சென்னை: திமுக கோரிக்கை விடுத்தால் கருணாநிதியின் வாழ்க்கை, பள்ளியில் பாடமாகச் சேர்க்கப்படும் என்று அமைச்சர் மாஃபா பாண்டிராஜன் பதிலளித்தார்.
தமிழகத்தில் திராவிட இயக்கங்கள் காலூன்ற தொடங்கிய புதிதில், பள்ளிக்கூட பாடங்களைத்தான் முதலில் நாசம் செய்தார்கள். அற வழியில் செல்லத் தூண்டும், தமிழரின் பண்டைய இலக்கியங்கள், நீதி நூல்களை பாடப் புத்தகங்களில் இருந்து நீக்கி விட்டு, மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு மணம் உண்டு என்று கொச்சை வார்த்தைகளால் சிந்தனையை சிதைத்து, சமூகத்தை நாசமாக்கும் நச்சுக் கருத்துகளை விதைத்தார்கள். தொடர்ந்து, பேரறிஞர் அண்ணாவைப்போல் பேச்சாளர் தமிழகத்தில் பிறக்கவே இல்லை என்று மாணவர்கள் மனத்தில் ஆழப் பதித்தார்கள். ஈ.வே.ரா.வைப் போல் சமூக சீர்த்திருத்தவாதி உலகிலேயே இல்லை என்று மாணவர்களைப் படிக்க வைத்து மார்க் எடுக்க வலியத் திணித்தார்கள்.
உலகம் எங்கோ வேகமாகப் போய்க் கொண்டிக்க தமிழக மாணவன் மட்டும் தலை எழுத்தே என்று, தமிழகத்திலேயே உழன்று கொண்டு தலைவிதியை நொந்து கொண்டிருக்கக் காரணமாக அமைந்ததும் திராவிட இயக்கங்களே! கல்வித் துறையை சீரமைக்க வேண்டிய இந்த முக்கியமான தருணத்தில், மேலும் சீரழிக்க ஆர்வத்தைக் காட்டியிருக்கிறார் தமிழக கல்வித் துறை அமைச்சர் மாபா பாண்டியராஜன்.
அண்மையில் மறைந்த திமுக., தலைவர் கருணாநிதி புத்தகங்களை எழுதியுள்ளார். சங்க இலக்கிய உரை என சகட்டு மேனிக்கு கொச்சைக் கருத்துகளைத் திணித்துள்ளார். இவர் தமிழுக்கு ஆற்றிய தொண்டு ஏராளம் என்று திமுக.,வினர் புகழும் அதே வேளையில், காசுக்கும் விருதுக்கும் விலை போகாத உண்மைத் தமிழ் ஆர்வலர்களோ முற்றிலும் மாறுபடுகின்றனர்.
இந்நிலையில் கருணாநிதியின் நூல்கள் அரசுடமை ஆக்க வேண்டும் என திமுக.,வினர் கருதுகின்றனர். இதுகுறித்து அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறுகையில் கருணாநிதியின் நூல்களை அரசுடமை ஆக்க வேண்டுமென திமுக தரப்பில் கோரிக்கை வந்தால், அரசு ஆவன செய்யும். கருணாநிதியின் படைப்புகளை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்ல அதிமுக அரசு எந்த விதத்திலும் தடையாக இருக்காது. திமுக கோரிக்கை விடுத்தால் அரசு பாடத்திட்டங்களில் கருணாநிதி வாழ்க்கையைப் பாடமாகச் சேர்க்க பரிசீலனை செய்யப்படும் என்று கூறினார் மாஃபா பாண்டியராஜன்.
மாஃபாவின் இந்தக் கருத்து, உண்மைத் தமிழ் ஆர்வலர்களையும், கல்வித் துறையில் சீர்திருத்தம் கோருபவர்களையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.




