
டீக்கடை பாக்கியை செலுத்தும்படி கேட்டதற்காக கோபத்தில் ஒரு பைக் மெக்கானிக் கடைக்கு தீ வைத்து கொளுத்திய சம்பவம் ஹைதராபாதில் நடந்தது.
டீக்கடை கடன் பாக்கியை செலுத்தாவிட்டால் டீ தரமாட்டேன் என்று கூறி தன்னை அனைவர் முன்னாலும் அவமதித்ததால் முதிய பெண்மணி நடத்திவரும் டீ கடை மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்தினான் ஒரு பைக் மெக்கானிக். இந்த சம்பவம் ஹைதராபாத் எல்பி நகர் எல்லையில் நடந்துள்ளது.
என்டிஆர் நகர் காலனியில் உள்ள சிந்தசெட்டு பஸ் ஸ்டாப் அருகில் கண்டம்மா (65) என்ற பெண்மணி சில வருடங்களாக டீக்கடை நடத்தி வாழ்க்கையை ஓட்டி வருகிறார். அங்கே அருகிலேயே பைக் மெக்கானிக் கடை நடத்திவரும் ஷப்பீர் (40)
தினமும் அந்த டீக்கடையில் டீ குடித்து வருகிறான். மெக்கானிக்காக நல்ல பெயர் எடுத்த ஷப்பீர் குடிப்பழக்கத்துக்கு ஆளானான். அந்த பின்னணியில் தினமும் கடைக்கு வந்து டீ குடித்துவிட்டு கடன் பாக்கி வைத்துள்ளான். இப்போது அது மிகவும் அதிகமாக ஆகிவிட்டதால் கண்டம்மா 10 நாட்களாக பணம் கேட்டு வருகிறார். ஆனாலும் கண்டுகொள்ளாமல் தினமும் டீ குடித்து விட்டு காசு கொடுக்காமல் சென்று வந்தான்.
இந்த மாதம் 25 ஆம் தேதி கூட டீ குடிப்பதற்கு சென்றான் ஷப்பீர். அனைவர் முன்னும் பணம் கொடுக்காமல் டீ குடிக்க வராதே என்று திட்டி உள்ளார். பாக்கி பணத்தை கொடுத்துவிட்டு டீ கேட்கலாம் என்று கூறியுள்ளார்.
அனைவர் முன்னும் தன்னை அவமதித்து விட்டதாக கோபம் கொண்ட ஷப்பீர் அன்று நள்ளிரவு 2 மணிக்கு குடி மயக்கத்தில் பைக்கில் சென்று கொண்டிருந்த போது டீக்கடை கண்ணில் பட்டது. சுற்றிலும் யாரும் இல்லாததால் தன்னுடைய பைக்கில் இருந்த பெட்ரோலை எடுத்து கடை மீது ஊற்றி நெருப்பு பற்ற வைத்துவிட்டான். ஒரேடியாக கடை தீப்பற்றி எரிந்ததை கவனித்த அடுத்த கட்டடத்தில் உள்ள வாட்ச்மேன் கூச்சலிட்டார். சப்பீர் அதைக் கேட்டு ஓடி விட்டான்.
சில நிமிட நேரத்திலேயே டீக்கடை எரிந்து சாம்பலாகியது. பாதிக்கப்பட்ட கண்டம்மா புகார் அளித்ததால் வழக்கு பதிவு செய்த எல்பி நகர் போலீசார் அண்மையில் உள்ள சிசிடிவி கேமராவில் சோதித்தபோது க்ளூ கிடைத்தது.
சம்பவ நேரத்தில் பரபரப்பாக அங்கு திரிந்த ஷப்பீரை அடையாளம் கண்டு கைது செய்தனர். வாட்ச்மேன் கூட அவனை அடையாளம் காட்டியதால் ஷப்பீர் குற்றத்தை ஒப்புக்கொண்டான். அதனால் அவன் மீது வழக்குப்பதிவு செய்து ரிமாண்டுக்கு அனுப்பினார்கள்.
சப்பீர் பயன்படுத்திய பைக் கூட ஒரு வாரத்திற்கு முன்பு சிலகலகுடாவில் திருட்டு போன பைக் என்று தெரிந்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.