
பிரதமர் மோடி டிச.18 அன்று காணொளி வாயிலாக ஆற்றிய உரையின் தமிழாக்கம்…
தமிழில்: ராமஸ்வாமி சுதர்ஸன்
நண்பர்களே, இன்று இங்கே இந்த நிகழ்ச்சியிலும் கூட, பல விவசாயப் பெருமக்களுக்கு, விவசாயப் பற்று அட்டை அளிக்கப்பட்டிருக்கின்றது. முன்பெல்லாம் இந்த கிஸான் க்ரெடிட் அட்டை, அனைத்து விவசாயிகளுக்கும் அளிக்கப்பட்டது கிடையாது.
எங்களுடைய அரசு தான், கிஸான் க்ரெடிட் அட்டை என்ற வசதியை, தேசத்தின் அனைத்து விவசாயிகளுக்கும் அளிக்கப்பட, அவர்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக சட்டவிதிகளிலுமே மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கின்றோம். இப்போது, விவசாயிகளுக்கு விவசாயம் தொடர்பான வேலைகளுக்காக, தேவையான முன்பணம், எளிதாகக் கிடைத்து வருகின்றது. இதனால் அவர்களுக்கு, மற்றவர்களிடமிருந்து, அதிக வட்டிக்குக் கடன் வாங்கும் கட்டாயத்திலிருந்தும் கூட, விடுதலை கிடைத்திருக்கின்றது.
நண்பர்களே, இன்று இந்த நிகழ்ச்சியிலே, சேமிப்புக் கிடங்குகள், குளிர்சாதனக் கிடங்குகள்….. அதாவது சேமிக்க உதவும் குளிர்சாதனக் கிடங்குகள், இவற்றோடு தொடர்புடைய கட்டமைப்பு வசதிகள், இன்னும்பிற வசதிகளின் அர்ப்பணிப்பு, மற்றும் அடிக்கல்நாட்டுதலும் நடந்திருக்கின்றன. ஒரு விஷயம் என்னவோம் உண்மை தான்…… அதாவது விவசாயி என்னதான் கடுமையாக உழைத்தாலும், இருந்தாலும் கூட, பழங்கள் காய்கறிகள் மற்றும் தானியங்கள், இவற்றை சேமிக்க கிடங்குகள் இல்லையென்றாலோ, சரியான முறையில் சேமிக்கவில்லை என்றாலோ, இதனால் மிகப்பெரிய இழப்பு மட்டுமே ஏற்படுகிறது. மேலும் இந்த இழப்பு, விவசாயிகளுக்கு மட்டும் ஏற்படுவதில்லை.
இந்த இழப்பு, இந்தியா முழுவதற்கும் உண்டாகின்றது. ஒரு அனுமானத்தின் படி, கிட்டத்தட்ட ஒரு இலட்சம் கோடி ரூபாய் பெறுமானமுள்ள பழங்கள் காய்கறிகள் மற்றும் தானியங்கள், ஒவ்வொரு ஆண்டும், இந்தக் காரணத்தால் நாசப்பட்டுப் போகின்றன. ஆனால், முன்பெல்லாம், இதை முன்னிட்டும் கூட, பெரிய அளவில் உதாசீன மனப்பான்மையே இருந்து வந்தது. இப்போது, எங்களுடைய முதன்மையான செயல்பாடு, சேமிப்ப்புக் கிடங்குகளின் புதிய மையங்கள், குளிர்சாதனச் சேமிப்புக்களின் நாடுதழுவிய வலைப்பின்னல், மேலும் இதோடு தொடர்புடைய அனைத்துக் கட்டமைப்பு வசதிகளையும், உருவாக்குவதே எங்களுடைய முதன்மையாக இருந்து வருகின்றது.
நான் நாட்டினுடைய, வியாபாரப் பெருமக்களிடத்திலும், தொழில்துறையினரிடத்திலும் வேண்டிக் கொள்ளுகின்றேன். சேமிப்புக் கிடங்குகளின் நவீன அமைப்புகளை ஏற்படுத்த வேண்டி, குளிர்சாதன அமைப்புகளை ஏற்படுத்த வேண்டி, உணவுப் பதனிடுதலுக்கான புதிய தொழில்களை ஏற்படுத்துவதில், நம்முடைய தேசத்தின், தொழில்துறை மற்றும் வியாபாரிகளும் உற்சாகத்தோடு முன்வர வேண்டும். எல்லாச் சுமையையும் விவசாயிகளின் தலைமேல் சுமத்துவது, இது எந்த அளவு சரியானது?? உங்கள் வருவாய் சற்றுக் குறைந்து போக நேரலாம். ஆனால், தேசத்தின் விவசாயிகளுக்கும், தேசத்தின் ஏழைகளுக்கும், தேசத்தின் கிராமங்களுக்கும் நன்மையே ஏற்படும்.
நண்பர்களே, பாரத நாட்டின் விவசாயம், பாரதநாட்டின் விவசாயிகள், இனி மேலும் பின் தங்கிய நிலையில் இருக்க முடியாது. உலகத்தின் மிகப்பெரிய நாடுகளின் விவசாயிகள் வசம், இந்த நவீன வசதிகள் வாய்த்திருக்கின்றன, இந்த வசதிகள், பாரதநாட்டின் விவசாயிகளுக்கும் கிடைக்க வேண்டும். இதிலே, இன்னும் அதிக காலதாமதம் செய்ய முடியாது. காலத்தால் நமக்காகக் காத்திருக்க முடியாது. விரைவாக மாறிக் கொண்டே இருக்கும் உலகப்பின்னணியில், பாரதநாட்டு விவசாயிகள், வசதிகள் பற்றாக்குறை காரணமாக, நவீன வசதிவாய்ப்புகள் இல்லாமை காரணமாக, நிர்கதியாக ஆகிக் கொண்டிருப்பதை!
இந்த நிலையை, நம்மால் ஏற்றுக் கொள்ளவே முடியாது. முன்பே அதிக காலம் கடந்து போய் விட்டது. இந்த வேலை, 25-30 ஆண்டுகள் முன்னமேயே செய்யப்பட்டிருக்க வேண்டும். அதை இன்றாவது செய்யக்கூடிய ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. கடந்த 7 ஆண்டுகளிலே, எங்களுடைய அரசாங்கம், விவசாயிகளின் ஒவ்வொரு தேவையையும் மனதிலே நன்கு வாங்கிக் கொண்டு, பல மகத்துவம்நிறைந்த முன்னெடுப்புக்களைச் செய்திருக்கின்றது. இந்தத் தருணத்திலே, தேசத்தின் விவசாயிகளுடைய, எந்தக் கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது என்றால், இவையெல்லாம் பல ஆண்டுகளாக, பல ஆண்டுகளாக, வெறுமனே பயனில்லாத, அலசல்கள் ஆய்வுகளே செய்யப்பட்டு வந்தன.
கடந்த பல நாட்களாகவே தேசத்திலே, விவசாயிகளின் பொருட்டு ஏற்படுத்தப்பட்டிருக்கும் சட்டங்கள் குறித்து, இப்போதெல்லாம் அதிகம் பேசப்பட்டு வருகின்றன. ஒரு விவசாயத்துறை சீர்திருத்தம், இந்தச் சட்டம், இரவோடு இரவாகக் கொண்டு வந்தது கிடையாது. கடந்த 20-25 ஆண்டுகளாக, இந்த தேசத்தின் அனைத்து அரசுகளும், மாநிலங்களின் அரசுகளும் கூட, இதன் மீது பரவலாக விவாதங்கள் செய்திருக்கின்றன. பல விவசாயக்கூட்டமைப்புகளும் இவைகுறித்துத் கருத்தளித்திருக்கின்றார்கள்.
தேசத்தின் விவசாயிகளும் பல விவசாயக் கூட்டமைப்புக்களும், விவசாய வல்லுனர்களும், விவசாய பொருளாதார வல்லுனர்கள், விவசாய விஞ்ஞானிகள், நம்முடைய நாட்டின் முன்னோடி விவசாயிகளும் கூட, தொடர்ச்சியாக, விவசாயத்துறை சீர்திருத்தக் கோரிக்கைகளை முன்வைத்து வந்திருக்கின்றார்கள்.
உண்மையைச் சொல்லப்போனால், தேசத்தின் கட்சிகள், இந்தச் சீர்திருத்தங்களை முன்பேகூட, தங்களுடைய, தேர்தல் அறிக்கைகளிலேயே, பதிவு செய்திருப்பவர்களிடம் முதலில் விளக்கம் கேட்டுப் பாருங்கள். வக்காலத்து வாங்கினார்களே! பெரிய பெரிய வாய்ப்பந்தல் எல்லாம் போட்டு, விவசாயிகளுடைய வாக்குகளை அறுவடை செய்தார்களே! ஆனால், தங்களுடைய தேர்தல் அறிக்கைகளில் அளித்த வாக்குறுதிகளைக் கூட அவர்கள் நிறைவேற்றவில்லை. வெறுமனே, இந்தக் கோரிக்கைகளைத் தள்ளிப் போட்டுக்கொண்டே வந்தார்கள். என்றைக்கும் விவசாயிகளுக்கு முதன்மையிடம் அளிக்கவேயில்லை.
ஆனால் தேசத்தின் விவசாயி, காத்திருந்து காத்திருந்து ஓய்ந்து போனார். இன்று நாம், தேசத்தின் அரசியல் கட்சிகளின் பழைய தேர்தல் அறிக்கைகளை ஒரு பார்வை பார்த்தோமேயானால், அவர்கள் பேசிய பேச்சுக்களைக் கேட்டோமென்றால், முன்னதாக தேசத்தின் விவசாயத் துறையை நிர்வாகம் செய்த பெரியவர்கள், எழுதிய கடிதங்களைப் படித்துப் பார்த்தோமென்றால், இன்று நாம் செய்திருக்கும் இந்த விவசாயத்துறைச் சீர்திருத்தம், அதிலிருந்து எள்ளளவும் மாறுபட்டதே இல்லை. அவர்கள் எவை பற்றிய வாக்குறுதிகளை அளித்தார்களோ, அதே விஷயங்கள் தாம், இந்த விவசாய சீர்திருத்தங்களில் செய்யப்பட்டிருக்கிறது.
எனக்கு என்ன தோன்றுகிறது என்றால், அவர்களுடைய வேதனையே, விவசாயச் சட்டங்களிலே, சீர்திருத்தங்கள் ஏன் செய்யப்பட்டன என்றெல்லாம் இல்லை. அவர்களுக்கு எதிலே கஷ்டநஷ்டம் தெரியுமா? எதைப் பற்றி நாம் பேசிக் கொண்டு மட்டும் வந்தோமோ செய்யவில்லையோ, இதை மோதி எப்படிச் செய்தார்? மோதி இதை ஏன் செய்தார்? மோதிக்கு இதனால் நல்லபெயர் எப்படி ஏற்படலாம்?
நான் அனைத்து அரசியல் கட்சிகளிடம் கைவணங்கிக் கேட்டுக் கொள்ளுகிறேன், எல்லா நல்லபெயரும் உங்களுக்கே உரித்தாகட்டும். எல்லா நற்பெயரையும் உங்களுடைய பழைய தேர்தல் அறிக்கைகளுக்கே அளித்து விடுகிறேன். எனக்கு இதற்கான பாராட்டு ஏதும் தேவையில்லை. நான் விரும்புவதெல்லாம் விவசாயியின் வாழ்க்கையில் எளிமை நிறைய வேண்டும், வளம் நிறைய வேண்டும். விவசாயத்தில் நவீனத்தன்மை வேண்டும். தயவு செய்து நீங்கள் தேசத்தின் விவசாயிகளை, திசைதிருப்புவதைக் கைவிடுங்கள். பொய்யுரைகள் பரப்புவதைக் கைவிடுங்கள்.
நண்பர்களே, இந்தச் சட்டங்கள் அமல்செய்யப்பட்டு, 6-7 மாதங்களுக்கும் அதிகமாக ஆகிவிட்டது. ஆனால் இப்போது திடீரென்று, பொய்யும் புரட்டும் கலந்த வலையை விரித்து, தங்களுடைய அரசியல் நிலத்தில் உழவு நடத்தும் விளையாட்டைத் தொடங்கி இருக்கிறார்கள். விவசாயிகளில் தோள்களிலே ஏறி, துப்பாக்கியைத் தாங்கி, தோட்டாக்களைச் சுட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
நீங்களே கூட கவனித்திருக்கலாம், அரசாங்கம் மீண்டும்மீண்டும் கேட்டுக் கொண்டே இருக்கின்றது, கூட்டங்களிலே கேட்கிறோம் பொதுவெளியில் கேட்கிறோம் நமது விவசாய அமைச்சர் டிவி நேர்முகத்திலே கேட்கிறார், நானே கூட சொல்லி வருகிறேன். சரி உங்களுக்குச் சட்டங்களிலே, எந்த ஷரத்திலே பிரச்சனை இருக்கிறது…. சொல்லுங்களேன்! உங்களுக்கு என்ன கஷ்டம் இருந்தாலும், தயவு செய்து சொல்லுங்கள். அப்போது இந்த அரசியல் கட்சிகளிடத்திலே, எந்த ஒரு பதிலும் இருப்பது கிடையாது. இது தான் இந்தக் கட்சிகளின் உண்மையான முகம் நண்பர்களே!!!
நண்பர்களே, யாருடைய அரசியல் களம் காலை விட்டு நழுவிப் போனதோ, அவர்களுக்கு, விவசாயிகளின் நிலம் கைநழுவிப் போய் விடும், விவசாயிகளின் நிலம் கைநழுவிப் போய்விடுமென்ற பயம் காட்டி, தங்களுக்கான அரசியல் நிலத்தைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
இன்று விவசாயிகளின் பெயரால், போராட்டம் என்று கிளம்பியிருக்கின்றார்களோ, அவர்கள் அரசு நடத்திய காலத்திலே, அல்லது அரசில் பங்குபெறும் வாய்ப்பு இருந்த போது, அந்த வேளையிலே, இவர்கள் எல்லாம் என்ன செய்தார்கள், இதை தேசம் நினைத்துப் பார்ப்பது மிகவும் அவசியமானது.
இன்று நான், நாட்டுமக்களின் முன்பாக, நாட்டின் விவசாயிகளின் முன்பாக, இந்த நபர்களின் உண்மையான சொரூபத்தை நாட்டுமக்களின் முன்பாக, எனது விவசாய சகோதரசகோதரிகள் முன்பாக, நான் வெட்டவெளிச்சமாக்க விரும்புகிறேன். நான் தெரிவிக்க விரும்புகிறேன்.
நண்பர்களே, விவசாயிகள் பற்றிப் பெரிய பேச்சு பேசும் நபர்கள், இன்று, முதலைக்கண்ணீர் விடும் நபர்கள், எத்தனை கருணையே இல்லாதவர்கள், என்பதற்கான உண்மையான சான்று எது தெரியுமா? ஸ்வாமிநாதன் குழுவின் அறிக்கை. ஸ்வாமிநாதன் குழுவின் அறிக்கை வந்தது.
ஆனால் இந்த நபர்கள், ஸ்வாமிநாதன் குழு அறிக்கையின் பரிந்துரைகளை, எட்டு ஆண்டுகள் வரை அடைகாத்துக் கொண்டிருந்தார்கள். விவசாயிகள் போராட்டங்களை அரங்கேற்றினார்கள். ஆர்பாட்டங்களை நடத்தினார்கள். ஆனால், இவர்களுடைய கல்நெஞ்சங்கள் கொஞ்சம் கூடக் கரையவேயில்லை. இந்த நபர்கள் தாம், ஒன்றை உறுதிப்படுத்திக் கொண்டார்கள், அதாவது இவர்களுடைய அரசாங்கம், விவசாயிகள் மீது அதிக செலவு செய்யாமல் இருக்க வேண்டும், ஆகையினாலே, இந்த அறிக்கையை ஆழத்தில் புதைத்து விடு. இவர்களுக்கெல்லாம், விவசாயிகள், தேசத்தின் பெருமிதங்கள் அல்லர்.
இவர்கள் தங்களுடைய அரசியல் இலாபத்திற்காக, தேவைப்படும் போதெல்லாம் விவசாயிகளைப் பயன்படுத்திக் கொண்டார்கள். ஆனால் மாறாக விவசாயிகளின் பொருட்டு, புரிந்துணர்வோடு கூடிய, விவசாயிகளிடம் அர்ப்பணிப்புடைய, எங்களுடைய அரசாங்கம், விவசாயிகளை உணவளிப்பவர்களாகப் பார்க்கிறது.
குப்பைகளாகப் குவித்துப்ப்போடப்பட்ட கோப்புகளுக்கு இடையிலிருந்து, ஸ்வாமிநாதன் குழுவின் அறிக்கையை நாங்கள் அகழ்வாய்வு செய்தோம். இதில் கூறப்பட்டிருந்த பரிந்துரைகளை அமல் படுத்தினோம். விவசாயிகளின் உள்ளீட்டு விலையின் ஒண்ணரைபங்கு mspயை, நாங்கள் அளித்தோம்.
நண்பர்களே, நமது தேசத்தின் விவசாயிகள் விஷயத்திலே, ஏமாற்றுவேலையின் ஒரு மிகப்பெரிய எடுத்துக்காட்டு, காங்கிரஸ் அரசுகள் வாயிலாக செய்யப்பட்ட, கடன் தள்ளுபடி. ஒரு இரண்டாண்டுகள் முன்பாக, மத்தியபிரதேசத்தில் தேர்தல்கள் நடைபெறவிருந்த வேளையிலே, கடன் தள்ளுபடி என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டது.
என்ன சொல்லப்பட்டது, அரசாங்கம் அமைக்கப்பட்ட பத்து நாட்களுக்கு உள்ளாக, அனைத்து விவசாயிகளின் கடன்களும் தள்ளுபடி செய்யப்படும். எத்தனை விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன? அரசாங்கம் அமைக்கப்பட்ட பிறகு, என்னென்ன சாக்குபோக்குகள் சொல்லப்பட்டன? இதை மத்தியபிரதேச விவசாயிகள், என்னைவிட சிறப்பாகவே நன்கறிவார்கள். இராஜஸ்தானைச் சேர்ந்த விவசாயிகளும் கூட, இன்று வரை, கடன் தள்ளுபடிக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
விவசாயிகளை இந்த அளவுக்கு ஏமாற்றியவர்கள் எல்லாம், விவசாயநலன் பற்றிப் பேசுவதைக் கேட்கும் போது, எனக்கு மிகப்பெரிய ஆச்சரியமே ஏற்படுகிறது. இவர்கள் எப்படிப்பட்டவர்கள்? அதாவது அரசியல், இத்தனை கீழ்த்தரமாகவா இருப்பது!!!! இந்த அளவுக்குத் தாழ்ந்தா, இவர்களால் வஞ்சனையும் சூதும் செய்ய முடியும்!!! அதுவும் யாரிடத்தில்? பாவம் அப்பாவியான விவசாயிகளின் பெயரிலா? விவசாயிகளை இன்னும் எத்தனை ஏமாற்றத் துடிக்கிறார்கள் இவர்கள்?

நண்பர்களே, ஒவ்வொரு தேர்தலுக்கும் முன்பாக, இந்த நபர்கள், கடன் தள்ளுபடி பற்றிப் பேசுவார்கள். சரி கடன் தள்ளுபடி எந்த அளவுக்கு இருக்கும்? அனைத்து விவசாயிகளும், இதிலே அடங்குவார்களா சொல்லுங்கள்? எந்தச் சிறிய விவசாயிகள், வங்கிகளின் வாயில்களையே பார்த்ததில்லையோ, யார் ஒருமுறை கூட கடன் வாங்கியதே இல்லையோ, அவர்களைப் பற்றியும் என்றாவது இவர்கள் சிந்தித்திருப்பார்களா?
மேலும், பழைய புதிய அனுபவங்கள் எல்லாம் என்ன தெரிவிக்கின்றன? அதாவது எத்தனை அறிவிப்பு இவர்கள் செய்கிறார்களோ, அந்த அளவுக்கு இவர்கள் கடன் தள்ளுபடி செய்வதே இல்லை. எத்தனை பணம் விவசாயிகளுக்கு அளிப்பதாகச் சொல்லுகிறார்களோ, அத்தனை பணம் விவசாயிகளிடத்தில் சென்று சேருவதே இல்லை. விவசாயிகள் நினைத்துக் கொண்டிருப்பார்கள், இப்போது கடன் முழுவதும் தள்ளுபடி ஆகுமென்று. ஆனால் மாறாக அவர்களுக்குக் கிடைப்பதெல்லாம், வங்கிகளிடமிருந்து நோட்டிஸ். மற்றும் கைதுக்கான வாரண்ட்.
மேலும், இந்தக் கடன் தள்ளுபடியால் அதிகபட்ச லாபம் யாருக்குக் கிடைத்தது? இவர்களுக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே. சொந்தபந்தங்களுக்கு மட்டுமே. ஊடகத்துறையைச் சேர்ந்த என்னுடைய நண்பர்கள், சற்று புலனாய்வு செய்தீர்களென்றால், இவை அனைத்தும், 8-10 ஆண்டுகள் முந்தைய அறிக்கைகளிலே, அவர்களுக்கு முழுமையான வகையிலே வெட்டவெளிச்சமாகத் தெரிந்து விடும். இதுதான் இவர்களுடைய வரலாறாக இருந்து வந்திருக்கிறது. விவசாயிகளின் அரசியலை வைத்துப் பிழைப்பு நடத்துபவர்கள், என்றைக்குமே இதற்காக, ஆர்பாட்டங்கள் செய்ததில்லை போராட்டங்கள் செய்ததில்லை.
சில பெரிய விவசாயிகளின் கடன்கள், பத்தாண்டுகளுக்கு ஒருமுறை, தள்ளுபடி செய்யப்படுகிறது, இவர்களுக்கு அரசியல் ஆதாயம் கிடைக்கிறது, வேலை முடிந்து விட்டது, எனும் போது ஏழை விவசாயிகள் பற்றி என்ன கவலை? வாக்குவங்கி அரசியல் செய்பவர்கள், இவர்கள் எல்லாம், இந்த நபர்கள் பற்றி, தேசம் நன்கு தெரிந்து கொண்டது இவர்களை தேசம் கவனித்து வருகிறது.
தேசம், எங்களுடைய நோக்கம் குறித்து, கங்கைஜலம், மற்றும் அன்னை நர்மதை ஜலம் போன்ற, புனிதத்தன்மையையும் கவனித்துக் கொண்டிருக்கிறது. இந்த நபர்கள் எல்லாம், பத்தாண்டுகளில் ஒருமுறை, கடன் தள்ளுபடி என்ற பெயரால், கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் கோடி ரூபாய்கள் கொடுத்ததாகச் சொல்லியிருக்கிறார்கள். பத்தாண்டுகளில் ஒருமுறை ஐம்பதாயிரம் கோடி ரூபாய்கள்.
எங்களுடைய அரசாங்கம், பிரதம மந்திரி விவசாயிகள் கௌரவ நிதியைத் தொடக்கிய போது, அதிலே ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகளுக்கு, கிட்டத்தட்ட, 75000 கோடி ரூபாய்கள் கிடைக்கும். அதாவது பத்தாண்டுகளிலே கிட்டத்தட்ட, ஏழரை இலட்சம் கோடி ரூபாய்கள். விவசாயிகளின் வங்கிக் கணக்குகளிலே நேரடிப் பரிமாற்றம். எங்கும் கசிவேதும் கிடையாது. யாருக்கும் எந்தக் கமிஷனும் கிடையாது. வெட்டுக் கொடுப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை.
நண்பர்களே, இப்போது நான் தேசத்தின் விவசாயிகளுக்கு ஒன்றை நினைவு படுத்துகிறேன். யூரியா விஷயம். நினைத்துப் பாருங்கள். 7-8 ஆண்டுகள் முன்பாக, யூரியா விஷயத்தில் என்ன நடந்தது? என்ன நிலை இருந்தது? இரவு முழுக்க கண்விழித்து விவசாயிகள், யூரியா வாங்க வரிசைகளில் நிற்க வேண்டி இருந்தது. இது நடந்தது இல்லையா? பல இடங்களிலே, யூரியா தொடர்பாக விவசாயிகள் மீது தடியடி சம்பவங்கள், பரவலான வகையிலே அரங்கேறிக் கொண்டிருந்தன.
யூரியா தொடர்பான கள்ளச்சந்தை அமோகமாக நடந்து கொண்டிருந்தது. நடந்ததா நடக்கவில்லையா? விவசாயிகளின் மகசூல், உரங்களின் பற்றாக்குறை காரணமாக, நாசமாகிப் போயின. ஆனால் இந்த நபர்களின் இதயத்தில், கொஞ்சம் கூட ஈரம் கசியவில்லை. இது விவசாயிகளுக்கு எதிரான அநீதி இல்லையா? அநியாயம் இல்லையா? எனக்கு இன்றைக்கு அதிர்ச்சி ஏற்படுகிறது, யார் காரணமாக இந்தச் சூழல் ஏற்பட்டிருக்கிறதோ, அவர்கள் இன்று, அரசியலின் பெயரால் விவசாயிகளை திசை திருப்பமுயன்று வருகிறார்கள்.
நண்பர்களே, யூரியா பிரச்சனைக்கு முன்னர் எந்த ஒரு தீர்வும் இல்லாமலா இருந்தது? விவசாயிகளின் துக்கங்கள் துயர்கள், அவர்களின் இடர்பாடுகளின் மீது, கொஞ்சமாவது இரக்கம் இருந்தால், இந்த யூரியா பிரச்சனை இருந்திருக்கவே இருந்திருக்காது. அனைத்துப் பிரச்சனைகளும் முடியும் வகையில், அப்படி என்ன செய்தோம் நாங்கள்? இன்று யூரியா தட்டுப்பாடு தொடர்பான செய்திகளேதும் வருவது இல்லை. யூரியாவுக்காக விவசாயிகள் தடியடிகளை வாங்க வேண்டி இருப்பது இல்லை.
நாங்கள் விவசாயிகளின் இந்தப் பிரச்சனைக்கு முடிவுகட்ட, முழுநேர்மையோடு பணியாற்றியிருக்கிறோம். நாங்கள் கள்ளச்சந்தையை ஒழித்தோம், கடுமையான நடவடிக்கைகளை எடுத்தோம். ஊழலின் கழுத்தில் கயிற்றை இறுக்கினோம். நாங்கள் ஒன்றை உறுதி செய்தோம், அதாவது யூரியா, விவசாயிகளின் நிலங்களுக்கு மட்டுமே செல்லும். இவர்களுடைய ஆட்சிக்காலத்திலே, மானியங்கள் விவசாயிகளின் பெயரிலே எழுதப்பட்டன.
ஆனால் இவற்றால் ஆதாயம், மற்றவர்களுக்குச் சென்று கொண்டிருந்தது. நாங்கள் ஊழலுடனான சேர்ந்திசைக்கு முடிவு கட்டினோம். நாங்கள் யூரியாவிலே நூறு சதவீதம் வேப்பெண்ணைப் பூச்சை ஏற்படுத்தினோம். தேசத்தின் பெரிய பெரிய உரத் தொழிற்சாலைகள், தொழில்நுட்பம் பழையனவானது என்ற பெயரால், மூடப்படவேண்டி வந்தன. அவற்றை நாங்கள் மீண்டும் இயங்கச் செய்து வருகிறோம். அடுத்த இன்னும் சில ஆண்டுகளிலே, யூபியின் கோரக்பூரிலே, பிஹாரின் பரௌனியிலே, ஜார்க்கண்டின் ஸிந்த்ரியிலே, உடிஷாவின் தால்சேரிலே, தெலங்கானாவின்….. ராமகுண்டத்திலே, அதிநவீன உரத்தொழிற்சாலைகள், தொடங்கப்பட்டுவிடும்.
50-60000 கோடி ரூபாய்கள், இந்தப் பணிக்காக மட்டுமே செலவு செய்யப்பட இருக்கின்றன. இந்த அதிநவீன உரத்தொழிற்சாலைகள், வேலைவாய்ப்புகளுக்கான புதிய சந்தர்ப்பங்களை உருவாக்கிக் கொடுக்கும். பாரதத்தை யூரியா உற்பத்தியில் தற்சார்பு உடையதாக ஆக்கும் பணியில், உதவிகரமாக இருக்கும். அயல்நாடுகளிலிருந்து யூரியாவை இறக்குமதி செய்வதன் காரணமாக, பாரதநாட்டின் ஆயிரக்கணக்கான ரூபாய்கள் செலவாகின்றன, அவற்றைக் குறைப்போம்.
நண்பர்களே, இந்த உரத்தொழிற்சாலைகளைத் தொடக்குவதற்கு, இந்த நபர்களுக்கு, முன்னர் யாருமே தடை போடவில்லையே!! யாரும் வேண்டாம் என்று தடுக்கவில்லையே!! யாரும் ஆலை வேண்டாம் என்று சொல்லவில்லையே!!
ஆனால், இந்த நோக்கமே இருக்கவில்லை. கொள்கையும் இருக்கவில்லை. விவசாயிகளின் மீது, சற்றும் அக்கறையும் இருக்கவில்லை. விவசாயிகளுக்கு பொய்யான வாக்குறுதிகள் அளிப்பவர்கள், ஆட்சிக்கு வந்து கொண்டிருக்கலாம், பொய் வாக்குறுதிகள் கொடுத்து வரலாம், நன்மைகளை விழுங்கிக் கொண்டிருக்கலாம், இதுவே இவர்களுடைய வேலையாக இருந்து வந்தது.
நண்பர்களே, முந்தைய அரசுகளுக்கு அக்கறை இருந்திருந்தால், நம் தேசத்திலே, நூற்றுக்கும் மேற்பட்ட நீர்பாசனத் திட்டங்கள், பல தசாப்தங்களாக தொங்கலில் விடப்பட்டிருக்காது. அணைகட்டுவது தொடங்கப்பட்டால், 25 ஆண்டுகளாக தொடர்ந்து கட்டப்பட்டுக் கொண்டிருக்கும். அணை கட்டப்பட்டுவிட்டால், கால்வாய்கள் கட்டப்பட்டிருக்காது. கால்வாய்கள் கட்டப்பட்டிருந்தால், இவற்றுக்கு இடையிலான இணைப்புகள் ஏற்பட்டிருக்காது.
மேலும் இதிலுமே கூட, காலம் மற்றும் பணம், இரண்டுமே பெரிய அளவில் விரயம் செய்யப்பட்டன. இப்போது எங்களுடைய அரசாங்கம், ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் செலவு செய்து, இந்த நீர்ப்பாசனத் திட்டங்களை, நிறைவேற்றியாக வேண்டும் என்று தீவிரமாகப் பணியாற்றி வருகிறது. ஏனென்றால், விவசாயிகளின் ஒவ்வொரு வயலிலும், நீரைக் கொண்டு சேர்க்கும் எங்களுடைய ஆசை நிறைவேற வேண்டும்.
நண்பர்களே, விவசாயிகளின் உள்ளீட்டுச் செலவினம் குறைய வேண்டும், செலவினம் குறைய வேண்டும், விவசாயத்தில் செய்யப்படும் செலவினம் குறைய வேண்டுமென்பதற்காகவும், அரசாங்கம் தொடர் முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றது. விவசாயிகளுக்கு, சூரியசக்தி பம்புகளை, மிகக்குறைவான விலையிலே அளிக்க வேண்டுமென நாடெங்கிலும், மிகப்பெரிய இயக்கம் முடுக்கி விடப்பட்டிருக்கிறது. நாங்கள் நமக்கெல்லாம் உணவளிப்பவர்களை, ஆற்றல் அளிப்பவர்களாகவும் ஆக்க முனைந்து வருகிறோம்.
இவற்றைத் தவிர, எங்களுடைய அரசாங்கம், தானியங்களை விளைவிக்கும் விவசாயிகளுடன் கூடவே, தேனீ வளர்ப்பு, கால்நடைகள் வளர்ப்பு, மேலும் மீன்வளர்ப்புக்கும் கூட அதே அளவு முக்கியத்துவம் அளித்து வருகிறது. முந்தைய அரசுகளின் காலத்திலே நாட்டிலே, தேனுடைய உற்பத்தி, சுமாராக, எழுபத்தி ஆறு மெட்ரிக் டன்கள் seventy six metric tonnesஆக இருந்தது. இப்போது தேசத்திலே, ஒரு இலட்சத்து இருபதாயிரம் மெட்ரிக் டன்களுக்கும் அதிகமாக, தேன்…. ஹனி உற்பத்தி நடைபெற்று வருகிறது. ஒரு இலட்சத்து இருபதினாயிரம் மெட்ரிக் டன்கள். தேசத்தின் விவசாயிகள், எத்தனை தேனை, ஹனியை, முந்தைய அரசுகளின் போது ஏற்றுமதி செய்து வந்தார்களோ, இன்று அதைவிட, இரண்டு மடங்கு அதிகம் தேனை ஏற்றுமதி செய்து வருகின்றார்கள்.
நண்பர்களே, வல்லுனர்கள் கூறுகின்றார்கள், விவசாயத்துறையிலே, மீன்வளர்ப்பு எப்படிப்பட்ட துறையென்றால், இதிலே குறைவான முதலீட்டிலே, மிக அதிக அளவிலான இலாபம் கிடைக்கக்கூடியது. மீன்வளர்ப்புக்கு ஊக்கமளிக்க வேண்டி, எங்களுடைய அரசாங்கம், நீலப்புரட்சித் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. சில காலம் முன்பாக, 20000 கோடி ரூபாய்கள் பெறுமானமுள்ள பிரதம மந்திரி மீன்வளத் திட்டம், தொடங்கப்பட்டது.
இந்த முயற்சிகளின் பலனாகவே, தேசத்தின் மீன்வள உற்பத்தியானது, கடந்தகால சாதனைகள் அனைத்தையும் முறியடித்து விட்டது. இப்போது தேசம், அடுத்த 3-4 ஆண்டுகளிலே, மீன்கள் ஏற்றுமதியில், ஒரு இலட்சம் கோடிகளுக்கும் அதிக அளவு என்ற இலக்கை நோக்கிப் பணியாற்றி வருகிறது.
சகோதர சகோதரிகளே, எங்களுடைய அரசானது, மேற்கொண்ட முன்னெடுப்புகள், நம்முடைய மாநில அரசுகள் மேற்கொண்ட முன்னெடுப்புகள், நீங்களே கவனிக்கிறீர்கள் மத்திய பிரதேசத்தில் எந்த வகையிலே, விவசாயிகள் நலன்கள் குறித்துப் பணிகள் நடக்கின்றன என்பதை.
இவை முழுமையான வகையிலே, விவசாயிகளுக்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது. நான் முன்னெடுப்புகள் அனைத்தையும் பட்டியலிட்டேன் என்றால், ஒருவேளை, நேரம் போதாமல் போய்விடும்.
ஆனால், நான் சில எடுத்துக்காட்டுகளை ஏன் அளித்தேன் என்றால், இதனால் நீங்கள், எங்கள் அரசின் நோக்கத்தை உரைகல்லில் உரைத்துப் பார்த்துக் கொள்ளலாம். எங்களின் கடந்தகால செயல்பாட்டைத் தெரிந்து கொள்ளலாம். எங்களுடைய நேர்மையான நோக்கங்களைப் புரிந்து கொள்ளலாம். மேலும் இதே அடிப்படையிலே, நான் நம்பிக்கையோடு கூறுகிறேன், நாங்கள் தற்போது செய்திருக்கும் விவசாயச் சீர்திருத்தங்கள், இவற்றிலே, நம்பிக்கையின்மைக்கான காரணமே கிடையாது.
பொய்மைக்கு அங்கே இடமே கிடையாது. நான் இப்போது உங்களிடத்திலே, விவசாயச் சீர்திருத்தங்கள் பற்றி, கூறப்பட்டுவரும், மிகப்பெரிய பொய் பற்றிப் பேச இருக்கிறேன். மீண்டும்மீண்டும் இந்தப் பொய் பேசப்பட்டு வருகிறது உரத்த குரலில் பேசப்படுகிறது, வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் பேசப்பட்டு வருகிறது. இட்டுக்கட்டிப் பேசப்படுகிறது. நான் முன்னமேயே கூறியபடி, ஸ்வாமிநாதன் குழுவின் அறிக்கையை அமல் செய்யும் பணியை, எங்களுடைய அரசு தான் செய்தது. சரி நாங்கள், இந்த mspயை அகற்ற வேண்டியிருந்தால், ஸ்வாமிந்தாதன் குழுவின் அறிக்கையை நாங்கள் ஏன் அமல் செய்யவேண்டும் சொல்லுங்கள்?
அவர்களும் செய்யவில்லை நாங்களும் விட்டிருக்கலாமே!! நாங்கள் அப்படிச் செய்யவில்லை நாங்கள் அமல் செய்தோமே!! இரண்டாவதாக எங்களுடைய அரசாங்கம், இந்த msp விஷயத்தில் முனைப்பாக இருக்கிறது, அதாவது ஒவ்வொரு முறையும், நடவுக்கு முன்பாக, msp பற்றிய அறிவிப்பை வெளியிடுகிறது. இதனால் விவசாயிக்கும் கூட, எளிமையாக இருக்கிறது, அவர்களுக்கும் முன்கூட்டியே தெரிந்து விடுகிறது, அதாவது இந்த அறுவடைக்கு இந்த அளவு msp கிடைக்கும் என்று. அவர் மாற்றம் ஏதும் செய்ய விரும்பினால்…. அவருக்கு வசதியாக இருக்கிறது.
நண்பர்களே, ஆறு மாதங்களுக்கும் அதிகமான காலம் ஆகி விட்டது, இந்தச் சட்டம் அமல் செய்யப்பட்டு இந்தச் சட்டம் அமலாகி விட்டது 6 மாதங்கள் முன்பே ஆகி விட்டது. சட்ட,ம் இயற்றப்பட்ட பிறகு கூட, அப்போதும் கூட, msp பற்றி அறிவிப்பு செய்யப்பட்டது, முன்பு செய்யப்பட்டதைப் போலவே. கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தின் போதும் கூட, இந்த வேலை முன்பைப் போலவே செய்யப்பட்டது.
Msp படியே கொள்முதலும், அதே மண்டிகளில் நடந்தன, எங்கே சட்டமியற்றும் முன்னர் நடந்ததோ அங்கேயே சட்டமியற்றிய பின்னரும் நடந்தது. அப்படியே சட்டமியற்றிய பிறகும், msp பற்றி அறிவிப்பு வெளியானது, msp விலைக்கே கொள்முதல் செய்யப்பட்டது, அதே மண்டிகளில் இது நடந்தது, என்றால் புரிதல் உடைய யாராவது, msp நிறுத்தப்படும் என்பதை, ஏற்றுக் கொள்வாரா சொல்லுங்கள்?
ஆகையினால் தான், நான் கூறுவதெல்லாம், இவர்களின் புரட்டை விடப் பெரிய புரட்டு வேறேதும் இருக்க முடியாது. இதைவிடப் பெரிய சதி வேறேதும் இருக்க முடியாது. ஆகையினால், நான் தேசத்தின் ஒவ்வொரு விவசாயிடத்திலும், ஒரு நம்பிக்கையை அளிக்க விரும்புகிறேன், முன்பு எந்த வகையில் msp அளிக்கப்பட்டு வந்ததோ, அப்படியே தொடர்ந்து அளிக்கப்பட்டு வரும். Msp நிறுத்தப்படவும் மாட்டாது, அது முடிவுக்கும் வராது.
நண்பர்களே, நான் இப்போது அளிக்கவிருக்கும் புள்ளிவிவரங்கள், அது உண்மைகள் என்ன, பொய் புரட்டுகள் என்ன என்பதைத் துலக்கிக் காட்டும். கடந்த ஆட்சிக் காலத்திலே, கோதுமைக்கு, க்விண்டல் ஒன்றுக்கு 1400 ரூபாய்கள் msp. எங்களுடைய அரசாங்கம் கோதுமையின் தலா ஒரு க்விண்டலுக்கு, 1975 ரூபாய்கள் msp அளித்து வருகிறது. கடந்த ஆட்சியில் நெல்லுக்கான msp, தலா ஒரு க்விண்டலுக்கு 1310 ரூபாய்கள். எங்களுடைய அரசு பிரதி க்விண்டல் நெல்லுக்கு சுமார், 1870 ரூபாய்கள் msp அளித்து வருகிறது.
கடந்த ஆட்சிக்காலத்திலே, சோளத்தின் மீதான msp, 1520 ரூபாய்கள் தலா ஒரு க்விண்டலுக்கு. எங்களுடைய அரசாங்கம் சோளத்தின் ஒரு க்விண்டலுக்கு, 2640 ரூபாய்கள் msp அளிக்கின்றது. கடந்த ஆட்சிக் காலத்திலே, மசூர் தாலுக்கு, msp 2950 ரூபாய்களாக இருந்தது.
எங்களுடைய அரசாங்கம்….. தலா ஒரு க்விண்டலுக்கு, மசூர் தாலுக்கு 5100 ரூபாய்கள் msp அளித்து வருகின்றது. கடந்த ஆட்சிக்காலத்திலே, கொண்டைக்கடலைக்கு இருந்த, msp 3100 ரூபாய்கள். எங்கள் ஆட்சியிலே கொண்டைக்கடலை தலா ஒரு க்விண்டலுக்கு, 5100 ரூபாய்கள் msp அளிக்கின்றது. கடந்த ஆட்சிக்காலத்திலே, துவரம்பருப்புக்கு இருந்த msp, 4300 ரூபாய்கள் என தலா ஒரு க்விண்டலுக்கு.
எங்கள் ஆட்சியிலே, துவரம்பருப்பு தலா ஒரு க்விண்டலுக்கு 6000 ரூபாய்கள் msp அளித்து வருகின்றது. கடந்த ஆட்சிக்காலத்திலே, பாசிப்பருப்புக்கு இருந்த msp, 4500 ரூபாய்கள் தலா ஒரு க்விண்டலுக்கு. எங்கள் ஆட்சியிலே பாசிப்பருப்புக்கு, சுமார் 7200 ரூபாய்கள், 7200 …… ரூபாய்கள் msp அளித்து வருகிறோம்.
நண்பர்களே, இவை எதற்கு அத்தாட்சி என்றால், அதாவது எங்களுடைய அரசாங்கம், mspயை, அளிப்பதில் காலத்திற்கு ஏற்ற வகையிலே எப்படி கவனம் செலுத்துகிறது என்பதை. எத்தனை முனைப்பாக இருக்கிறது என்பதை. mspயை அதிகரிப்பதன் கூடவே, அரசின் அழுத்தம், இன்னொன்றின் மீதும் இருந்து வந்திருக்கிறது.
அதாவது அதிகபட்ச நெல்லின் கொள்முதல், mspயிலேயே செய்யப்பட வேண்டும். கடந்த அரசாங்கத்தின் கடைசி ஐந்தாண்டுகளிலே, விவசாயிகளிடமிருந்து கிட்டத்தட்ட, 1700 இலட்சம் மெட்ரிக் டன் நெல்லினைக் கொள்முதல் செய்தது. புள்ளிவிவரங்களை மறந்து விடாதீர்கள். எங்களுடைய அரசானது கடந்த ஐந்தாண்டுகளிலே, 3000 இலட்சம் மெட்ரிக் டன் நெல்லினை mspக்கு விவசாயிகளிடமிருந்து வாங்கியது கிட்டத்தட்ட இரண்டு மடங்கு. கடந்த அரசாங்கம் தனது ஐந்தாண்டுகளிலே, சுமார் மூணேமுக்கால் இலட்சம் மெட்ரிக் டன்கள் எண்ணை வித்துக்களை வாங்கியது. எங்களுடைய அரசானது, தனது ஐந்தாண்டுகளிலே, 56 இலட்சம் இலட்சம் மெட்ரிக் டன்களுக்கும் அதிகமாக mspயில் வாங்கியது.
நீங்களே கணக்கிட்டுப் பாருங்கள்!! மூணேமுக்கால் இலட்சம் டன்களெங்கே!! எங்கே 56 இலட்சம் மெட்ரிக் டன்கள்? அதாவது, எங்களுடைய அரசாங்கமானது mspயை மட்டும், mspயை மட்டும் அதிகரிக்கவில்லை, மாறாக, அதிகமாக விவசாயிகளிடமிருந்து mspயிலே அவர்களுடைய மகசூலைக் கொள்முதலும் செய்திருக்கிறது.
இதனால் அதிகபட்ச ஆதாயம் என்ன ஆகியிருக்கிறது என்றால், விவசாயிகளின் கணக்குகளிலே, முந்தைய காலத்தோடு ஒப்பிடுகையில், கணிசமாக அதிகப் பணம் சென்று சேர்ந்திருக்கிறது. கடந்த ஆட்சியின் ஐந்தாண்டுகளிலே, விவசாயிகளிடமிருந்து, நெல்லையும் கோதுமையையும் mspயிலே வாங்கியதன் காரணமாக, 3 இலட்சத்து 74 ஆயிரம் கோடி ரூபாய்களே கிடைத்தன. எங்களுடைய அரசாங்கம் இதே அளவு ஆண்டுகளில், கோதுமை மற்றும் நெல் பயிரிடும் விவசாயிகளுக்கு, 8 இலட்சம் கோடி ரூபாய்களுக்கும் அதிக பணத்தை அளித்திருக்கிறது.
நண்பர்களே, அரசியல் ஆதாயங்களுக்காக விவசாயிகளைப் பயன்படுத்தும் நபர்கள், விவசாயிகளை எப்படி நடத்தினார்கள், இதற்கான மேலும் ஒரு எடுத்துக்காட்டு உள்ளது. பருப்புவகைப் பயிர்கள். 2014ஆம் ஆண்டினை சற்றே நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்!! தேசத்திலே எந்த அளவிற்கு பருப்புகளின் பற்றாக்குறை நிலவி வந்தது!! தேசத்திலே, எழுந்த எதிர்ப்புகளுக்கு இடையே, பருப்புகள், அயல்நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டன.
ஒவ்வொரு சமையலறையின் செலவும், பருப்புகளின் விலையேற்றத்துடன் ஏறத் தொடங்கின. எந்த நாட்டிலே, உலகிலேயே அதிக அளவு பருப்புவகைகள் உட்கொள்ளப்படுகின்றனவோ, அந்த தேசத்திலே, பருப்புவகைகளை சாகுபடி செய்யும் விவசாயிகளை, அழித்தொழிப்பதில், இந்த நபர்கள் எந்த முயற்சியையும் விட்டு வைக்கவில்லை.
விவசாயிகள் சங்கடத்தில் இருந்தார்கள், ஆனால் அவர்களோ, கும்மாளமிட்டுக் கொண்டிருந்தார்கள். மற்ற நாடுகளிடமிருந்து பருப்புவகைகளை வாங்குவதில் தான், அவர்களுக்கு சந்தோஷமாக இருந்தது. ஒரு விஷயத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன். சில சமயங்களில், சில வேளைகளில் இயற்கைப் பேரிடர்கள் ஏற்படலாம், திடீரென்று ஒரு சங்கடம் ஏற்படலாம், வெளிநாடுகளிலிருந்து பருப்புகளை, வாங்கவும் செய்யலாம். தேசத்தின் குடிமக்களை பட்டினி கிடக்க விடமுடியாது. ஆனால், எப்போதும் இப்படியே ஏன் நடக்க வேண்டும்?
நண்பர்களே, இந்த நபர்கள், பருப்புவகைகளில் அதிக mspயையும் அளித்ததில்லை. மேலும், அதைக் கொள்முதலும் செய்ய மாட்டார்கள். நிலைமை என்னவென்றால், 2014ற்கு முந்தைய ஐந்தாண்டுகள் அவர்கள் ஆட்சியின் ஐந்தாண்டுகளில், அவர்கள், வெறும், ஒண்ணரை இலட்சம் மெட்ரிக் டன்கள் அளவுக்கே விவசாயிகளிடமிருந்து வாங்கினார்கள். ஒண்ணரை இலட்சம் மெட்ரிக் டன்கள் புள்ளிவிவரத்தை நினைவில் கொள்ளுங்கள் சகோதர சகோதரிகளே.
வெறும் ஒண்ணரை இலட்சம் மெட்ரிக் டன்கள் பருப்புவகைகளே வாங்கினார்கள். ஆனால் 2014இலே எங்களுடைய அரசு அமைக்கப்பட்ட போது, நாங்கள் கொள்கைகளையும் மாற்றினோம், பெரிய தீர்மானங்களையும் மேற்கொண்டோம். நாங்கள் விவசாயிகளைப் பருப்புவகைகள் பயிர் செய்ய ஊக்கமளித்தோம். சகோதர சகோதரிகளே, எங்களுடைய அரசாங்கம் விவசாயிகளிடமிருந்து, முன்னதோடு ஒப்பிடுகையில், 112 இலட்சம் மெட்ரிக் டன்கள், நான் மீண்டும் கூறுகிறேன், 112 இலட்சம் மெட்ரிக் டன் பருப்பு வகைகளை, mspயிலே வாங்கினோம்.
சிந்தியுங்கள்!!! அவர்கள் ஆட்சிக்காலத்திலே ஒண்ணரை இலட்சம் டன்கள். அங்கிருந்து எங்கே சென்றோம்? 112 இலட்சம் மெட்ரிக் டன்கள். அந்த நபர்கள் தங்களுடைய ஐந்தாண்டுகளிலே, பருப்புசாகுபடி, விவசாயிகளுக்கு, பருப்புவகை பயிர் செய்யும் விவசாயிகளுக்கு, எத்தனை பணம் அளித்தார்கள்? 650 கோடி ரூபாய்கள். எங்களுடைய அரசாங்கம் என்ன செய்தது? நாங்கள் கிட்டத்தட்ட, 50000 கோடி ரூபாய்களை, பருப்புவகை சாகுபடியாளர்களுக்கு அளித்தோம். 600 கோடி ரூபாய்கள் எங்கே… 50000 கோடி ரூபாய்கள் எங்கே? இன்று பருப்புவகை சாகுபடியாளர்களும் கூட, அதிக பணம் கிடைத்து வருகிறது, பருப்புகளின் விலைகளும் குறைந்திருக்கின்றன, இதனால் ஏழைகளுக்கு நேரடி ஆதாயம் ஏற்பட்டிருக்கிறது.
எந்த நபர்களால், விவசாயிகளுக்கு msp அளிக்க முடியவில்லையோ, மேலும் msp விலைக்கு முறையாக வாங்க முடியவில்லையோ, அவர்கள் msp விஷயத்தில் விவசாயிகளுக்குத் தவறான பாதையைக் காட்டுகின்றார்கள்.
நண்பர்களே, விவசாயச் சீர்திருத்தங்களோடு தொடர்புடைய மேலும் ஒரு, பொய்யுரை பரப்பப்பட்டு வருகின்றது. Apmc அதாவது நமது மண்டிகள் தொடர்பாக. நாங்கள் சட்டத்தில் என்ன செய்திருக்கிறோம்? நாங்கள் சட்டத்திலே, விவசாயிகளுக்கு சுதந்திரம் அளித்திருக்கிறோம். புதிய தேர்வினை அளித்திருக்கிறோம். தேசத்திலே யாராவது சோப்பினை, விற்க விரும்பினார் என்றால், இந்தக் கடையில் தான் விற்க வேண்டும், என்று அரசாங்கம் தீர்மானம் செய்வதில்லை. இப்போது ஒருவர் ஸ்கூட்டர் விற்க விரும்பினால், இந்த டீலரிடம் தான் விற்க வேண்டும், என்று அரசாங்கம் தீர்மானம் செய்வதில்லை.
ஆனால், கடந்த 70 ஆண்டுக்காலமாக, அரசாங்கங்கள், விவசாயிகளிடம் தீர்மானமாகச் சொல்லுகின்றன, அதாவது நீங்கள், இந்த மண்டியில் தான் உங்கள் தானியங்களை விற்க முடியுமென்று. மண்டியை விடுத்து விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விரும்பினாலும் கூட வேறு எங்கும் விற்க முடியாது.
புதிய சட்டத்திலே நாங்கள் ஒன்றை மட்டுமே கூறியிருக்கிறோம், அதாவது விவசாயிகள், அவர்களுக்கு இலாபகரமாக இருக்குமானால், முன்பைப் போலவே மண்டியில் சென்று விற்கலாம். ஆனால் வெளியே அவருக்கு ஆதாயமாக இருந்தால், மண்டிக்கு வெளியே விற்க அவருக்கு அதிகாரம் அளிக்கப்பட வேண்டும். அவர் விரும்பியவாறு, இந்த ஜனநாயகத்திலே எனது விவசாய சகோதரனுக்கு செயல்பட உரிமை கிடையாதா? இப்போது விவசாயிக்கு, எங்கே இலாபம் கிடைக்குமோ, அங்கே சென்று அவர் விற்றுக் கொள்ளலாம். மண்டியும் இருக்கும், மண்டிக்கு வெளியேயும் அவர் பொருட்களை விற்கலாம். முன்பு இருந்தது மாதிரியே, அப்படியும் அவர் செய்து கொள்ளலாம். விவசாயி அவர் இஷ்டப்படி செய்வார்.
ஆனால், புதிய சட்டத்திற்குப் பிறகு, விவசாயி தனக்கு ஆதாயம் எனத் தெரிந்து கொண்டு, தனது விளைபொருட்களை விற்கவும் தொடங்கி விட்டார். இப்போது தான், ஒரு இடத்திலே, நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் இணைந்து, ஒரு அரிசி நிறுவனத்தோடு ஒப்பந்தம் போட்டுக் கொண்டார்கள். இதனால் அவர்களுடைய வருவாய், 20 சதவீதம் அதிகரித்திருக்கிறது. மேலும் வேறு ஒரு இடத்திலே, உருளை சாகுபடியாளர் ஆயிரம் பேர்கள் இணைந்து, ஒரு நிறுவனத்தோடு ஒப்பந்தம் போட்டுக் கொண்டார்கள். இந்த நிறுவனமானது, விலையிலே 35 சதவீதம் அதிகம் அளிக்கும் உத்திரவாதம் அளித்தது. வேறு ஒரு இடம் பற்றிய செய்தியைப் படித்துக் கொண்டிருந்தேன்.
அங்கே ஒரு விவசாயி தனது வயலில் நட்டிருந்த மிளகாய் மற்றும் வாழையை, நேரடியாக சந்தையில் விற்ற போது அவருக்கு முன்பைவிட இரட்டிப்புப்பணம் கிடைத்தது. இப்போது நீங்களே சொல்லுங்கள்! தேசத்தின் ஒவ்வொரு விவசாயிக்கும் இப்படிப்பட்ட இலாபம், இந்த அதிகாரம், கிடைக்க வேண்டுமா கிடைக்கக்கூடாதா? விவசாயிகளை வெறுமனே, மண்டிகளோடு பிணைத்து, கடந்த தசாப்தங்களிலே செய்யப்பட்ட பாவச்செயலுக்கு, இந்த விவசாயச் சீர்திருத்தம், அதற்கான கழுவாயைத் தேடியளித்திருக்கிறது.
நான் மீண்டும் இதை உரைக்கின்றேன். புதிய சட்டத்திற்குப் பிறகு……. புதிய சட்டங்கள் அமலுக்கு வந்து 6 மாதங்கள் ஆகி விட்டன. இந்தியாவின் எந்த ஒரு மூலையிலும் எந்த இடத்திலும், ஒரு மண்டி கூட இழுத்து மூடப்படவில்லை. பிறகு ஏன் பொய்களைப் பரப்புகின்றார்கள்?
உண்மை என்னவென்றால், எங்களுடைய அரசாங்கம், apmcயை நவீனப்படுத்தும் வகையிலே, அவற்றைக் கணினிமயமாக்கலில், 500 கோடிக்கும் அதிகமான தொகையை செலவு செய்து வருகிறது. பிறகு இந்த apmcயை மூடும் விஷயம் எங்கிருந்து வந்து குதித்தது? எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல், பொய்களை அவிழ்த்து விடு, மீண்டும் மீண்டும் சொல்லு.
நண்பர்களே, புதிய விவசாய சீர்திருத்தங்கள் தொடர்பாக, மூன்றாவது மிகப்பெரிய பொய் பரப்பப்படுகிறது. ஒப்பந்த விவசாயம் தொடர்பாக. தேசத்திலே, ஒப்பந்த விவசாயம் என்பது புதிய விஷயமே அல்ல. ஏதோ ஒரு புதிய சட்டமியற்றி, நாங்கள் திடீரென்று, ஒப்பந்த விவசாயத்தை அமல் செய்கிறோமா? இல்லவே இல்லை.
நம்முடைய தேசத்திலே, பல ஆண்டுகளாக, ஒப்பந்த விவசாய முறை நடைபெற்று வருகின்றது. ஒன்றிரண்டு அல்ல, அநேக மாநிலங்களில் பல ஆண்டுகளாக ஒப்பந்த விவசாயம், செய்யப்பட்டு வருகின்றது. இப்போது தான் ஒருவர் ஒரு செய்தித்தாள் கட்டுரையை அனுப்பியிருந்தார். மார்ச் மாதம் 8 2019ஆம் ஆண்டு.
அதிலே, பஞ்சாபிலிருக்கும் காங்கிரஸ் அரசு, விவசாயிகள் மற்றும் ஒரு பன்னாட்டு நிறுவனத்திற்கு இடையே, 800 கோடி ரூபாய்களுக்கான…. ஒப்பந்த விவசாயத்துக்கான, கொண்டாட்டத்தில் திளைக்கிறது. இதை வரவேற்கின்றது. பஞ்சபின் என்னுடைய விவசாய சகோதர சகோதரிகளின் விவசாயத்திலே, அதிகப்படியான முதலீடுகள் செய்யப்பட வேண்டும், இது எங்களுடைய அரசுக்குமே கூட, சந்தோஷம் அளிக்கும் விஷயம் தான்.
நண்பர்களே, தேசத்திலே ஒப்பந்த விவசாயத்தோடு தொடர்புடைய, என்ன வகையான வழிமுறைகள் இருந்து வந்தனவோ, அதிலே விவசாயிகளுக்கு பெரும் அபாயங்கள் இருந்தன. அதிக ரிஸ்க் இருந்தது. புதிய சட்டத்திலே எங்களுடைய அரசாங்கம், ஒப்பந்த விவசாயத்துக்கு உட்பட்டு, விவசாயிக்கு பாதுகாப்பளிக்க, சட்டபூர்வமான ஷரத்துக்களை இயற்றியிருக்கிறது.
நாங்கள் என்ன தீர்மானம் செய்தோமென்றால், ஒப்பந்த விவசாயத்திலே, மிகப்பெரிய நன்மை, என்று பார்த்தோமேயானால், அது விவசாயிகளுக்கே என்று கொள்ளப்படும். நாங்கள் சட்டப்பூர்வமாகத் தீர்மானம் செய்தோம், அதாவது விவசாயியோடு ஒப்பந்தம் செய்து கொள்பவர், தன்னுடைய பொறுப்புகளிலிருந்து தப்பியோட முடியாது.
விவசாயிக்கு அவர், என்ன வாக்குறுதி அளித்திருந்தாரோ, அதை ஸ்பான்ஸர் செய்யும் அதில் சம்பந்தப்பட்டவரும், அதை நிறைவேற்றியே தீர வேண்டும். இப்போது புதிய விவசாய சட்டங்கள் அமலுக்கு வந்த பிறகு, ஏகப்பட்ட எடுத்துக்காட்டுகள் வெளிச்சத்துக்கு வருகின்றன, அங்கே விவசாயிகள், தங்கள் பகுதியில் இருக்கும் sdmஇடம் முறையிட்டிருக்கிறார்கள், முறையீடு பெறப்பட்ட சில நாட்களுக்கு உள்ளாகவே, விவசாயிகளுக்கு வாக்களிக்கப்பட்டது கிடைத்து விட்டது.
நண்பர்களே, ஒப்பந்த விவசாயத்திலே, வெறும் பயிர்களோ, அல்லது மகசூல் பற்றிய ஒப்பந்தமாகவே இருக்கிறது. நிலம் விவசாயிகளிடம் மட்டுமே இருக்கிறது. ஒப்பந்தத்துக்கும் நிலத்துக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.
இயற்கை…. பேரிடர்கள் நேரிட்டால், அப்போதும் கூட, ஒப்பந்தத்துக்கு உட்பட்டு, விவசாயிக்கு மொத்த பணமும் கிடைக்கிறது. புதிய சட்டங்களின்படி, இப்போது திடீரென்று, அதாவது ஒப்பந்தம் தீர்மானித்த வகையிலே.
ஆனால்… யார் ஸ்பான்ஸர் செய்கிறார்களோ சம்பந்தப்பட்டவர்களோ முதலீடு செய்கிறார்களோ, திடீரென்று இலாபம் அதிகப்பட்டால், விவசாயிகளுடனான ஒப்பந்தத்தில் குறைவான பணம் ஆனால் இலாபம் அதிகரித்தது. அப்போது இந்தச் சட்டத்தின் ஷரத்துப்படி, அதிகரித்திருக்கும் இலாபத்திலும், விவசாயிக்கு ஒரு பங்கினை அளித்தாக வேண்டும்.
நண்பர்களே, ஒப்பந்தம் செய்வதா செய்ய வேண்டாமா, இது ஒன்றும் கட்டாயமானது கிடையாது. இது விவசாயி தன்னிச்சையாகச் செய்து கொள்வது. விவசாயி விரும்பினால் செய்வார் விரும்பவில்லையென்றால் செய்ய மாட்டார். ஆனால், யாரும் நமது விவசாயியை., ஏமாற்றி விடக்கூடாது, விவசாயியின் அறியாத்தனத்தைத் பயன்படுத்தி ஏய்க்கக் கூடாது, என்பதற்காக சட்டத்திலே முறைகள் ஏற்படுத்தப் பட்டிருக்கின்றன. புதிய சட்டத்தில் காட்டப்பட்டிருக்கும் தீவிரத்தன்மை, அது ஸ்பான்ஸர் செய்பவர்களுக்காகவே ஒழிய, விவசாயிகளுக்கானது கிடையாது. ஸ்பான்ஸர் செய்பவர்களிடம் ஒப்பந்தத்தை முறிக்க எந்த அதிகாரமும் இல்லை. அவர்கள் ஒப்பந்தத்தை முறித்தார் என்றால், அதிகமான நஷ்ட ஈட்டை விவசாயிக்கு அளித்தாக வேண்டும்.
ஆனால் அதே ஒப்பந்தத்தை, விவசாயி முறிக்க விரும்பினால், எந்த ஒரு நேரத்திலும் எந்த ஒரு நஷ்ட ஈடும் அளிக்காமல், அந்த விவசாயி, தனது முடிவை எடுத்துக் கொள்ளலாம். மாநில அரசுகளுக்கு, என்னுடைய பரிந்துரை என்னவென்றால், எளிய மொழியிலே, எளிய வழிமுறையில் புரிந்து கொள்ளக்கூடிய, ஒப்பந்த விவசாயம், இதற்கான……. ஒரு வார்ப்புருவை உருவாக்கி விவசாயிகளுக்குக் கொடுத்து வைக்க வேண்டும். இதன் காரணமாக யாரும் விவசாயிகளை, ஏமாற்றி விட முடியாது.
நண்பர்களே, எனக்கு சந்தோஷமாக இருக்கிறது, நம் நாடெங்கிலும் உள்ள விவசாயிகள், புதிய விவசாய சீர்திருத்தங்களை, அரவணைத்துக் கொண்டது மட்டுமல்லாமல், மாறாக, பொய்யுரைகளைப் பரப்புபவர்களையும், நேரடியாகப் பொய்க்கச் செய்கிறார்கள். எந்த விவசாயிகளிடத்திலே, இப்போது சற்றேனும் ஐயமிருந்தால், அவர்களிடத்தில் நான் மீண்டும் கூறுகிறேன், நீங்கள் ஒருமுறை மீண்டும் சிந்தியுங்கள். எது இதுவரை நடக்கவில்லையோ, எது இனி நடக்கவே போவதில்லையோ, அது பற்றிய பிரமையோ…. அல்லது பயமோ, பரப்பும் கூட்டத்தாரிடத்தில் நீங்கள் விழிப்போடு இருங்கள். அப்படிப்பட்ட நபர்களை என்னுடைய விவசாய சகோதர சகோதரிகளே அடையாளம் காணுங்கள்!!
இந்த நபர்கள் எப்போதுமே, விவசாயிகளை ஏமாற்றி வந்தார்கள். உங்களை ஏய்த்துப் பிழைத்தார்கள். உங்களைப் பயன்படுத்தினார்கள். மேலும் இன்றும் கூட, இதையே தான் செய்து வருகிறார்கள். நான் இத்தனை கூறிய பிறகும், இதற்குப் பின்னரும், அரசாங்கத்தின் முயற்சிகளுக்குப் பின்னரும், ஒருவேளை யாருக்காவது ஐயமேதும் இருந்தால், நாங்கள் எங்கள் தலைவணங்கி, விவசாய சகோதரர்கள் முன்பாக கைகூப்பி, மிகவும் பணிவன்புடன் கூட, தேசத்தின் விவசாயிகளின் நலனிலே, அவர்களின் கவலைகளைப் போக்குவதற்காக வேண்டி, அனைத்து விஷயங்கள் குறித்தும் பேசத் தயாராக இருக்கிறோம். தேசத்தின் விவசாயிகள், தேசத்தின் விவசாயிகளின் நலன், எங்களைப் பொறுத்தவரை, மிகப் பெரும் முதன்மைகளில் ஒன்றாகும்.
நண்பர்களே, இன்று நான் பல விஷயங்கள் குறித்து, விரிவான வகையிலே உரையாற்றினேன். பல விஷயங்கள் பற்றிய, உண்மையை தேசத்தின் முன்பாக வைத்திருக்கிறேன். இப்போது டிசம்பர் 25ஆம் தேதி, வணக்கத்துக்குரிய அடல்ஜியின் பிறந்த நாளன்று, ஒருமுறை மீண்டும் நான் இந்த விஷயம் பற்றி, நாடெங்கிலும் உள்ள விவசாயிகளோடு விரிவான முறையிலே பேச இருக்கிறேன்.
அன்றைய தினம், பிஎம் விவசாய கௌரவ நிதியின், மேலும் ஒரு தவணை, கோடிக்கணக்கான விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் ஒரே நேரத்தில் சேர்க்கப்படும். பாரதநாட்டின் விவசாயி, மாறிவரும் காலத்திற்கேற்ப பயணிப்பதற்காக, தற்சார்பு பாரதத்தை உருவாக்க, என் தேசத்து விவசாயி தயாராக இருக்கிறார்.
புதிய உறுதிப்பாடுகளோடு, புதிய பாதையிலே நாம் பயணிப்போம். மேலும், இந்த தேசம் வெற்றி பெறும், இந்த தேசத்தின் விவசாயியும் வெற்றி பெறுவான். இந்த நம்பிக்கையுணர்வோடு, நான் மீண்டும் ஒருமுறை, மத்திய பிரதேச அரசுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன். இன்று மத்திய பிரதேசத்தின், இலட்சோபலட்சம் விவசாயிகளிடத்திலே, என்னுடைய கருத்துக்களை முன்வைக்கும் சந்தர்ப்பம் எனக்கு வாய்த்தது.
இதற்காக அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டு, நான் மீண்டும் ஒருமுறை, உங்களனைவருக்கும் பலப்பல நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். பலப்பல நன்றிகள்.