
விஜயபதம் – வேத மொழியின் வெற்றி வழிகள் -14
(சமஸ்கிருத இலக்கியம் அளிக்கும் தலைமைப் பண்புகள், அரசு தர்மங்கள், வெற்றிக்கான வழிமுறைகள்)
தெலுங்கில் – பிஎஸ் சர்மா
தமிழில் ராஜி ரகுநாதன்
14. Execution
வெற்றிப் பாதையில் வழுக்கும் படிகள்:-
அரசன் என்றால் ஆள்பவன், ஒரு தலைவன். ஒரு நிறுவனத்திற்கு அதிபதி, ஒரு குடும்பத் தலைவன், ஒரு கட்சியின் தலைவன், ஒரு கலைஞன், மேதை, பண்டிதன், வெவேறு துறைகளில் பிரமுகர்கள். இவர்களில் யாராயிருந்தாலும் வெற்றி பெற வேண்டுமென்றால் தீய குணங்களிலிருந்து விலகி இருக்க வேண்டும். தீய பழக்க வழக்கங்களுக்கு அடிமையான தலைவன், நடிகன், கலைஞர்கள் போன்றோரின் வாழ்க்கை அழிந்த கதைகள் ஏராளம்.
விவேகமில்லாமல் வேட்டையாடச் செல்வது ஒரு கெட்ட பழக்கம். காரணமின்றி கேளிக்கைக்காக காட்டில் இயல்பாகத் திரியும் விலங்குகளைக் கொல்லும் இந்த தீய பழக்கம் இயற்க்கைக்கு விரோதமானது. பணத் திமிரில், பதவி கர்வத்தில் வேட்டையாடும் மனப்போக்கு சரியல்ல. தேவையில்லாதவரிடம் துப்பாக்கி போன்ற ஆயுதங்கள் கையில் இருந்தால் வேண்டாத தீய யோசனைகள் வரும் வாய்ப்பு உள்ளது.
ஒருவர் தன்னிடம் இருந்த கூரான மதிப்பு வாய்ந்த கத்தியை ஒரு சாதுவிடம் கொடுத்து வைத்தார். தீர்த்த யாத்திரைக்குச் சென்று திரும்பி வந்து வாங்கிக் கொள்வதாகக் கூறினார் அவர் திரும்பி வந்தபின் பார்த்த போது அந்த சாது முரடனாக மாறியிருந்தார். விலங்குகளைக் கொல்வதோடு கூட தனக்குப் பிடிகக்தவர்களைக் கத்தியால் குத்திக் கொல்லும் அசுர நடத்தைக்கு அடிமையாகியிருந்தார். மனக் கட்டுப்பாடு இல்லாதவரிடம் ஆயுதங்கள் இருந்தால் இது போல் நிகழும்.
மதுவை வேடிக்கைக்காக விளையாட்டாகத் தொடங்கி அதற்கு அடிமையாகி உயிரிழந்தவர்கள் பலர். தலைவன் என்பவன் இது போன்றவற்றிலிருந்து விலகி இருக்க வேண்டும்.
சப்ததோஷா: சதா ராஜ்ஜா ஹாதவ்யா வ்யசனோதயா !
ப்ராஸோ யைர்விநஸ்யந்தி க்ருதமூலா அபீஸ்வரா: !!
ஸ்த்ரியோக்ஷா ம்ருகயா பானம் வாக்பாருஷ்யம் ச பஞ்சமம் ! மஹாச்ச தண்டபாருஷ்யம் அர்த்ததூஷன மேவச !!
(மகாபாரதம் உத்தியோக பர்வம் -33-91/92)
பொருள்:- பெண்களிடம் மோகம், தேவையின்றி வேட்டையாடுவது, சூதாட்டம், மது அருந்துதல், கடினமாகப் பேசுவது, கடினமாக தண்டனை விதிப்பது, வீண் செலவு செய்வது என்ற ஏழு துர்குணங்கள் தலைவனுக்கு இருக்கக் கூடாது. புகழைக் கெடுக்கும் இந்த தவறுகள் எத்தனை அனுவமுள்ளவரானாலும், எத்தனை சாமர்த்தியம் மிக்கவரானாலும் வீழ்த்தி விடும்.
வெற்றி பெற விரும்புபவர்கள் விலக்க வேண்டிய மற்றுமொரு பத்து தீய குணங்கள் பற்றி மனு எச்சரிக்கிறார்.
ம்ருகயாக்ஷோ திவாஸ்வாப: பரிவாத: ஸ்த்ரியோ மத: !
தௌர்யத்ரிகம் ப்ருதாட்யா ச காமஜோ தஸகோ கண: !!
(மனு தர்ம சாஸ்திரம் 7-47)
பொருள்:- விவேகமின்றி வேட்டையாடுவது, சூதாட்டம், பகல் தூக்கம், பிறரை நிந்திப்பது, பெண்ணாசை, மது அருந்துவதால் ஏற்படும் மதம், ‘தொர்ய த்ரிகம்’ எனப்படும் மூன்று பழக்கங்கள் – நாட்டியம், கீதம், வாத்தியம் – இவற்றின் மீது அளவுக்கதிகமான நாட்டம், ஊர் சுற்றுவது என்ற பத்து தீய பழக்கங்களுக்கு அடிமையாகி மனிதன் வெற்றிப் பாதையிலிருந்து வீழ்கிறான்.
இவை தவிர மேலும் சில ‘பணியில் கெட்ட பழக்கங்கள்’ வெற்றிப் பாதையில் வழுக்குப் படிகளாக உள்ளன.
வஸ்துஷ்ய ஸக்யேஷு ஸமுத்யமஸ்ச
ஸக்யேஷு மோஹாதன முத்யமஸ்ச !
ஸக்யேஷு காலேஷு ஸமுத்யமஸ்ச
த்ரிதைவ கார்யவ்யஸனம் வதந்தி !!
(காமந்தக நீதி சாஸ்திரம்)
பொருள்:- தானாகச் செய்ய முடியாத வேலைகளைச் செய்யத் துணிவது, மிகவும் எளிதாகச் செய்யக் கூடிய பணிகளைச் செயயாமலிருப்பது, சரியான நேரத்தில் பணியைத் தொடங்காமலிருப்பது என்பவை வேலையில் கெட்ட பழக்கங்கள்.
அதனால் வெற்றியைச் சாதிக்க வேண்டுமென்றால் தலைவர்கள் இப்படிப்பட்ட கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகக் கூடாது.
பதவியை துர்விநியோகம் செய்யும் தலைவர்களுக்கு விழிப்புணர்வு:-
எதிர்பாராமல் கிடைத்த தேவேந்திர பதவியால் நஹுஷனுக்கு கர்வம் ஏற்பட்டது. நாளெல்லாம் பல்வேறு போகங்களில் கழிக்கத் தொடங்கினான். கர்வத்தோடு இந்திரனின் மனைவி சசிதேவி மீது விருப்பம் கொண்டான். அது சரியல்ல என்று தேவர்கள் எச்சரித்தாலும் கேட்கவில்லை. பிரகஸ்பதியின் ஆலோசனைபடி சசிதேவி நஹுஷனை சந்தித்து, ‘எனக்கு சிறிது கால அவகாசம் கொடு” என்று வேண்டினாள்.
காலமே அனைத்திற்கும் தீர்வு கூறுமல்லவா! அம்பாளின் கருணையால் இந்திரன் எங்கிருக்கிறான் என்றறிந்தாள். தனக்கு நேர்ந்த துயரத்தை கணவனிடம் விவரித்தாள். நஹுஷனின் தவ ஆற்றலை அழிக்கும் உபாயத்தை இந்திரன் யோசித்தான். அதன்படி சசிதேவி நஹுஷனிடம் சென்று, “முனிவர்களால் சுமக்கப்படும் பல்லக்கில் ஏறிவா! உன்னை ஏற்கிறேன்” என்று தெரிவித்தாள். கர்வம் தலைக்கேறிய நஹுஷன் மகிழ்ந்தான். ரிஷிகள் சுமக்கும் பல்லக்கில் ஏறிக் கிளம்பினான். நடுவில் நடந்த வாக்குவாதத்தால் அகஸ்தியர், “நீ பத்தாயிரம் ஆண்டுகள் சர்ப்பமாகக் கிடப்பாய்!” என்று சாபமிட்டார். நஹுஷன் பதவியிழந்து பாம்பாக மாறினான். தனக்குக் கிடைத்த பதவியை தவறாகப் பயன்படுத்தும் அரசுத் தலைவர்களுக்கு விழிப்புணர்வு தருவது இந்த மகாபாரதக் கதை.
தீய பழக்கம் கீழே தள்ளும்:-
சீதையைத் தேடிச் சென்ற ஹனுமன் எடுத்த வேலையை முடித்தார். பார்த்து வரச் சொன்னால் எரித்து வந்தான் என்ற பழமொழிக்கு ஏற்ப அசோகவனத்தை அழித்து, எதிர்த்த அசுரர்களை வதைத்தார். இந்திரஜித்தோடு செய்த பயங்கரப் போரில் பிரமாஸ்திரத்தால் கட்டுண்டார். மூடர்களான அசுரர்கள் ஹனுமனை கயிறு கொண்டு கட்டினர். அதனால் பிரம்மாஸ்திரம் விலகியது. ராவணனைக் காண எண்ணிய ஹனுமான் கட்டப்பட்டவராக நடித்து அரச சபைக்குச் சென்றார். சிம்மாசனத்தில் அமர்ந்திருந்த ராவணனின் தேஜஸைப் பார்த்து வியந்த அனுமன் இவ்வாறு நினைத்தார்…
அஹோ ரூபமஹோ தைர்யமஹோ சத்வ மஹோ த்யுதி: !
அஹோ ராக்ஷஸராஜ்யஸ்ய சர்வ லக்ஷணயுக்ததா !!
(சுந்தரகாண்டம் – 49-17)
பொருள்:- ஆஹா… என்ன உருவம்! எத்தனை தைரியம்! என்ன பலம்! என்ன ஒளி! எத்தனை அழகு! என்று வியந்தார்.
ராவணன் சீதையிடம் செய்த அபசாரத்தை எண்ணி ராவணனின் சீலமற்ற குணத்தை எண்ணி அவன் மீது இரக்கப்பட்டு இவ்வாறு நினைத்தார்.
யத்யதர்மோ ந பலவான் ஸ்யாதயம் ராக்ஷசேஸ்வர: !
ஸ்யாதயம் சுரலோகஸ்ய ஸஸக்ரஸ்யாபி ரக்ஷிதா !!
(சுந்தர காண்டம் – 49-18)
பொருள்:- ராவணனிடம் இந்த அதர்ம குணங்கள் இல்லாமலிருந்தால் இந்திரனுக்கும் சேர்த்து தேவலோகத்திற்கே அரசனாகி இருப்பான்.
எத்தகைய தெய்வ பக்தனாக இருந்த போதிலும் தன் தீய செயல்களால் அனைவரையும் துன்புறுத்தினான். சகல லோகங்களையும் அச்சுறுத்தும் துஷ்டன். தீய பழக்கங்களுக்கு அடிமை. எத்தனை ஒளி பொருந்தியவனாயிருந்தாலும் கெட்ட பழக்கங்கள் கீழே வீழ்த்தி விடும்.
***
வெற்றியை விரும்புபவர் இந்த ஆறு குணங்களை விடக்கூடாது:-
ஹடேவ து குணா: பும்சா ந ஹாதவ்யா கதாசன !
சத்யம் தானம் அனாலஸ்யம் அனசூயா க்ஷமா த்ருதி: !!
(உத்தியோக பர்வம் 33-81)
உண்மையே பேசும் இயல்பு, தானம் செய்யும் குணம், பொறுமை, பிறருடைய செல்வம் அறிவு கண்டு பொறாமை படாமலிருப்பது, சோம்பலின்றி செயல்படுவது, தைரியமாக பிரச்னைகளை சமாளிப்பது.
சுபம்!