
சுபாஷிதம்…ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
78. கற்றோரின் குணநலன்கள்!
ஸ்லோகம்:
யதா சக்தி சிகீர்ஷந்தி யதாசக்தி ச குர்வதே |
ந கின்சிதவமன்யன்தே நரா: பண்டிதபுத்தய : ||
நாப்ரப்யமபிவாஞ்சந்தி நஷ்டம் நேச்சந்தி சோசிதும் |
ஆபத்சு ச ந முஹ்யந்தி நரா: பண்டிதபுத்தய: ||
– மஹாபாரதம்
பொருள்:
அறிஞர் தன் சக்தியை அனுசரித்து பணிபுரிய எண்ணுவார். எண்ணியது போலவே செய்வார். எந்த விஷயத்திலும் அலட்சியம் காட்ட மாட்டார். எட்டாதவற்றுக்காக ஏங்க மாட்டார். நஷ்டத்தைக் கண்டு கலங்க மாட்டார். அபாயத்தில் கூட விவேகத்தை இழக்க மாட்டார்.
விளக்கம்:
சிலரை கற்றோராக, அறிஞராக நாம் புகழ்வதுண்டு. அவர்களின் குணநலன்கள் என்ன?
மகாபாரதத்தில் விதுரர் அறிவாளிக்கு இருக்கவேண்டிய குணங்களாக பலவற்றை குறிப்பிடுகிறார். “நரா: பண்டிதபுத்தய:” என்று மகுடத்தோடு உள்ள பல ஸ்லோகங்களைக் கூறியுள்ளார். உதாரணத்திற்கு இரண்டினை இங்கு பார்ப்போம்.
எந்த பணியானாலும் சிந்தித்து பின் செயலாற்றுவது அவர்களின் முக்கிய இயல்பு. ஒரே ஒரு வேலையில் இறங்கி அதிலேயே மூழ்கி இருக்க மாட்டார். நேரத்தை வீணடிக்க மாட்டார். தன்னை சுய கட்டுப்பாட்டில் வைத்திருப்பார். சன்மானம் அளித்தால் மகிழ மாட்டார். அவமதிப்பு நேர்ந்தால் வருந்த மாட்டார்.
அதிக செல்வம், கல்வி, ஐஸ்வர்யம் இருந்தாலும் அடக்கத்தோடு இருப்பார். இந்த இயல்புகள் கொண்டவரே அறிஞர். கற்றோர் என்றால் வெறும் பட்டம் பெற்றவர் மட்டுமே அல்ல என்பதை அறியவேண்டும்.