
சுபாஷிதம்…ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
76. நல்ல சொற்களை யார் சொன்னாலும் கேட்க வேண்டும்.
ஸ்லோகம்:
யுக்தியுக்தம் வசோ க்ராஹ்யம் பாலாதபி சுகாதபி |
யுக்திஹீனம் வச: (ஸ்) த்யாஜ்யம் வ்ருத்தாதபி சுகாதபி ||
— யோகவாசிஷ்டம்
பொருள்:
அறிவுபூர்வமான சொற்களை வயதில் சிறியவரோ பெரியவரோ அல்லது கிளியோ கூறினாலும் கேட்டுக்கொள்ள வேண்டும். விவேகமற்ற சொற்களை பெரியவர் சொன்னாலும் சாட்சாத் சுக மகரிஷி சொன்னாலும் மறுதலிக்க வேண்டும்.
விளக்கம்:
நம் நலனை விரும்பி நல்ல கருத்து, நல்ல யோசனை யார் சொன்னாலும் ஏற்க வேண்டும் என்று கூறும் சுபாஷிதம் இது.
இந்த சுலோகத்தில் கிளி என்ற சொல்லை கிளி என்றும் சுக மகரிஷி என்றும் இரு பொருளில் பயன்படுத்தியுள்ளார் கவி. யாரிடமிருந்து வேண்டுமானாலும் பாடம் கற்கலாம் என்ற பொருள் இதில் மறைந்துள்ளது. சுக மகரிஷி போன்ற பிரம்ம ஞானி, ஸ்திதப்ரக்ஞர் மனித வாழ்க்கைக்கு எதிராக கூறுவார் என்பது கவியின் எண்ணம் அல்ல. விவேகமற்ற நடத்தையில் ஈடுபடக் கூடாது என்ற கருத்தை ஆழமாக கூற வேண்டும் என்பதற்காகவே சுகமகரிஷியின் பெயரை உதாரணத்துக்கு கூறியுள்ளார் கவி.