
ब्राह्मणस्य तु देहोऽयं क्षुद्रकामाय नेष्यते” – இந்து சமய மூல நூல்கள் – சட்ட நூல்களை பார்ப்பனர் தம் சவுகரியத்துக்காக,வயிற்றுப் பிழைப்புக்காக, தம்மையே உயர்த்திக் காட்டிக் கொள்வதற்காக, அவர்களே எழுதி வைத்துக்கொண்டனரா ?
अष्टापाद्यं तु शूद्रस्य स्तेये भवति किल्बिषम् ।
षोडशैव तु वैश्यस्य द्वात्रिंशत्क्षत्रियस्य च । । ८.३३७ । ।
ब्राह्मणस्य चतुःषष्टिः पूर्णं वापि शतं भवेत् ।
द्विगुणा वा चतुःषष्टिस्तद्दोषगुणविद्धि सः । । ८.३३८ । ।
அஷ்டாபாத்யம் து ஶூத்ரஸ்ய
ஸ்தேயே பவதி கில்பிஷம் |
ஷோடஶைவ து வைஶ்யஸ்ய
த்வாத்ரிம்ஶத்க்ஷத்ரியஸ்ய ச | | 8.337 | |
ப்ராஹ்மணஸ்ய சது:ஷஷ்டி:
பூர்ணம் வாபி ஶதம் பவேத் |
த்விகுணா வா சது:ஷஷ்டி:
தத்தோஷகுணவித்தி ஸ: | | 8.338 | |
[மநு 8.337-338]
[பிராமணருக்கான குறைந்த பட்ச தண்டனை அளவு பிறரைக் காட்டிலும் 64 மடங்கு அதிகம் இருக்க வேண்டும்; அதிக அளவு தண்டனை பிறருக்கு அளிப்பதைக் காட்டிலும் 128 மடங்கு வரை அதிகம் இருக்கலாம்]
மநு க்ஷத்ரியர் என்பதை மனத்தில் கொள்க.
குறட்பாக்கள் சில அப்படியே மனுநூல் பாக்களுக்கான நேரடி மொழி பெயர்ப்பாகவே அமைந்திருக்கக் காண்கிறோம் .
“எழுத்துமுதல இலக்கண வகையும்
வழுத்து வேதாகம வகையதன் பயனும்
தங்கிய குறட்பா தமிழ்மனுநூல்…”
எனும் பாடலும் உள்ளது
ஒற்றைப் பார்ப்பனர் எதிர்ப்பட்டால் சகுனத்தடை; பார்ப்பனர் பறித்த வெற்றிலை தூய்மை இழக்கிறது, அதை தேவர்களுக்குப் படைத்தல் கூடாது.
இவையும் அந்நூல்கள் சொல்வதே !
குடிப் பழக்கத்துக்கு ஆளான அந்தணனின் வாயில் நன்கு காய்ச்சிய சூடான சாராயத்தை ஊற்றுமாறு கூறுகிறது கௌதம தர்ம ஸூத்ரம்.
பதினெண் புராணத் தொகுப்பு ஸூதர், முனிவர்களுக்குச் சொன்ன வற்றின் தொகுப்பு; ஸூதர் பிராம்மணர் அல்லர்.
அருந்தவ முனிவர் அநேகர் இருக்க இராமபிரான், சபரி அளித்த கனிகளையே மிக விரும்பி அருந்தியதை பார்ப்பனர் போற்றும் வால்மீகீ ராமாயணம் விவரிக்கிறது.
அறத்தை மீறிய பாரத்வாஜ துரோணரை, ஆசாரியர் என்றும் பார்க்காமல் வீமன் மிகக் கடுமையான சொற்களால் நிந்தித்ததை மஹாபாரத நூல் மறைக்கவில்லை.
பார்ப்பனர் போற்றும் பாகவதம் ஆயர் மகளிரின் பக்தியையே உயர்த்திக் கூறுகிறது; பார்ப்பனர் மிக விரும்பி பக்தி செய்யும் கண்ணபிரான் கசாப்புக் கடைக்காரரான தர்ம வியாதரை பாகவதர் குழாத்துக்குத் தலைவராக்குகிறார்; தமது அருமை நண்பரும், ஆன்ம ஞானியும், பக்தருமான ஸுதாமாவை [குசேலரை] விட்டுவிட்டார்.
கண்ணபிரான் தம் விசுவரூபத்தை அர்ஜுநருக்கும், ஸஞ்ஜயருக்கும் மட்டுமே காட்டியருளினார்; பிராம்மணர்க்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது; ஹஸ்திநாபுரத்துக்குத் தூதுசெல்கையில் கண்ணபிரான் தங்கியது விதுரஸ்வாமியின் குடிலில்; ”இம்மாநகரில் தங்க உனக்கு வேறு இடமே இல்லையா ? கல்வி – கேள்விகளால், சது மறையால், ஒழுக்கத்தால் உயர்ந்தோர் இங்கு யாரும் இல்லையோ ! உறவுமுறையால் சம்பந்தியான நான் இல்லையா ! கிம் அர்த்தம் வ்ருஷல போஜநம் ?” மனத்துள் கருவிக்கொண்டு, வெளியே கேலி பேசுகிறான் கௌரவர் தலைவன். இதுதான் கண்ணபிரான் கடைப்பிடித்த ரிஸர்வேஷன் பாலிசி !
குமாரில பட்டர் இளமையில் தமக்கு போதனைகள் செய்த பவுத்த ஆசாரியர்களை ஏமாற்றிய பாவத்துக்குக் கழுவாய்தேடி உமிக்காந்தல் நெருப்பில் தம் உடல் மெல்ல மெல்லக் கருகுமாறு செய்து கழுவாய் தேடி உயிர் துறந்தார்; மேலோர் பாவச் செயல்களுக்கு அஞ்சினர்.
அமரர் ரா.கணபதி அவர்கள் காஞ்சிப் பெரியவர்களின் வரலாற்றைக் கல்கி வார இதழில் எழுதத் தொடங்கினார்; முன்னுரையும் வெளியாகி விட்டது. செய்தி அறிந்த பெரியவர் உடனேயே அதை நிறுத்தச் சொன்னார். மீராபாயி வரலாற்றை எழுதுமாறு உத்தரவானது. ரா.கணபதி அவர்கள் நேரில் சென்று தரிசிக்கும்போது ‘சித்த பரிபக்குவத்தில் ஆயிரம் ஸந்யாஸிகளுக்கும் மேம்பட்டவள் பக்த மீரா’ என்றாராம் பெரியவர்கள். ’60களில் நடந்த நிகழ்ச்சி இது.
ஒரு பெரிய நிறுவனத்தில் உயர்பதவி பெற தகுதி – திறமைகள் எத்தனை முக்கியமோ, அதைக்காட்டிலும் அதிக முக்கியத்துவம் ஆன்மிகத்தில் இவற்றுக்கு உண்டு என்பதை நாம் உணர வேண்டும்.
போற்றுதலுக்காகவோ, தூற்றுதலுக்காகவோ, பட்டி மன்றம் தொடங்கவோ எழுதவில்லை, ஒரு புரிதலுக்காக எழுதினேன்.