“உயர் சாதியில் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்கள், குறைந்த மதிப்பெண் எடுத்தால் போதும், வேலைக்கு தகுதியாகி விடுவார்கள் எஸ்.சி, எஸ்.டி யை விட குறைவான மதிப்பெண் பெற்றாலே அவர்களுக்கு வேலை கிடைத்து விடும் என்பது போன்ற ஒரு தவறான பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறார்கள் எதிர்க்கட்சியினர்.
சமீபத்தில் சட்டமாக்கப்பட்ட 10 % இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பாரத ஸ்டேட் வங்கி நடத்திய பணிக்கான தேர்வில் எஸ்.சி பிரிவினருக்கு குறைந்த பட்சமாக நிர்ணயம் செய்யப்பட்ட மதிப்பெண்கள் (Cut-off) 61.25 , எஸ் டி பிரிவினருக்கு 53.75,மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 61.25 ஆகவும், பொது பிரிவினருக்கு 61.25 ஆகவும், பொது பிரிவில் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கு (உயர் சாதி அல்ல) 28.5 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.
என்ன,ஏதுவென்ற தெரியாத அரை வேக்காட்டு சமூக ஆர்வலர்களும் இது குறித்து கடுமையாக விமர்சனம் செய்வது முட்டாள் தனமானது.
தற்போதைய சட்டப்படி, மொத்தம் உள்ளதில் 10 விழுக்காடு பொது பிரிவில் பொருளாதார ரீதியாக நலிந்தவர்களுக்கு ஒதுக்கீடு செய்யவேண்டும்.
அதனடிப்படையில், தற்போது 421 இடங்களுக்கு 42 இடங்களை இந்த ஒதுக்கீட்டில் கொடுக்க வேண்டும்.
தமிழகத்தில் உள்ள இட ஒதுக்கீட்டின் படி 69 விழுக்காடு அந்தந்த பிரிவினருக்கு முறையே கொடுக்கப்பட வேண்டும். ஸ்டேட் வங்கி விவகாரத்தில் நடந்தது இது தான்.
சமீபத்தில் அறிவிக்கப்பட்ட பொருளாதார இட ஒதுக்கீட்டில் அதிகளவு நபர்கள் விண்ணப்பிக்காததை யடுத்து, குறைந்த பட்ச மதிப்பெண் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதாவது போட்டி, குறைந்த அளவு இருந்தால் குறைவாகவும், அதிக அளவு இருந்தால் அதிகமாகவும் இருக்கும் என்பது நியதி.
சமீபத்தில் தான் இந்த ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டிருப்பதால் தங்களின் சாதி சான்றிதழில் பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவினர் என்பதை ஆவணப் படுத்தாத முடியாமல் போனது மற்றும் 8 லட்ச ரூபாய்க்கும் குறைவான வருமானம் (Creamy Layer) என்பதற்கான ஆதாரங்களை பதிவு செய்வதற்கான நேரமின்மை ஆகிய காரணங்களால் அதிக அளவில் விண்ணப்பங்கள் வந்திருக்காது என்பதே கண்கூடு.
அதாவது 42 இடங்களுக்கு வெறும் சில நூறு பேர் மட்டும் விண்ணப்பம் செய்திருந்தால் குறைந்த பட்ச மதிப்பெண்களே ‘கட்-ஆஃப்’ ஆக இருக்கும். அதே இனி வரும் காலங்களில் பல ஆயிரக்கணக்கில் விண்ணப்பிக்கும் போது ‘கட்-ஆஃப்’ மதிப்பெண் உயரும்.
இந்த சாதாரண விவரம் கூட தெரியாமல், பொருளாதாரத்தில் நலிந்தவர்களுக்கான இடஒதுக்கீட்டினால், சமூக நீதிக்கு பங்கம் என்ற விஷம பிரச்சாரத்தை முன்வைக்க இந்த விவகாரத்தை கையிலெடுத்துள்ளனர் எதிர்க்கட்சியினர்.
தொடர்ந்து தவறான தகவல்களின், போலி தரவுகளின் அடிப்படையில், பாஜக அரசு குறித்த விமர்சனங்களை முன் வைத்து மக்களின் மனங்களில் வன்மத்தை வளர்க்கத் துடிப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
உண்மையை மக்களிடத்தில் எடுத்துச் சொல்லி சந்தர்ப்பவாதிகளின் பொய் பிரச்சாரத்தை முறியடிக்கவேண்டும்.
– நாராயணன் திருப்பதி.