
சுபாஷிதம்… ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
103. நிரந்தர நட்பின் சவால்கள்!
ஸ்லோகம்:
சர்வதா சுகரம் மித்ரம் துஷ்கரம் ப்ரதிபாலனம் !
அனித்யத்வாத்து சித்தானாம் ப்ரீதிரப்யத்ர பித்யதே !!
– வால்மீகி ராமாயணம்.
பொருள்:
நண்பனைப் பெறுவது எளிது. ஆனால் அந்த நட்பை பாதுகாத்துக் கொள்வது மிகக் கடினம். ஏனென்றால் மனித மனம் மாறிக் கொண்டே இருக்கும். சின்ன விஷயங்களில் வேறுபாடு வந்தால் கூட நட்பில் விரிசல் ஏற்பட்டு விடும்.
விளக்கம்:
நட்பை நிலைத்திருக்க செய்வது கடினம் என்று கூறும் ராமாயண சுலோகம் இது.
சுக்ரீவன் ராமனுடைய நட்பைப் பெற்ற பிறகு சீதையைத் தேடும் செயலில் நடந்த தாமதத்தைக் கண்டு கோபமடைந்த ராமன், தன் தம்பி லட்சுமணனை சுக்ரீவனிடம் அனுப்பினான். லட்சுமணன் மிக ஆக்ரோஷத்துடன் சுக்ரீவனிடம் சென்றான். சுக்ரீவன் கவலையும் வருத்தமுமாக தன் அமைச்சர்களோடு உரையாடிய போது கூறிய சொற்கள் இவை.
நண்பனுக்கு கோபம் வராதபடி நடந்து கொள்ள வேண்டும் என்ற அறிவுரை இந்த ஸ்லோகத்தில் உள்ளது.
தேர்தலில் ஒன்றிணைந்து போட்டியிடும் கட்சிகள் கூட்டணி அரசை அமைப்பதும், தலைவர்களிடையே ஏற்படும் சின்னச்சின்ன பூசல்களால் அந்த கூட்டணி அரசு உடைவதும் நாம் பார்த்து வருகிறோம். ஆதரவு அளித்த சிறு கட்சிகளுக்கு ஆத்திரம் வராமல் சமரசம் செய்துகொண்டு, பல வரங்களை அளித்து அரசு நடத்தும் கட்சிகளையும் பார்க்கிறோம்.
நட்பை நிலைநிறுத்திக் கொள்வது சிரமமான பணி. முயற்சி எடுத்து கவனமாக நடந்து கொள்ள வேண்டும் என்று எடுத்துரைக்கும் ஸ்லோகம் இது.