கெட்டியா, தீர்க்கமா, அல்ப ஆயுளா என்றெல்லாம் கணித்துச் சொல்வது ஜோதிடத்தில் உண்டு. ஆனால், ஒருவரின் இறப்பு இந்நாளில் என்று யாராலும் கணித்துச் சொல்ல இயலாது. இயற்கையின் சட்ட நியதிகளுக்கு மனிதனின் சாத்திர அறிவு அகப்படாது!
இந்நிலையில், கருணாநிதிக்கு தற்போதைய கிரகக் கட்டங்கள் எந்த நிலையில் இருக்கின்றன, அவை என்ன சொல்லுகின்றன என்று ஜோதிடர்கள் சில தங்களது வலைத்தளப் பக்கங்களில், சமூக வலைத்தளங்களில் விவாதித்து வருகின்றனர்.
அவர்களில் ஒருவராக, கருணாநிதியின் ஜாதக அமைப்பு குறித்து ஜோதிடர் சுப்ரமணியம் கூறியுள்ளது…. கருணாநிதி ஜாதகத்தில் லக்னம் கடன லக்னம். லக்னாதிபதி சந்திரன் லாப ஸ்தானத்தில் 11வது இடத்தில் உச்சம் பெற்றுள்ளார்.
சந்திரனோடு இரண்டாம் இடத்தின் அதிபதி சூரியனும் உச்சம் பெற்றுள்ளார்.
இதன் மூலம் அவர் சுறுசுறுப்பாக இயங்கும் தன்மையை இயற்கையிலேயே பெற்றிருப்பார்.
இவர் ஜாதகத்தில் மூன்று கிரகங்கள் உச்சமாக உள்ளன. தற்போதைய கால கட்டத்தில் அவருக்கு சுக்கிர திசை நடக்கிறது. குரு கேட்டை நட்சத்திரத்தில் இயங்குகிறார்.
மேலும் புதன் கடக லக்னத்துக்கு பாதக அதிபதியாகிறார். இதனால்தான் தற்சமயத்தில் அவருக்கு உயிர்ச் சோதனை ஏற்பட்டுள்ளது. இந்த சோதனையை வென்று அவர் நல்ல நிலைக்கு வரவேண்டும் என நாம் எதிர்பார்க்கிறோம். ஆனால் அது வேதனையளிக்கும் விதத்திலும் இருக்கலாம். இது கருணாநிதிக்கு சோதனையான காலம்… என்று கூறியுள்ளார்.
ஆத்திகராக இருந்தால் இது போன்ற ஜோதிடக் கணிப்புகளில் நம்பிக்கை கொண்டு ஏதாவது பரிகாரம் செய்ய இறங்குவார்கள். ஆனால், கருணாநிதி மீது பற்று கொண்டிருக்கும் தொண்டர்கள் சிலரோ இப்போது கோயில்களில் கூட்டு வழிபாடுகளில் இறங்கியுள்ளனர்.




