
உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ஹாஜி கலிமுல்லா கான் (79).இவர் புகழ்பெற்ற தோட்டக்கலை நிபுணர் மற்றும் புதிய ரக பழங்களை உற்பத்தி செய்து வருகிறார்.
புதுப்புது ரக மாம்பழங்களை சந்தையில் அறிமுகம் செய்து வருகிறார்.
இதனால் இவரை ‘மாம்பழ மனிதர்’ என பொதுமக்கள் அழைத்து வருகின்றனா்.
இந்நிலையில் இந்த கோடை காலத்தில் பா.ஜனதா தேசிய தலைவரும், புதிய மத்திய மந்திரியுமான அமித்ஷா பெயரில் புதிய ரக மாம்பழத்தை உருவாக்கியுள்ளார். அதற்கு ‘ஷா’ மாம்பழம் என பெயரிட்டுள்ளார்.
இது கொல்கத்தாவின் ‘ஹஸ்னே-ஆரா’ மற்றும் லக்னோவின் புகழ்பெற்ற ‘தூஸ்சேரி’ ரக மாம்பழங்களின் மரபணுக்களை இணைத்து உருவாக்கப்பட்டுள்ளது.
பத்மஸ்ரீ விருது பெற்றுள்ள கலிமுல்லா கான் ஏற்கனவே பல புதிய ரக மாம்பழங்களை அறிமுகம் செய்து சாதனை படைத்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், முன்னாள் பிரதமர் வாஜ்பாய், பிரதமர் நரேந்திர மோடி, சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர், நடிகர் அமிதாப்பச்சன், நடிகைகள் ஐஸ்வர்யாராய், நர்கீஸ் ஆகியோர் பெயரில் புதிய ரக மாம்பழங்களை அறிமுகப்படுத்தி அசத்தி உள்ளார்.
இவர் லக்னோவில் லிசாபாத் என்ற பகுதியில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் உள்ள தனது நிலத்தில் மாமரக் கன்றுகளை வளர்த்து வருகிறார்.
கடந்த 1957-ம் ஆண்டு முதல் இதை செயல்படுத்தி வருகிறார்.தற்போது அமித்ஷா பெயரில் உருவாகியுள்ள புதிய ரக மாம்பழம் விரைவில் விற்பனைக்கு வர உள்ளது.
அமித்ஷாவின் வாழ்க்கையும், அரசியல் நிலைப்பாடுகளும் என்னை பெரிதும் கவர்ந்தது.அவரது நல்லெண்ணம், திறமையான செயல்பாடு மக்களை ஒன்றிணைத்துள்ளது. அவரை போன்றே ‘ஷா’ மாம்பழமும் மிக இனிப்பாகவும், சுவையானதாகவும் இருக்கும் என்றார்.
கடந்த 2017-ம் ஆண்டில் உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் பெயரில் சுவை மிகுந்த அழகிய ‘யோகி’ மாம்பழத்தை அறிமுகம் செய்தார். என்பது குறிப்பிடதக்கது.



