விருது மோகத்தில் எவருடனும் பொருதி நின்ற விற்பன்னர் வைரமுத்து, இப்போது #மீடூ சரித்துவிட்ட இமேஜால் நிலைகுலைந்து தவிக்கிறார் என்பதுதான் சினிமாத் துறை வட்டாரத்தில் பரவலாகப் பேசப் படும் செய்தி!
மத்திய அரசில் இருப்பவர்களின் ஆதரவு இருந்தால்தான் உயரிய விருதுக்கு தேர்வு ஆவோம் என்ற எண்ணத்தில் வைரமுத்து தீட்டிய திட்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல! எத்தனையோ முறை தேசிய விருதுகளைப் பெற்றாலும், இலக்கியத்தில் உயரிய விருதான ஞானபீடத்தைப் பெற்று விட வேண்டுமென்ற அவாவினால், மத்தியில் உள்ள காவிப் படைத் தலைவர்களிடம் வைரமுத்து காட்டிய நெருக்கம் அதிகம்தான்! அதற்கு பிரதிபலனாக மத்திய காவிப்படைத் தளகர்த்தர்களும் வைரமுத்து ஆண்டாள் விவகாரத்தில் மாட்டிக் கொண்டபோது, வாய் திறவாமல் நட்பு பேணி தங்கள் கொள்கைப் பிடிப்பைக் காட்டிக் கொண்டார்கள்!
ஞானபீடத்தைத் தட்டிவிட வேண்டும் என்பதற்காக பாஜக., தமிழகத் தலைவர்கள் தொடங்கி, மேலிடம் வரை தலைவர்கள் தொடர்புப் பணியை வேண்டியவர்கள் மூலம் செய்து வந்தார் வைரமுத்து என்கிறார்கள் பாஜக.,வில்! இதற்காக அவர் நெருங்கிது, தமிழகத்தின் மூத்த பாஜக., தலைவரும் தற்போது மாநிலங்களவை உறுப்பினராக உள்ளவருமான இல.கணேசனிடம்! அரசியல் கடந்து இலக்கியம் என்ற தளத்தில் பொற்றாமரை அமைப்பை நடத்திக் கொண்டிருக்கும் இல.கணேசன், தேசிய விருது பெற்ற பெரும் பாடலாசிரியர் என்று மதிப்பளித்து வைரமுத்து கூறும் இந்து விரோதக் கருத்துகள், பாஜக.,வுக்கு நேரெதிரான கருத்துக்களை எல்லாம் சகித்துக் கொண்டு, நட்பு பாராட்டினார்.
தொடர்ந்து, வள்ளுவப் பித்து பிடித்து தமிழின் சிறப்பை வடவரும் பாராட்டுகின்றனர் என்று காட்டுவதற்காக புதிய அவதாரம் எடுத்து வந்த தருண் விஜய் எம்.பி.,யிடம் மிகத் தீவிர நெருக்கம் வைத்தார் வைரமுத்து! தமிழகத்தில் உள்ள திருவள்ளுவ அன்பர்கள் வெகு காலம் தீர்மானித்து வடித்த திருவள்ளுவர் சிலையை ஹரித்வாரில் நிறுவுவதற்கு ஏற்பாடு செய்கிறேன் என்று உறுதியளித்த தருண் விஜய், பின்னாளில் திடீரென தடம் மாறி, வைரமுத்துவுடன் பூண்ட நட்பின் காரணமாக வைரமுத்து கைகாட்டிய நபர் மூலம் திருவள்ளுவர் சிலையை நிறுவ ஏற்பாடு செய்தார்.
அரசியல் மட்டத்தில் வடநாட்டவர்களின் நெருக்கம் தமக்கு ஞானபீடத்தைத் தேர்வு செய்து தர உதவும் என்ற திட்டமிடல் வைரமுத்துவிடம் தெளிவாக இருந்தது. அதற்கான காய் நகர்த்தல்களில் உடன் வந்தவர் தில்லித் தரகர் என்று பேர் பெற்ற தமிழ் நாளிதழின் ஆசிரியர்! கருணாநிதி மத்திய அரசில் செல்வாக்குடன் இருந்தபோது, அவர் மூலமே ஞானபீடத்தைப் பெற்றுவிடத் துடியாய்த் துடித்தார் வைரமுத்து. ஆனால் கருணாநிதி செயல் இழந்த பின், வடவர்களின் துணையை நாடினார்.
‘ஞானபீடம்’ இந்தியாவில் இலக்கியத்துக்காக வழங்கப்படும் உயரிய விருது. 1965 முதல் வழங்கப்பட்டு வரும் இந்த விருதை, தமிழுக்காக அகிலன், ஜெயகாந்தன் ஆகியோர் பெற்றுள்ளனர். பத்மபூஷன், திரைப் பாடல்களுக்கான தேசிய விருதுகள் என பல விருதுகளைப் பெற்றுள்ள வைரமுத்து, தீராத தாகம் கொண்டு மோகம் வைத்தது ஞானபீடத்தில்!
ஆண்டாள் குறித்த கட்டுரையும் பேச்சும் கவிஞருக்கு ஒரு சறுக்கலை ஏற்படுத்தினும், பாஜக., அடிமட்டத் தொண்டர்கள் பெரும் போராட்டங்களை முன்னெடுத்த போதும், தலைவர்கள் பெரிதும் அலட்டிக் கொள்ளவில்லை! நட்புக்கு மரியாதை கொடுத்தனர். ஆண்டாள் குறித்து வானொலி உரையும் கட்டுரையும் எழுதினார் வடவர் தருண் விஜய்! ஆண்டாள் விவகாரம் கடந்த பின்னும், பாலகுமாரனுக்கு அஞ்சலி செலுத்தும் மேடையில் (அது முன்னரே தீர்மானிக்கப் பட்டது இல்லை என்றாலும்) ஒன்றாய் நின்று போட்டோவுக்கு போஸ் கொடுத்தார் இல.கணேசன்.
இந்தக் காட்சிகள் அடிமட்டத் தொண்டர்களுக்கு முகச் சுளிப்பைத் தந்தாலும், வைரமுத்து வடவர்கள் கைகொடுப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் உலவி வந்தார். இத்தனை திட்டமிடல்களும் சிரமங்களும் சேர்ந்து எல்லாம் கைகூடி வரும் நேரத்தில், திடீரென புயலாய் நுழைந்தது மீடூ விவகாரம்! வைரமுத்துவால் தாம் பாலியல் ரீதியாக பாதிக்கப் பட்டதாக பாடகி சின்மயி, பாடகர் மலேஷியா வாசுதேவனின் மருமகள், ஹேமமாலினி உட்பட 10க்கும் மேற்பட்ட பெண்கள் புகார் தெரிவித்ததில், கவிஞரின் இமேஜ் சற்றே சரிந்தது.
பெண்கள் பாதுகாப்பு என்று துவக்கம் முதலே முழங்கி வரும் பிரதமர் மோடி, பெண்களுக்கு எதிரான கொடுமைகளைச் செய்பவர்களை தண்டிக்கும் சட்டதிட்டங்களை கடுமையாக்க, இந்த விவகாரம் மேலும் சூடுபிடித்தது.
ஏற்கெனவே ஆண்டாள் விவகாரத்தின் போது, வைரமுத்தும் அந்த விவகாரம் தொடர்புள்ள நாளிதழ் ஆசிரியரும் ஒவ்வோர் ஊர்களில் உள்ள தமிழ்ச் சங்கத்தின் பொறுப்பாளர்களிடமும் பேசி, ஆதரவு அறிக்கைகளை இட வைத்தார்கள். தமிழ் அறிஞர்கள் என்று கூறிக் கொண்டிருப்பவர்களின் பெயர்களைச் சேர்த்து, கூட்டறிக்கை விட வைத்தார்கள்.
இப்போது, சினிமாத்துறை சார்ந்த விவகாரம், புகார் என்பதால், சினிமாத்துறையில் உள்ள பெருந்தலைகளையே ஆதரவுக்கு துணைக்கு அழைத்துக் கொள்ள தூண்டிலிட்டார் வைரமுத்து. அதை அடுத்து பாரதிராஜா, ராதாரவி என குரல்கள் பலமாகவே எழுந்தன. இன்று என்மீது சுமத்தப் படும் குற்றச்சாட்டுகள் நாளை உங்கள் மீதும் வைக்கப் படும்; நாம் இப்போதே இவற்றை எல்லாம் பொய், உளறல்கள், பித்தலாட்டம், அரசியல் என்று நீர்த்துப் போகச் செய்யாவிட்டால், எல்லோரும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப் படுவோம் என்று மேற்கொள்ளப் பட்ட பிரசார இயக்கம் மீடியா தலைகளில் இருந்து பலரிடமும் வேலை செய்திருக்கிறது.
அதனால்தான் தங்களை கவனிப்பார் யாருமில்லை என்றும், பெண்கள் மீது வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டவர்கள் எல்லாம் நாயகர்களா என்றும் நீதி கேட்டு பெண்கள் கூக்குரலிட வேண்டிய நிலை வந்தது.
ஆனால், வைரமுத்துவை கைதூக்கிவிட சக கவிஞர்கள் மட்டும் ஒதுங்கிக் கொண்டனர். அதற்குக் காரணம், ஆலமரத்தின் கீழ் சிறு செடிகள், புற்கள் கூட முளைக்காது என்ற நியதிதான்! திரையுலகில் மற்ற கவிஞர்களுக்கு பாடல் எழுதும் வாய்ப்பு தரக் கூடாது என இயக்குனர்கள், இசையமைப்பாளர்களை வலியுறுத்துவார். ஒரு படத்துக்கு தன்னை கமிட் செய்து விட்டால், அனைத்துப் பாடல்களையும் தாமே எழுதுவதாகவும், வேறு எவரும் எழுதினால் தாம் எழுத இயலாது என்றும் இயக்குனர், இசையமைப்பாளர்களை பிளாக்மெயில் செய்ததாக குறை கூறுகின்றனர் சக கவிஞர்கள்.
திமுக., கவிஞராகவே திரையுலகில் அறியப் பட்ட வைரமுத்து, தனது திமுக., நெருக்கம் என்ற இடத்தை வேறு எவரும் பிடித்து விடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். பா.விஜய் அந்த இடத்தை எட்ட முனைந்தபோது, எட்டி உடைக்கப் பட்டு, பின்னர் காணாமல் போனது சோகம்! மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார் போன்றோர் தேசிய அளவில் பேசப் பட்டிருக்க வேண்டியவர்கள் என்று வருத்தப் படுகிறார்கள் திரை உலகில்! மீடூ விவகாரத்திலும் சின்மயி, இன்னும் பெயர் சொல்ல விரும்பாத பெண்கள் எல்லாம் கூறும் புகார், அவர் தங்களை ஏ.ஆர்.ரகுமானிடம் அறிமுகப் படுத்தி வைப்பதாகவும், வாய்ப்பு வாங்கித் தருவதாகவும் கூறி, பின்னர் தவறாகப் பேச முற்பட்டார் என்பதுதான்!
வைரமுத்துவின் சீண்டல்களுக்கு அடிப்படையாக, ஒரு பிம்பமாய் அவரால் காட்டப் பட்டவர் ஏ.ஆர்.ரகுமான். அரசியல் என்றால் கருணாநிதியிடம் நெருக்கமாகக் காட்டிக் கொள்வது, பேச வைப்பது, திரை உலகம் என்றால் ஏ.ஆர்.ரகுமான் போன்ற இசையமைப்பாளர்களை நெருக்கமாகக் காட்டிக் கொள்வது, அவர்களையே அப்படி பேச வைப்பது என்று ஒரு நாடகத்தை நடத்தி, தாங்கள் அவருக்கு இணங்காவிட்டால், தங்களை இந்தத் துறைகளில் வளர விடச் செய்ய மாட்டார் எனும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கினார் என்பது வைரமுத்து மீது தற்போது வைக்கப் படும் குற்றச்சாட்டு!
ஆனால், தற்போது ‘#மீடூ’ விவகாரத்தில், குற்றச்சாட்டுக்கு உள்ளான வைரமுத்துவுக்கு, தங்கள் படங்களில் பாடல் எழுத வாய்ப்பளித்தால், பெண்களிடம் இருந்தும், சமூக வலைத்தள வாசிகளிடம் இருந்தும் பலத்த எதிர்ப்பு வரும் என இயக்குனர்களும் இசையமைப்பாளர்களும் நினைக்கும் அளவுக்கு மாற்றம் ஏற்பட்டுள்ளதாக திரையுலகினர் கூறுகின்றனர். இந்த நிலையில்தான், பிற கவிஞர்களுக்கும் பாடல்கள் எழுதுவதற்கு வாய்ப்பு கிடைத்து வருகிறதாம்!
கவியரசு கண்ணதாசனுக்கும் மேல் ஒரு படி தாம் என்பதைக் காட்டுவதற்காக, கவிப்பேரரசு பட்டம் வாங்கி பெயரில் சூட்டிக் கொண்டாலும், ஞானபீட விருதுக்கு அவர் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு இனி அரசியல் ரீதியாகவும் பலத்த எதிர்ப்புகள் எழக்கூடும் என்பதால், அந்த முயற்சி கைகூடுமா என்பது சந்தேகமே என்கிறார்கள் திரைத்துறையில்!