
பாரத தேசத்தில் பல யுகங்களாக பலப்பல கருத்துகள், வழி முறைகள், பழக்கவழக்கங்கள், தெய்வங்கள், தேவதைகள் இருந்து வருகின்றன. நம் ரத்தத்தோடு கலந்து விட்ட எண்ணம் என்னவென்றால் இருப்பது ஒரே தத்துவம். அதனை ஞானிகள் பல விதங்களாக குறிப்பிடுவார்கள். “ஏகம் சத் விப்ரா பஹுதா வதந்தி !”
மனிதனின் நம்பிக்கைகள் மாறிக்கொண்டே இருக்கிறது. சின்னச் சின்ன சத்தியங்கள் விஸ்தரித்து மலர்ந்து இறுதி சத்தியமாக உருமாற்றம் பெருகிறது. ஒரு மலர் மலர்வது போல…. ஒரு அருணோதயம் ஏற்படுவதுபோல….! பொதுவாக மனிதனின் மன வெளியில் அதுபோன்ற மாற்றம் இயல்பாக ஏற்பட்டால் அது அனைவருக்கும் ஏற்புடையதே!
நம் நாட்டில் எத்தகு அபிப்பிராயங்கள் இருந்தாலும் எந்த வழி முறையை கடைபிடித்தாலும் சத்தியத்திலிருந்து விலகாமல் இந்த நாட்டின் கலாசாரத்தையும் சமுதாயத்தையும் கெளரவித்தபடி விளங்கின.
ஆனால் வெளிநாட்டு மதங்கள் வெளிநாட்டு அரசாங்கங்களை இங்கே ஸ்தாபிக்க வேண்டும் என்ற இலக்கோடு தொடங்கி மக்களை பாரத சமுதாயத்திலிருந்து விலக்கி நம் கலாச்சாரத்தின் மீதும் பரம்பரையின் மீதும் கௌரவத்தையும் பக்தியையும் குறைக்கும் விதமாக நடந்து கொள்கின்றன. நம் நாட்டின் மக்களை வேரிலிருந்து விலக்கி கருத்தடிமைகளாகவும் தேசத் துரோகிகளாகவும் தயார் செய்கின்றன.
உண்மையில் மனிதன் ஒரு நம்பிக்கையிலிருந்து இன்னொரு நம்பிக்கைக்கும் ஒரு சிந்தனை வழிமுறையில் இருந்து வேறொரு சிந்தனை வழிக்கும் எதற்காக மாறுகிறான் என்பது விசித்திரமான விஷயம்.
மேற்கத்திய நாடுகளில் கூட மனிதர்களும் சமூகங்களும் மாறிய சந்தர்ப்பங்கள் உள்ளன. கிறிஸ்தவத்தில் கூட எத்தனையெத்தனையோ வழிமுறைகளும் மதப் பிரிவுகளும் உள்ளன. கேதலிக்கு, பிராட்டஸ்டண்டு, பெந்தகோஸ்து, ஆர்தோடக்ஸ் சர்ச் மதத்தைச் சேர்ந்தவர்கள்… இவ்வாறு பல உட்பிரிவுகள் உள்ளன.
அதே போல் இஸ்லாம் மதத்திலும் ஷியாக்கள், சுனிகள்…. வகையறா! இந்த ஆபிரகாம் மதங்கள் ஒன்றையொன்று வெல்ல வேண்டுமென்றும் தம்முடையதே உண்மையான மதம் என்றும் அதுவே சத்தியம் என்றும் நம்பி, மீதி உள்ளவர்கள் அனைவரையும் மாற்றுவதற்கு முயற்சித்து வருவதால் உலகில் பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
மனிதன் ஏன் மதம் மாறுகிறான்? எதனை சத்தியம் என்று நம்புகிறான்? இதற்கு பல காரணங்கள் உள்ளன. உண்மையில் மனிதன் ஏதோ ஒரு மத நம்பிக்கை இல்லாமல் வாழ முடியாது. அந்த தேவை மனிதனின் மனதிற்கு உள்ளது. அதனை உபயோகித்துக்கொண்டு இந்த மத வியாபாரிகள் தம் சரக்கை விற்று வருகிறார்கள். மதமும் நம்பிக்கையும் மனிதனுக்கு ஒரு பாதுகாப்புணர்வை அளிக்கிறது. ஒரு ஆதரவாக நிற்கிறது.
நாம் நம்புகின்ற சத்தியத்தையே நம்பும் பிறரோடு சேர்ந்து வாழ்வதன் மூலம் மானசீகமாகவும் பௌதீகமாகவும் அதிக லாபங்களைப் பெறுகிறோம். மனிதனின் சிந்தனையும் உணர்ச்சிப் பெருக்கும் மத வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஆதாரமாகின்றன.
மனிதனின் வயதும் இத்தகைய மன மாற்றத்திற்கு ஒரு காரணமாகிறது. மனிதன் மானசீகமான பலவீனத்தில் ஏதோ ஒரு அச்சத்தோடோ பாதுகாப்பற்றோ இருக்கையில் அந்த பலவீனமான கணத்தில் யார் என்ன சொன்னாலும் அதை நம்பி விடுகிறான்.
சின்னப் பிள்ளைகள், அதிக பக்குவமற்ற சிந்தனை கொண்ட பெண்கள், கஷ்டத்தில் இருப்பவர்கள், வியாதியால் அவதிப்படுபவர்கள், தனிமையில் வாழ்பவர்கள், சமூகத்திலிருந்து எதிர்ப்பை எதிர்கொண்டு விலகி வாழ்பவர்கள்…. இவர்கள் அனைவரும் மதமாற்ற வியாபாரிகளின் இரையாக மாறுகிறார்கள்.
- இளமையில் இருப்பவர்கள்:- பிள்ளைகளும் வளர் பருவத்தினரும் இயல்பாக பெரியவர்களோ டீச்சரோ கூறும் வார்த்தைகளை உண்மை என்று நம்பிவிடுவார்கள். அவர்களின் பிரபாவத்திற்கு ஆளாவார்கள். அதனால் பள்ளி, கல்லூரிகளை ஸ்தாபித்து சிறிய வயதிலேயே கல்வியோடு சேர்த்து இத்தகைய மதங்களைக் கூட எளிதாக தலையில் ஏற்றுகிறார்கள்.
-
ஏழைகள்:- சமுதாயத்தில் ஏழைகள், பொருளாதாரத்தில் கீழ் வரிசையில் வாழும் மனிதர்கள், குடும்பங்கள் போன்றவர்களுக்கு அவசியமான சிறிய உதவிகள் செய்வதன் மூலம் அவர்களை எளிதாக மனமாற்றமும் மதமாற்றமும் செய்துவிட முடிகிறது. அதனால்தான் மேல் நாட்டிலிருந்து ஏழை நாடுகளுக்கு பணத்தைக் கொண்டு வந்து கொட்டி மதம் மாற்றுகிறார்கள்.
-
நோயாளிகள்:- பலவித நோய்களால் மருத்துவமனையில் படுத்திருப்பவர்கள் மானசீகமான பயத்தில் இருப்பார்கள். அப்படிப்பட்டவர்களை அணுகி சிறிய சிறிய உதவிகள் செய்து சில நல்ல வார்த்தைகளை அன்போடு கூறினால் அவர்களை மாற்றி விட முடியும். இவ்விதமாக மருத்துவமனைகளில் நர்சுகளும் மிஷனரிகளும் நோயாளிகளுக்காக பிரார்த்தனை செய்கிறோம் என்று கூறி அவர்களை எளிதாக மதம் மாற்றுகிறார்கள்.
-
கவலையில் உள்ளவர்கள்:- கவலையில் ஆழ்ந்து வாழ்க்கை பற்றிய திகிலோடு உள்ள மானசீக நோயாளிகள் மத மாற்றத்துக்கு பலியாகிறார்கள். எங்கள் தெய்வத்தை நம்பினால் கவலை நீங்கி விடும் என்றும் வாழ்க்கை சுகமயமாகும் என்றும் திரும்பத் திரும்ப எடுத்துச் சொல்லி நம்ப வைப்பார்கள்.
-
சிறைக்கைதிகள்:- குடும்பத்திற்கு தூரமாக நான்கு சுவர்களுக்கு இடையில் வாழும் கைதிகள் மனம் குறுகி குற்ற உணர்வோடு இருப்பார்கள். அவர்களுடன் பேசிப் பழகி எளிதாக மதம் மாற்றி விடுகிறார்கள்.
-
போதை மருந்துக்கு அடிமையானவர்கள்:- மது, குட்கா, சிகரெட் போன்ற போதைகளுக்கு அடிமையானவர்கள் ஒரு ஆதரவைத் தேடி அலைவார்கள். ‘ஆல்கஹாலிக் அனானிமஸ்’ என்ற சர்வதேச இயக்கம் அவ்வாறுதான் தொடங்கப்பட்டது.
-
பிரமையில் வாழ்பவர்கள்:- ஆதாரமற்ற நம்பிக்கைகள் பலமாக ஊன்றும் போது அது மனப் பிரமைமையாக மாறுகிறது. அப்படிப்பட்டவர்கள் ஒருவித டெல்யூஷனில் இருப்பார்கள். தர்க்கத்திலிருந்து விலகி இருப்பார்கள். அவர்களை சுலபமாக மதம் மாற்றுகிறார்கள்.
-
விபரீத பயத்தில் இருப்பவர்கள்:- மரணபயம், வாழ்வு பயம் போன்ற பலவித ஃபோபியா உள்ளவர்கள் யாராவது திரும்பத் திரும்ப சொல்லும்போது அதைக் கேட்டு மதம் மாறி விடுகிறார்கள்.
இவ்விதமாக பேராசை காட்டுவது, மோசம் செய்வது போன்ற வழிமுறைகளைப் பின்பற்றி மானசீகமாக பலவீனமாக உள்ள மனிதர்களையும் குடும்பங்களையும் அருகாமையில் அணுகி, உதவி செய்து, “எங்கள் தெய்வத்தை நம்புங்கள்!” என்று கூறி தங்கள் பிரார்த்தனையில் ஈடுபடுத்துகிறார்கள். அவர்களும் ஒரு தைரியத்திற்காக மதம் மாறுகிறார்கள். இவ்விதமாக எண்ணங்களை மாற்றிக் கொள்வதும் மதம் மாறுவதும் மனிதனின் மானசீக நிலையைப் பொறுத்து இருக்கிறது.
நமது சமுதாயத்தில் மனிதர்களுக்கும் குடும்பங்களுக்கும் நம் சனாதன தர்மத்தின் மீது சரியான புரிதலை ஏற்படுத்தி அவர்களிடம் அன்பும் நட்பும் காட்டி அவர்களை தைரியமானவர்களாகவும் பலமானவர்களாகவும் தயார் செய்ய வேண்டும். அவ்வாறு நாம் துணிந்து செயல்பட்டால் இத்தகு மதமாற்றங்களை முடிந்தவரை குறைக்க இயலும்.
தெலுங்கில் – டாக்டர் மோபிதேவி விஜயகோபால், உளவியல் அறிஞர்.
தமிழில் – ராஜி ரகுநாதன்
(ருஷி பீடம் விசிஷ்ட சஞ்சிகை, 2019)



