மேகதாது அணை கட்டுவதற்காக ஆய்வு நடத்த மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் கர்நாடக அரசு அனுமதி கேட்டிருந்தது. இதற்கு தமிழக அரசு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
தமிழகத்தின் தொடர்ச்சியான வலியுறுத்தல் காரணமாக கர்நாடகாவின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளது. தமிழக அரசின் எதிர்ப்பை சுட்டிக்காட்டி கர்நாடகாவிற்கு அனுமதி அளிக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் நிபுணர் குழு மறுப்பு தெரிவித்துள்ளது.
தமிழகம் , கர்நாடக இடையே சுமூகமான சூழல் ஏற்பட்டால் மட்டுமே மேகதாது அணை கட்ட அனுமதி அளிக்க முடியும். அணை கட்டுவதற்கு மாற்று இடத்தை குறிப்பிட வேண்டும்.
மாற்று இடத்தை குறிப்பிடாததால் விரிவான ஆய்வு நடத்த அனுமதி அளிக்க முடியாது எனவும் நிபுணர்கள் குழு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மேகதாது அணை கட்டுவது தொடர்பாக கர்நாடக முதல்வர் எடியூரப்பா, பிரதமர் மோடியை சந்தித்து கோரிக்கை வைத்து விட்டு வந்துள்ள நிலையில் ஆய்வு செய்ய கர்நாடகாவிற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.



