
ஆண்டாள் அருளிய திருப்பாவை – 6
புள்ளும் சிலம்பின (பாடலும் விளக்கமும்)
விளக்கவுரை: வேதா டி.ஸ்ரீதரன்
புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய்! எழுந்திராய் பேய்முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத்(து) அரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்(து) அரியென்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய் (6)
பொருள்
பொழுது விடிந்துவிட்டது. பறவைகள் ஒலி எழுப்புகின்றன. கருடனை வாகனமாகக் கொண்ட மகாவிஷ்ணுவின் ஆலயத்தில் நடைபெறும் பூஜைகளின் சங்குச் சத்தம் ஒலிக்கிறது. இவையெல்லாம் உன் காதில் விழவில்லையா? இளம் பெண்ணே! எழுந்திரு. பூதகி என்னும் அரக்கி, தனது முலைகளில் நஞ்சைத் தடவிக்கொண்டு, குழந்தைக் கண்ணனுக்குப் பால் ஊட்டினாள். அவனோ, பாலையும் குடித்தான், விஷத்தையும் குடித்தான், அவள் உயிரையும் குடித்தான். யசோதையின் தண்டனையால் வண்டியில் கட்டப்பட்டபோது, வண்டியை இழுத்துச் சென்று சகடாசுரன் என்னும் அரக்கனை வதம் செய்தான். திருப்பாற் கடலில் பாம்பின் மீது பள்ளிகொண்டிருக்கும் அந்தப் பரம்பொருளைத் தங்கள் உள்ளத்தில் தியானித்தவாறு முனிவர்களும் யோகிகளும் ‘ஹரி, ஹரி’ என்று அவன் நாமத்தை உச்சரிக்கின்றனர். இந்தப் பேரொலி நமக்குள் புகுந்து நம் உள்ளத்தை பக்தியால் குளிரச் செய்யட்டும்.
அருஞ்சொற்பொருள்
புள் – பறவை
சிலம்புதல் – கூவுதல்
புள்ளரையன் – பறவைகளுக்கு அரசன் (பக்ஷிராஜனான கருடன்)
விளிசங்கு – அழைப்பு விடுக்கும் சங்கொலி
பேரரவம் – பெரும் சப்தம்
பிள்ளாய் – பெண்ணே (தோழியே)
பேய்முலை நஞ்சுண்டது – பூதனையின் பாலைப் பருகி, அவளை வதம் செய்தது
கலக்கு அழிய – கட்டழிந்து போகும்படி, சின்னா பின்னமாகும்படி
காலோச்சி – காலால் உதைத்து
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சியது – சக்கர வடிவில் வந்த சகடாசுரனைக் காலால் உதைத்து வதம் செய்தது
வெள்ளத்து அரவு – பாற்கடலில் இருக்கும் பாம்பு (ஆதிசேஷன்)
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும் – பகவான் நம் ஒவ்வொருவருக்குள்ளும் அந்தர்யாமியாக இருக்கிறான் என்பதை உணர்ந்த முனிவர்கள், யோகிகள்
புள்ளரையன் கோயில் – கருடன் கோயில். இங்கு ஆகுபெயராக நின்று, கருடனை வாகனமாகக் கொண்ட திருமாலின் கோயிலைக் குறித்தது.
அரசன் என்ற சொல்லே அரையன் என்று ஆனது. நாலாயிர திவ்யப் பிரபந்தத்தை இசையுடனும் நாட்டியத்துடனும் சேர்த்து அபிநயித்துக் காட்டுபவர்கள் அரையர்கள் என்று அழைக்கப்படுவதும் இங்கு நினைவுகூரத்தக்கது. திவ்யதேசங்களில் அரையர் சேவைக்குத் தனி இடம் இருந்தது. ஸ்ரீராமாநுஜர் காலத்தில் ஸ்ரீரங்கத்தில் சுமார் 600 அரையர்கள் இருந்தனர் என்று அறிகிறோம்.
மொழி அழகு
மெள்ள எழுந்து பேரரவம் செய்வது – முரண்தொடை.
அசுரர்களை வதைக்கும் ஆற்றல் மிக்க செயல்பாடும், வெள்ளத்தரவில் துயிலமர்வதும் ஒரேபோதில் காட்டப்படுவதும் முரண்தொடையே. அசுரர்களை அழித்த அயர்ச்சியில் பெருமாள் பாற்கடலுக்குச் சென்று துயில் கொண்டு விட்டானாம். குழந்தை ஆண்டாளின் பார்வை இது.
மார்கழி மாதக் குளிரின்போது உடல் வெடவெடக்கிறது. ஆனால், அப்போதும் உள்ளத்தில் வெம்மை (ஆன்மதாகம்) இருக்கிறது. இதை மிகவும் நயம்படக் காட்டுகிறது உள்ளம் குளிர்ந்தேல் என்ற சொற்பிரயோகம். பகவந்நாமாவைப் பருகுவதே உள்ளத்தைக் குளிர வைக்கும் வழி.
ஆன்மிகம், தத்துவம்
தமஸோ மா ஜ்யோதிர்கமய (இருளில் இருந்து ஒளியை நோக்கி அழைத்துச் செல்வாயாக) என்கிறது வேதம். உறக்கத்தில் இருக்கும் பெண்ணை எழுப்புவது போலப் பாடப்பட்டுள்ளன இந்தப் பாடல்கள் (பாசுரம் 6 முதல் 15 வரை). இவை, இருளில் இருக்கும் நம்மை இறைசிந்தனை என்னும் ஒளியை நோக்கி இட்டுச்செல்கின்றன.
***
இறைவன் நமக்குள்ளே அந்தர்யாமியாக இருக்கிறான். அதையே உள்ளத்துக்கொண்டு என்கிறாள் ஆண்டாள். நமக்குள் வீற்றிருப்பவன் அவனே. அதனால்தான் இந்த உடலை ஆலயம் என்கிறார்கள். இறைவன் வதியும் உள்ளத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டியது நமது கடமை.
***
ஆண்டாள், தனது பாசுரங்களில் ஏராளமான மங்கலப் பொருட்களை முத்துச் சிதறலாகத் தருகிறாள். இந்தப் பாசுரத்தில் மங்கல ஓசைக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.
மங்கல ஒலி மிகவும் முக்கியமானது. நம்மைச் சுற்றி ஏதாவது அமங்கலம் இருந்தாலும், மங்கல ஒலி பெரிதாக எழும்போது அமங்கல ஒலிகள் மங்கி விடும். (திருமணங்களில் மாங்கல்ய தாரணத்தின் போது பெரிதாக மங்கல ஓசை எழுப்புவது இதன் காரணமாகவே.)