
சுபாஷிதம்: ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
57. மனக்கட்டுப்பாடு!
சுலோகம்:
ந ஜாது காம: காமானாமுபபோகேன சாம்யதி|
ஹவிஷா க்ருஷ்ணவர்த்மேவ பூய ஏவாபிவர்ததே ||
— மனுஸ்மிருதி.
பொருள்:
போகங்களை அனுபவிப்பதன் மூலம் ஆசை அடங்காது. மேலும் வளர்ந்து கொண்டே இருக்கும். அக்னியில் நெய்யும் ஹவிஸ்சும் போடுவதன் மூலம் தீ மேலும் வளருமே தவிர அணையாது அல்லவா?
விளக்கம்:
மனித இனம் முன்னேறுவதற்கு ஆசைகள் மிகவும் துணைபுரியும். மழையில் நனையாமல், வெயிலில் வாடாமல் இருக்க வேண்டும் என்ற விருப்பத்தோடு மனிதன் குடை தயாரித்துக் கொள்கிறான். உணவு, உடை, இருப்பிடம் ஏற்பாடு செய்து கொண்ட மனிதனின் ஆசைகள் பெருகிக் கொண்டே வந்தன. தான் ஏற்படுத்திக் கொண்டவற்றுக்குத் தானே அடிமையானான். மகிழ்ச்சியான வாழ்க்கைக்குத் தேவையான ஆசைகள் மன அமைதியை விலக்கத் தொடங்கின. அதர்மமான கோரிக்கைகள் அனுபவித்தால் தீரக்கூடியனவா? என்று கேட்கிறது இந்த ஸ்லோகம்.
ஆசைகளை தீர்த்துக் கொள்வதை விட அவற்றை கட்டுப்பாட்டிற்குள் வைப்பதே நல்லது என்று அறிவுறுத்தும் சுலோகம் இது.
விருப்பங்களை நிறைவேற்றிக் கொண்டே போனால் மீண்டும் மீண்டும் ஆசைகள் உற்பத்தியாகிக் கொண்டே இருக்கும். அவற்றை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது மனிதனின் கடமை. ‘காமம் போன்றவை ஞானிக்குக் கூட எப்போதும் எதிரிகளே!’ என்கிறான் கீதையில் பகவான்.
அதனால் அறிவுக் கூர்மையால், தெளிவான சிந்தனையால் நம்மிடமுள்ள ஆசைகளை விட்டு விடுவதே நலம் பயக்கும். அவ்வாறு செய்யக் கூடியவரே தீரர்.
வேண்டுமென்றே கடைகளுக்குச் சென்று கண்ணில் பட்டதையெல்லாம் வாங்க வேண்டும் என்ற மனநிலையை இந்த சுலோகம் கண்டிக்கிறது என்றும் பொருள் கொள்ளலாம்.