சுபாஷிதம் | ஸ்பூர்த்தி பதம்
வாழ்க்கையில் ஊக்கமும் உற்சாகமும் அளித்து நல்வழிப்படுத்தும் 108 ஞான முத்துக்கள்
தெலுங்கில்: பி.எஸ்.சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
33. செயலில் பங்குதாரர்கள்.
செய்யுள்:
கர்தா காரயிதா சைவ |
ப்ரேரகஸ்சானு மோதக: ||
சுக்ருதே துஷ்க்ருதே சைவ |
சத்வார: சமபாகின: ||
— பஞ்சதந்திரம்.
பொருள்:
எந்த நற்செயலிலும், தீய செயலும் செய்பவர், செய்விப்பவர், உற்சாகப்படுத்துபவர் சம்மதிப்பவர் – இந்த நால்வரும் ஆளுக்கு கால்பாகம் பலனை சமமாகப் பெறுவர்.
விளக்கம்:
நல்ல காரியமோ கெட்ட காரியமோ அதன் பலனில் பொறுப்பேற்பவர் நால்வர். அனைத்து புண்ணியச் செயல்களையும் தனியாக யாரும் செய்துவிட இயலாது. நற்செயல் செய்பவர்களுக்கு உதவுவது கூட புண்ணியமே! உதாரணத்திற்கு கோயில் கட்டுவதோ, சாலை அமைப்பதோ யாராவது செய்வதற்கு முன் வரும்போது அவர்களுக்கு உதவி செய்பவர்களுக்கும் அந்த புண்ணியத்தின் பலனில் பங்கிருக்கும்.
தீவிரவாதம், பயங்கரவாதம் போன்ற தீய செயல்களுக்கு துணை போவதும், உரிமை சங்கங்கள் என்ற பெயரில் போராட்டங்களில் ஈடுபடுவதும் வளர்ந்துள்ளது. அவர்களுக்கு அடைக்கலம் அளிப்பவர்களும் பொருளுதவி செய்பவர்களும் தர்மத்தைப் பொருத்தவரையில் குற்றவாளிகளே! இவர்களும் சமமாக தண்டிக்கப்பட வேண்டியவர்களே!
நல்ல செயல்களுக்கு உதவ வேண்டும். கெட்ட காரியங்களுக்கு உதவக் கூடாது என்ற கருத்தை தெரிவிக்கும் ஸ்லோகம் இது.