
சுபாஷிதம்…ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
83. ஆபத்துக் காலத்தில் உதவும் பூர்வ புண்ணியம்!
ஸ்லோகம்:
வனே ரணே சத்ருஜலாக்னிமத்யே
மஹார்ணவே பர்வதமஸ்தகே வா |
சுப்தம் ப்ரமத்தம் விஷமஸ்திதம் வா
ரக்ஷந்தி புண்யானி புராக்ருதானி ||
– பர்த்ருஹரி.
பொருள்:
அடர்ந்த காடுகளில், போர்க்களங்களில், எதிரியின் நடுவில், நீரில், நெருப்பில், கடலின் நடுவில், மலை உச்சியில், ஆழ்ந்த தூக்கத்தில், உணர்வு இழந்து கிடக்கும் துயரமான நிலையில்… நம்மைக் காப்பது நாம் முற்பிறவியில் செய்த நல்வினைகளே!
விளக்கம்:
எப்போதோ நாம் செய்த புண்ணியச் செயல் நமக்குத் தேவைப்படும் பொழுது எவ்வாறு உதவும் என்பதை தெரிவிக்கும் பர்த்ருஹரி இயற்றிய ஸ்லோகம். நாம் புண்ணியச் செயல்கள் செய்வதற்கு இதைவிட ஊக்கமளிப்பது எது இருக்கும்?
பெரிய நகரங்களில், மக்கள் கூட்டத்தில், ஆயிரக்கணக்கில் ஓடும் வாகனங்களிடம் இருந்து தப்பித்து நலமாக வீடு திரும்புகிறோம் என்றால் அது நம் பூர்வ புண்ணியத்தால்தான். உலகில் நேரும் கோர விபத்துகளில் இருந்து ஓரிருவர் தப்பிப் பிழைத்த செய்திகளைக் கேட்கும்போது அதற்குக் காரணம் இதுவாகத்தான் இருக்கும் என்று தோன்றும்.
எப்போதோ செய்த நற்செயல்களின் பலன் அடுத்த பிறவியில் உதவுகிறது… நம்மை காக்கிறது. இந்த ஒரு ஆறுதல் போதும் நாம் பரோபகாரம் எதற்காக செய்ய வேண்டும் என்று அறிவதற்கு. புண்ணியம் என்பது சுபமளிப்பது.
‘பரோபகாராய புண்யாய பாபாய பரபீடனம்’ என்கிறது சாஸ்திரம். பிறருக்கு உதவுவதே புண்ணியம். பிறருக்குத் தீமை செய்வதே பாவம். இதனை விளக்கும் ஸ்லோகம் இது.