
சுபாஷிதம்…ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
66. இன் சொல் பேசு!
ஸ்லோகம்:
ப்ரியவாக்யப்ரதானேன சர்வே துஷ்யந்தி ஜந்தவ: |
தஸ்மாத் ததேவ தாதவ்யம் வசனே கா தரித்ரதா ||
— சாணக்கிய நீதி
பொருள்:
அன்பாக பேசினால் அனைவரும் மகிழ்வர். ஆகையால் இனிமையாகவே பேச வேண்டும். அதற்கு ஏதாவது செலவாகப் போகிறதா என்ன? பேச்சில் ஏன் தரித்திரம்?
விளக்கம்:
தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு என்றார் திருவள்ளுவர். பிறர் மனம் நோகாமல் இனிமையாகப் பேசுவது என்பது ஒரு கலை. மகிழ்ச்சியாக இருப்பவர்கள் கலை உணர்வோடு கூடிய எண்ணங்களைக் கொண்டிருப்பர். இனிய பேச்சு பேச வேண்டும் என்று கூறும் சுலோகம் இது.
பிறர் மனதை நோகச் செய்வது தவறு. சிறு குழந்தையானாலும் வளர்க்கும் பிராணியானாலும் புன்னகையோடு உரையாடினால் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதைப் பார்க்கலாம். விளையாட்டுக்காகக் கூட பிறரை கேலி செய்து மனதை துன்புறுத்தக் கூடாது.
சமுதாயத்தில் தனிமையில் வாழ்பவர்கள், முதியோர் இல்லத்தில் வசிப்பவர்கள் யாராவது உரையாட வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். இவர்களைச் சந்தித்து சற்று நேரம் அளவளாவி வரும் சமூக நலத் தொண்டர்கள் பாராட்டுக்குரியவர்கள்.
இனிமையாக, அன்பாகப் பேசுவதை பழக்கிக்கொள்ள வேண்டும். அவ்வாறு பேச இயலாமல் போவது கூட ஒரு தரித்திரமே! பிறருக்கு பணம் கொடுத்து திருப்தி படுத்துவதற்கு நம்மிடம் செல்வம் இல்லாமல் போகலாம். அன்பான சொற்களுக்கு கஞ்சத்தனம் ஏன்? நன்றாக இனிய சொற்களைப் பேசுவதால் என்ன நஷ்டம் வந்து விடும்?