
தொண்டரடிப்பொடி ஆழ்வார் அருளிச் செய்த
திருப்பள்ளியெழுச்சி பாசுரம் – 5
விளக்கம்: வேதா டி.ஸ்ரீதரன்
இரவியர் மணிநெடும் தேரொடும் இவரோ
இறையவர் பதினொரு விடையரும் இவரோ
மருவிய மயிலினன் அறுமுகன் இவனோ
மருதரும் வசுக்களும் வந்து வந்தீண்டி
புரவியோடாடலும் பாடலும் தேரும்
குமரதண்டம் புகுந்(து) ஈண்டிய வெள்ளம்
அருவரை அனைய நின் கோயில் முன் இவரோ
அரங்கத்தம்மா! பள்ளியெழுந்தருளாயே. (6)
பொருள்
ரத்தினங்கள் பதிக்கப்பெற்ற பெரிய தேர்களில் வீற்றிருக்கும் பன்னிரண்டு சூரியர்களும், பிரபஞ்சத்தை நிர்வகிக்கும் பதினோரு ருத்திரர்களும், தனக்கே உரிய மயில் வாகனத்துடன் வந்திறங்கிய முருகப் பெருமானும், மருத் கணங்களும், அஷ்ட வசுக்களும் ஒருவருடன் ஒருவர் போட்டி போட்டுக்கொண்டு உனது தரிசனத்துக்காகக் காத்திருக்கிறார்கள். தேவசேனை திரண்டு வந்து உன் ஆலய வாசலில் காத்திருக்கிறது. அவர்களது ரதங்களும் புரவிகளும் வீதிகளை நிறைத்து நிற்கின்றன. பக்திக் களிப்பு எங்கணும் பரவியது. அப்பனே, அரங்கநாதா, நீ உறக்கம் கலைந்து துயில் எழுவாய்!

அருஞ்சொற்பொருள்
இவரோ – இவர், இந்த
இரவி – சூரியன்
மணி – ரத்தினம்
நெடு – பெரிய
விடையர் – ருத்திரர் (விடை – எருது)
மருவிய – பொருந்திய
குமரதண்டம் – முருகப் பெருமானை சேனாதிபதியாகக் கொண்டு, விதவித ஆயுதங்களைத் தாங்கி நிற்கும் தேவசேனை
ஈண்டிய – நெருங்கி நிற்கிற
வெள்ளம் – கூட்டம்
வரை – மலை
அனைய – போன்ற, ஒத்த
அரு வரை அனைய நின் கோயில் – பெரிய மலை போன்ற உன் திருக்கோயில் (பெரிய கோயில் = ஸ்ரீரங்கம்)
விடை என்றால் எருது. விடையர் என்பது எருதை வாகனமாகக் கொண்ட ருத்திரனைக் குறிக்கும்.
புரவியோடு தேரும், ஆடலும் பாடலுமாகப் புகுந்த குமரதண்டம், அரு வரை அனைய நின் கோயில் முன் வெள்ளமென ஈண்டி (நின்றது) என்று பதம் பிரிக்கலாம்.