
சுபாஷிதம்…ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
73. முட்டாளின் ஐந்து குணங்கள்!
ஸ்லோகம்:
மூர்கஸ்ய பஞ்ச சிஹ்னானி கர்வீ துர்வசனீ ததா |
ஹடீ சா௨ப்ரியவாதீ ச பரோக்தம் நைவ மன்யதே ||
பொருள்:
கர்வம், தீய சொல் கூறுவது, பிடிவாதம், கடுமையாகப் பேசுவதும் வாதிடுவதும், அடுத்தவர் கூறுவதை எதிர்த்துப் பேசுவதே கொள்கையாகக் கொள்வது என்ற ஐந்து குணங்கள் முட்டாளிடம் இருக்கும்.
விளக்கம்:
முட்டாள்களை மகிழ்விக்க முடியாது. அவரிடம் இருந்து தூரமாக விலகி இருக்க வேண்டும் என்று கூறுவார்கள். முட்டாள்கள் யார் என்பதை விளக்கும் சுலோகம் இது.
இந்த குணங்கள் உள்ளவர்களை தொலைவில் இருத்த வேண்டும் என்கிறது சாஸ்திரம். அகம்பாவத்திடம் எப்போதுமே அறியாமை துணையிருக்கும். கர்வி எப்போதும் அடக்கம் இல்லாமல் நடந்து கொள்வான். மாறுபட்ட அபிப்ராயங்களை பொறுத்துக் கொள்ளமாட்டாள். அதன் காரணமாக பன்முகத் தன்மைகளை தெரிந்து கொள்ளும் வாய்ப்பு அவனுக்கு இருக்காது. அவன் மூலம் தனி மனிதனுக்கும் சமுதாயத்திற்கும் தீமையே விளையும்.
அப்படிப்பட்ட தீங்கு விளைவிக்கும் புழுக்கள் தலைவர்களாக ஆனால் தேசத்திற்கு ஆபத்து.
சிறுவயதிலிருந்தே பிள்ளைகளிடம் இது போன்ற குணங்கள் தென்பட்டால் பெரியவர்கள் திருத்த வேண்டும். இல்லாவிடில் வயது வளர்வதோடு கூட சூழலால், சகவாசத்தால் அவையும் வளரத் தொடங்கும்.
இப்படிப்பட்ட குணங்கள் நம்மில் புகுந்து விடாமல் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இதுபோன்ற குணம் உள்ளவர்களிடம் இருந்து இயன்றவரை விலகி இருக்க வேண்டும்.
நல்லவர்களை எல்லாம் கடுமையாக விமர்சித்து தானே சிறந்தவன் என்று எண்ணும் ஆசை வெறி கொண்ட தலைவன் மூர்க்கர்களுக்கு முன்னுதாரணம்.