
இன்றைய காலகட்டத்தில் சுகப்பிரசவம் என்பது ஓர் அறிய வகையான விஷயமாகிவிட்டது.
பிரசவம் என்பதை இன்றைய காலகட்டத்தில் இரண்டு வகையாக பிரிக்கின்றார்கள். ஒன்று சுகப்பிரசவம் மற்றொன்று சிசேரியன். “வேலை பார்த்தால்தான் நார்மல் டெலிவரியாகும் இல்லையென்றால் சிசேரியன்” என்று சொல்வது தவறான ஒரு நம்பிக்கை. உண்மையை சொல்ப்போனால் இடுப்பெலும்பு விலகி இடம் கொடுக்காத காரணத்தினாலே சிசேரியன் செய்யப்படுகிறது, அதுபோக ஒரு சிலருக்கு குழந்தைக்கு கொடிசுற்றுதல் இன்ன பிற காரணங்களாலும் இந்த வகையான சிசேரியன் ஏற்படலாம். சிசேரியன் செய்வது தவறல்ல நமக்கும் குழந்தைக்கும் பிரசவத்தில் சிக்கல் ஏற்படும் என்று அறிந்தால் அந்த நிலையில் சிசேரியன் செய்துகொள்ளலாம் .
முடிந்த வரை சுகப்பிரசவத்திற்கு வழிவகுக்கநம்மால் முடிந்த வேலைகளை செய்து 80சதவிகிதம் சுகப்பிரசவத்திற்கு வழிவகுக்கலாம். என் இரண்டு குழந்தைகளையும் சுகப்பிரசவமாய் பெற்றதற்கு நான் செய்த சில எளிய வழிமுறைகளை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன். கர்பம் தரித்து முதல் ஐந்து மாதங்கள் ஓய்வெடுங்கள். அந்த சமயத்தில் அதிகமான ஹார்மோன் மாற்றங்களை கருவானது நம் உடலுக்குள் கொண்டு வரும் எனவே வாந்தி, மயக்கம், குமட்டல், ஒவ்வாமை என பலவகையான பிரச்சனைகள் ஏற்படும். இதில் எல்லாவிதமான அவஸ்தையையும் இரண்டு குழந்தைகளுக்குமே நான் அனுபவித்திருக்கிறேன்(ஒரு அனுபவம் இங்கே பாடமாகிறது).
ஆறாவது மாதம் ஆரம்பமாகிவிட்டால் நாம் சுறுசுறுப்பாக இயங்க வேண்டும் உங்களுக்கு பிடித்ததை நீங்கள் செய்யுங்கள் அதுவே குழந்தையை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும். பாடல் கேட்பது, ஓவியம் வரைவது, சமைப்பது, கதைகள் படிப்பது இப்படி எது வேண்டுமானாலும் இருக்கலாம். கொஞ்சம் கொஞ்சமாக வேலை பார்க்க ஆரம்பிக்க வேண்டும். நாற்காலியில் அமர்வதை தவிர்த்து கீழே அமர்ந்து எழுந்திருங்கள். அது வே ஒருவகையான உடற்பயிற்சி ஆகிவிடும். உங்களுடைய துணிமனிகளை கையால் துவைத்து அலசுங்கள் அதுவே குனிந்து நிமிரும் பயிற்சி ஆகிவிடும். தினந்தோறும் உங்களின் இருப்பிடத்தை குனிந்து துடைப்பத்தால் கூட்டி விடுங்கள். இது ஒருவகையான பயிற்சியாக மாறிவிடும். என்னிடம் என் சொந்தக்கார பாட்டிஒருவர் “படிவாசலை கழுவி கோலம் போட்னும். அப்பொழுதுதான் படிவாசல் எளிமையாக வழிவிடும்” என்றார். தினமும் காலையில் வாசலை கழுவி அழகான கோலமிடுவதை வழக்கமாக்கிக்கொண்டேன். மனதும் கோலம் போடும்போது ஏதோ புத்துணர்ச்சி பெற்றது.
சுகப்பிரசவம் அருளும் கர்பகரக்ஷாம்பிகை வரலாற்றையும் ஒவ்வொரு மாதத்திற்கான பாடலையும் பக்தியோடு படித்தேன். சஷ்டிகவசமானது என் குழந்தையையும் என்னையும் பாதுகாக்கும் அரணாக திகழ்ந்தது. தாயுமானவர் சுவாமியை தினந்தோறும் பக்தியோடு வேண்டிக்கொண்டேன். நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும் வயிற்றிலிருக்கும் குழந்தையை மகிழ்வாக வைக்கும் செயலாக மாற்றுங்கள். சரிவிகிதமான சமச்சீரான உணவு சரியான அளவில் எடுத்துக்கொண்டால் உப்பு, சர்க்கரை ஏறுவதற்கு வாய்ப்பில்லை. அளவு கம்மியாகவும் உண்ணக்கூடாது அதேசமயம் பிள்ளை வயிற்றில் இருக்கிறதென “கண்டேன் கண்டேன்” என்று சொல்லி அதிகமாக உண்ணக்கூடாது. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சுதான் ஆகும். தூக்கம் வந்தால் நன்றாக தூங்கவேண்டும் மற்ற சமயங்களில் அமர்ந்தே இருக்கக்கூடாது இயன்ற வேலைகளை செய்யலாம்.
ஏழுமாதமாகிவிட்டதா மெல்ல எழுந்து அரைகிலோமீட்டரிலிருந்து ஆரம்பித்து நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம். நாட்கள் செல்ல செல்ல நடைபயிற்சியின் கிலோமீட்டர் அளவையும் கூட்டிக்கொள்வது நன்மைபயக்கும். கர்ப்பகாலத்தில் நடைப்பயிற்சியானது உடல்வலி, சோர்வு ஆகியவற்றை நீக்குவதோடு நல்ல காற்றை காலை நேரத்தில் சுவாசிப்பதால் குழந்தையும் ஆரோக்கியத்தோடு இருக்கும். நடைபயிற்சியானது உடலை புத்துணர்ச்சியோடு வைத்துக்கொள்ளவும் செய்கிறது. யோகா பயிற்சியை மேற்கொண்டது எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. பிராணாயனம் என சொல்லப்படும் மூச்சுப்பயிற்சி சீரான காற்றை உடலெங்கும் பரவச்செய்வதற்கு பயனுள்ளதாக இருந்தது.
இது போக க்ரேடில் என சொல்லப்படும் குழந்தையை தாலாட்டுவது போன்ற பயிற்சி, பத்மாசனம், தாளாசனம், உக்கட் ஆசனம், வஜ்ராசனம் , பட்டர்ஃபிளை ஆசனம் ஆகியவை பெரிதும் பயனளித்தன. இதையெல்லாம் மருத்துவமனையிலேயே மருத்துவரின் ஆலோசனையோடு யோகாஆசிரியரிடம் கற்று ஏழுமாதம் ஆரம்பமானதிலிருந்து செய்து வந்தேன். நல்ல மெல்லிசையை கேட்பது குழந்தையையும் நம்மையும் புத்துணர்ச்சியோடு வைத்துக்கொள்ளும். நான் கடைபிடித்த மற்றொரு யுக்தி என்னவென்றால் வயிற்றில் குழந்தையோடு நானும் என் கணவரும் பேசிக்கொண்டே இருப்போம். நான் தினமும் காலையில் பிரம்ம முகூர்த்தம் என சொல்லப்படும் நான்கு மணிமுதல் ஆறுமணிக்குள் எழுந்து என் வயிறருகே கைவைத்துக்கொண்டு “என குழந்தை ஆரோக்கியமாகவும், அறிவாகவும் பிறக்கும், அப்பா அம்மாவின மேல் மிகுந்த பாசமுள்ள குழந்தை… எனக்கு சுகப்பிரசவத்தை அருளவேண்டும்” என்று எல்லா கடவுளையும் ஒரு பத்து நிமிடம் பிரார்திப்பேன். இத்தகைய பாஸிட்டிவ் தாட் எனக்கு சுகப்பிரசவத்தை அருள்யது என்றும் சொல்லலாம்.
ஒன்பதாம் மாதம் வந்துவிட்டால் உடல் முழுமையாக அதன் வலுவை இழக்கும். குழந்தையானது உலகத்தை பார்க்கப்போகும் நேரம் வந்துவிட்டதெனகூட சொல்லலாம். அந்த சமயத்தில் சோர்வு ஏற்பட்டாலும் நம்மால் முடிந்த வேலைகளை செய்யவேண்டுமென சொன்னார்கள். நானும் தினமும் வீட்டினை பெருக்குதல், குத்துக்கால் வைத்து வீட்டை துடைத்தல், கோலம் போடுதல், துணிதுவைத்தல் வைத்தவாறு வீட்டை மொழுகுதல் ஆகியவற்றை செய்துவந்தேன். நிறை மாதத்தில் அம்மா கொடுத்த கஷாயம், உலைத்தண்ணீர் பதம் போடப்பட்டது, இரவு கற்கண்டு பால் ஆகியவையும் சுகப்பிரசவத்திற்கு வழிவகுத்தது. நல்ல எண்ணங்களும் சிந்தனைகளும் ஆரோக்கியமான சுகப்பிரசவத்திற்கு வழிவகுக்கும். ஜூலை 9 2015 ம் வருடம் காலையில் வலியெடுத்ததோ ஐந்து மணியளவில் அத்தோடு வீட்டை துடைத்துவிட்டேன், வாசல் கழுவி கோலம் போட்டேன் யாரோ என் இடுப்பெழும்பை உடைப்பது போன்ற வலி… தாள இயலவில்லை நேராக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன் மதியம் 2.45க்கு செவிலியர் மற்றும் மருத்துவர் சூழ அவன் வந்தான். என் குழந்தையை டாக்டர் கையில் தூக்கி “உங்களுக்கு பையன் பிறந்துருக்கான்” என சொல்லிய தருணம் இன்றளவும் நினைத்தாலே இனிக்கும். பெண்பிள்ளையோ ஆண்பிள்ளையோ அது என் பிள்ளையன்றோ சரிதானே. தலைப்பிரசவம் எளிதாய் முடிந்தாலும் இரண்டாம் பிரசவம் சற்று சிரமத்தோடு அமைந்தாலும் சுகப்பிரசவமே அமைந்தது. ஆணொன்று பெண்ணொன்று என இரு செல்வங்களின் தாய்மை நிலை என்றென்றும் வரத்திற்கு ஒப்பானதும் உயரியதுமே.



