நடித்தாரே! நாடகம் தனில் அவர் நடித்தாரே!உலக நாடகம் நடத்திட வந்தவர் நடித்தாரே!என்று பல்லவியும், சரணமாக ‘கடவுள் கொடுத்தது மானிட வேடம்!கல்விக் கூடத்தில் ‘கிங் ஜான்’ வேடம் இன்றிவர் படித்தது இங்கிலீஷ் பாடம்! எதிர்பார்த்திருக்குது காமகோடி பீடம்!
“இதெல்லாம் நோக்கு எங்க கெடச்சுது?” -பெரியவா
அருளே அறிவே அமுதே! – சுப்பு ஆறுமுகம் (3)
எழுத்தாக்கம்: எஸ். சந்திரமௌலி
நண்றி-கல்கி & பால ஹனுமான்
வில்லுப்பாட்டில் ஆதிசங்கரர் கதையைச் சொல்ல உத்தரவானபோது, காலடியில் ஆதிசங்கரர் அவதரித்ததைக் குறிப்பிடும்போது, பெரியவாள் திருவனந்தபுரம், திருவாங்கூர் சமஸ்தானம், சேர நாடு என்றெல்லாம் ஆரம்பிக்காமல், ‘பரசுராம க்ஷேத்திரம்’னு ஆரம்பிக்கச் சொன்னதைப் பற்றி ஏற்கெனவே சொன்னேன்.
ஆனால் எனக்கு காலடியில் பிறந்த ஆதிசங்கரர்தான் காஞ்சியின் பீடாதிபதியான மஹா பெரியவாள்; அவருக்குரிய அனைத்து சீலமும், சிறப்பும் இவருக்கும் உண்டு. இருவருக்கும் இடையில் எந்தவிதமான வித்தியாசமும் என் கண்களுக்கோ, மனசுக்கோ புலப்படவில்லை. ஆகையினாலே, பெரியவாளிடமிருந்து உத்தரவு வந்ததும், ‘காலடி முதல் காஞ்சி வரை’ என்பது தான் அந்த வில்லுப்பாட்டுக் கதையின் தலைப்பு என்று என் மனத்துக்குள் தோன்றியது.
காஞ்சிபுரத்தையடுத்த பங்காருப்பேட்டையில்தான், ‘காலடி முதல் காஞ்சி வரை’ கதையை வில்லுப்பாட்டில் அரங்கேற்றம் செய்வதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பங்காருப்பேட்டைக்குப் போய் நிகழ்ச்சியை நடத்துவதற்கு முன்பாக, மடத்துக்குப் போய், பெரியவாளை தரிசனம் செய்து, ஆசீர்வாதம் பெறுவதே திட்டம். மடத்துக்குச் சென்று பெரியவாள் தரிசனத்தின்போது, சுப்பு ஆறுமுகம் வந்திருக்கார். பங்காருப்பேட்டையில இன்னிக்கு அவரோட காலடி முதல் காஞ்சி வரை வில்லுப்பாட்டு முதல் புரோகிராம்” என்று பெரியவாளிடம் தெரிவிக்கப்பட்டதும், இங்கேயே சொல்லேன்; நானும் கேட்கிறேன்” என்றார். சற்றும் எதிர்பாராத இந்த வார்த்தைகளால் நான் திகைத்துப் போனேன். கதை சொல்லும் வில்லும், இதர வாத்தியங்களும் கூட காரில்தான் இருந்தன. அவசரம் அவசரமாக ஓடி, அவற்றையெல்லாம் எடுத்துக் கொண்டு வந்து, பெரியவாள் முன்னிலையில் அமர்ந்து கதை சொல்வதற்குத் தயாரானோம்.
மனத்தின் ஒரு மூலையில், ‘பங்காருப்பேட்டையில் எல்லோரும் கதை கேட்கக் காத்துக் கொண்டிருப்பார்களே!’ என்ற நினைப்பும் ஓடிக்கொண்டிருந்தது. ஆரம்பிக்கச் சொல்லி, பெரியவாள் கையசைத்தார். பரசுராம க்ஷேத்திரத்திலிருந்து கதையை ஆரம்பித்தேன். எனக்குத்தான் அவர் (ஆதிசங்கரர்) தான் இவர்; இவர் (மஹா பெரியவாள்) தான் அவர் ஆயிற்றே! காலடிக்கும், காஞ்சிக்குமாக மாறி, மாறி இருவரது திவ்ய சரிதத்தையும் கலந்து சொல்லத் தொடங்கினேன்.
ஓங்காரம் குழந்தை என்றே உன்னுருவில்
வந்ததுவோ!
ஆங்கார சக்தியதே ஆசிமொழி தந்தனளோ!
காமதேனு பாலூட்ட கலைமகளே தாலாட்ட
ஆகமங்கள் சீராட்ட அன்னையின் கை தொட்டில் ஆட்ட
காமாட்சி காதில் வந்து கதைகள் ரசிக்கச்
சொல்லினளோ!
கலகல சிரிப்பினில் அன்னை கானமழை
பொழிந்தனளோ!
உதைக்கும் பாதங்களை உலகமே வணங்குமல்லோ!
காத்திருக்கும் நாளை அல்லோ
காமகோடி பீடமல்லோ!
அனுஷம் நட்சத்திரமோ! அவதாரம்
சரித்திரமோ!
ஆடல் அரசன் – திரு ஆடல்களில் நீயும்
ஒன்றோ!
ஆதி சங்கரர் அருளின் சேதியென்ன கொணர்ந்தாயோ!
ஆராரோ! ஆரிரரோ! ஆரிரரோ!
ஆராரோ!
தட்சிணா மூர்த்தியோ!
சனாதனக் கீர்த்தியோ!
தருமத்தின் குறைகள் கண்டு தான் எடுத்த அவதாரமோ!
ஆராரோ! ஆரிரரோ! ஆரிரரோ! ஆராரோ!”
இப்படியாக குழந்தை சுவாமி நாதன் (மஹா பெரியவாளின் பூர்வாசிரமப் பெயர்) தொட்டிலில் துயில் கொள்ளும் அழகுக்கு ஒரு தாலாட்டுப் பாட்டுப் போட்டிருந்தேன். இதைக் கேட்டதும், மஹா பெரியவாள், என்னைத் தொட்டிலில் போட்டு, தாலாட் டுப் பாடி தூங்கப் பண்ணிட்டியே! ” என்று சொல்லிச் சிரித்தார்.
பெரியவாளின் பால பருவத்தைப் பற்றிச் சொல்லும்போது,
நடித்தாரே!
நாடகம் தனில் அவர்
நடித்தாரே!
உலக நாடகம் நடத்திட வந்தவர் நடித்தாரே!
என்று பல்லவியும், சரணமாக
கடவுள் கொடுத்தது மானிட வேடம்!
கல்விக்கூடத்தில் ‘கிங் ஜான்’ வேடம்!
இன்றிவர் படித்தது இங்கிலீஷ் பாடம்!
எதிர்பார்த்திருக்குது காமகோடி பீடம்!
(நடித்தார்)என்று சொன்னேன்.
உடனே மஹா பெரியவா, இதெல்லாம் நோக்கு எங்க கெடச்சுது?” என்று கேட்டார். பெரியவா பத்தின புஸ்தகத்தை படிச்சு தெரிஞ்சுக்கிட்டேன்” என்று சொன்னேன்.
மேற்கண்ட வரிகளில் சொல்லப்பட்ட விஷயம் எல்லா பக்தர்களுக்கும் தெரியுமா என்று எனக்குத் தெரியாது. பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்த போது, மாணவன் சுவாமிநாதன் மஹா புத்திசாலி. ஆரம்பப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது, பள்ளிக் கூடத்துக்குப் பள்ளிக்கூட உதவி ஆய்வாளர் வருகை புரிந்தபோது, உயர் வகுப்பு மாணவர்களுக்குரிய ஆங்கிலப் பாடப் புத்தகத்தைக் கொடுத்து, படிக்கச் சொன்னபோது, அபாரமாகப் படித்துக் காட்டிய சுவாமிநாதனது திறமையைப் பார்த்து, வியந்த அதிகாரியின் உத்தரவின் பேரில் சுவாமிநாதனுக்கு டபுள் புரமோஷன் வழங்கப்பட்டது.
பத்து வயதில், திண்டிவனத்தில், கான்வென்ட் பள்ளியில் ஃபோர்த் ஃபாரம் படித்துக் கொண்டிருந்தபோது, ஷேக்ஸ்பியர் எழுதிய ‘கிங் ஜான்’ நாடகத்தை பள்ளிக்கூடத்தில் நடத்த ஏற்பாடு செய்தார்கள். அந்த நாடகத்தின் முக்கியமான ஆர்தர் இளவரசர் கதாபாத்திரத்தில் நடிப்பதற்குப் பொருத்தமான மாணவன் என்று பள்ளிக்கூடத்தின் தலைமை ஆசிரியர் சுவாமிநாதனைத் தேர்ந்தெடுத்தார்.
இரண்டே நாள் ஒத்திகையில், தன்னைத் தயார்ப் படுத்திக் கொண்டு, ஆர்தர் இளவரசராக அற்புதமாக ஷேக்ஸ்பியரின் ஆங்கில வசனங்களைப் பேசி அனைவரது பாராட்டுக்களையும் பெற்ற பெருமைக்குரியவர் மஹா பெரியவா.
இதைத்தான் நான் வில்லுப்பாட்டில் சொல்லும் போது நடித்தார்.. நாடகம்தனில் அவர் நடித்தார்!… உலக நாடகம் நடத்திட வந்தவர் நடித்தார்! கடவுள் கொடுத்தது மானிட வேடம்! கல்விக்கூடத்தில் ‘கிங் ஜான்’ வேடம்” என்று சொன்னேன்.
இதில் விசேஷம் என்னவென்றால், மானிட வேடம், கிங் ஜான் வேடம் போன்ற வார்த்தைப் பிரயோகங்களை மிகவும் ரசித்து, எங்க! அதை இன்னொருதரம் சொல்லு” என்று கேட்டார். சந்தோஷமாக அந்த வரிகளைப் பாடிக் காட்டினேன்.
இந்த வரிகள் எந்த அளவுக்குப் பரவலாக ரசிக்கப் பட்டது என்பதற்கு இன்னொரு பெருமைமிகு உதாரணம், ஒருமுறை எம்.எஸ். அம்மாவை சந்தித்த சமயத்தில், அவர் ஒரு குழந்தையைப் போல, நீங்க பெரியவா கதைய வில்லுப்பாட்டுல சொன்னபோது, ஒரு பாட்டை ரெண்டு தடவை சொல்லச்சொல்லி கேட்டாளாமே? அதைச் சொல்லுங்க” என்று கேட்க, ‘இதுவும் அந்த மஹா பெரியவாளோட அனுக்கிரஹம்’ என்று சந்தோஷப்பட்டு, அந்தப் பாட்டை நான் சொன்னேன். அவர் கண் களை மூடி, கரகோஷம் செய்து, இந்தப் பாட்டைக் கேட்கிறவா நிச்சயம் உருகித்தான் போயிடுவா!” என்று சொன்னதோடு, பெரியவா பாதத்த கெட்டியா பிடிச்சுண்டிருக்கேள்! அவரோட அனுக்கிரஹத்துல அமோகமா இருக்கணும்!” என்று வாழ்த்தினார்.
இதற்குள், பங்காருப்பேட்டையில் கதை கேட்பதற்குத் திரளான கூட்டம். நான், மடத்தில் பெரியவா முன்னால் கதை சொல்லிக் கொண்டிருக்கும் தகவல் கிடைத்ததும், அங்கே நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தவர்கள், அறிவித்தபடி வில்லுப்பாட்டு நிகழ்ச்சியை, ஏழு மணிக்கு ஆரம்பிப்பதற்கில்லை. சுப்பு ஆறுமுகத்துக்கு மடத்தில் கதை சொல்லச் சொல்லி உத்தரவாகி இருக்கு. அதை முடித்துவிட்டு, அவர் இங்கே வருவார். அவர் வந்த பிறகு வில்லுப் பாட்டு புரோகிராம் ஆரம்பமாகும்” என்று அறிவித்து விட்டார்கள்.
மடத்தில் கதை சொல்லி முடித்துவிட்டு, நான் பக்திப் பிரவாகத்தில் பெரியவாளைப் பற்றி திருப்புகழ் சந்தத்தில் ஒரு ஆசுகவி பாட, ஆறுமுகம், என்னை ஆறுமுகம்னு பாடறானே!” என்று சொல்லி ஆசீர்வதித்ததை இன்று நினைத்தாலும் மெய்சிலிர்க்கும்.
(அருள் பொழியும்)
“இதெல்லாம் நோக்கு எங்க கெடச்சுது?” -பெரியவா அருளே அறிவே அமுதே! – சுப்பு ஆறுமுகம்
Popular Categories



