“கா…கா….ங்கிறா…அப்படீன்னா என்ன அர்த்தம்?”
(காப்பாற்று,காப்பாற்றுன்னு அர்த்தம்-பித்ருக்கள் எல்லாரும் காக ஸ்வரூபமாக வருவதாக ஐதீகம்.)
(அத்வைதம் இவ்வளவு எளிதா? அத்வைதம் ஆசிரமங்களில் மட்டும் இல்லை; அடுப்பங்கரையிலும் இருக்கு.)
கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-142
தட்டச்சு-வரகூரான் நாராயணன்
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்
ஒரு பக்தையுடைய கவலை மிகவும் விநோதமாக இருந்தது.
“காக்கை nஉபத்திரவம் தாங்க முடியல்லே. தெருவில் போகும்போது தலையில்வந்து உட்கார்ந்து கொள்கிறது. தினமும் இப்படியே நடக்கிறது . மனசுக்கு ரொம்ப வேதனையாயிருக்கு.”
நடுத்தர வயது அம்மையாரின் இந்த சொற்களை கேட்டு மௌனமாக இருந்தார்கள் பெரியவாள்.
“ஒரு பெண் கல்யாணத்துக்கு இருக்கா.. ரெண்டு பசங்கள் படிச்சிண்டிருக்கா.. அநாதையாப் போயிடுமோன்னு கவலையாயிருக்கு..”
பெரியவாள் சொன்னார்கள்;
“தினமும் காக்கைக்கு சாதம் போடணும்.. தினமும் நல்லெண்ணெய் விளக்குப் போடணும். சனிக்கிழமையன்று சிவன் கோயிலுக்குப் போய் தரிசனம் பண்ணணும்..”
நிம்மதியாகச் சென்று விட்டார் அம்மையார்.
பிறகு தொண்டர்களிடம் பெரியவாள் விஸ்தாரமாகப் பேசினார்கள்.
“நம்ம மடத்துக்கு யானை,பசு,பூனை,சில சமயம் நாய்,பெருச்சாளி,எலி,குருவி, குரங்குன்னு எல்லாப் பிராணியும் வருது. ஆனால் காகம் மட்டும் வரதில்லே!”
பாணாம்பட்டு கண்ணன் என்ற தொண்டர் சொன்னார்;
“பெரியவா பரமேசுவர ஸ்வரூபம்.அதனால் சனீஸ்வரனுக்கு மடத்துக்குள்ளே நுழையக் கூட பயம்! தன் வாகனத்தைக் கூட அனுப்பறதில்லே!”
பெரியவா புன்முறுவல் பூத்து பிறகு சொன்னார்கள்;
“அகத்திலே காக்காக்குச் சாதம் போடுகிற போது காக்காய்,காக்காய்….காகம்,காகம்…வா வா -ன்னு கூப்பிடறதில்லே, அப்படீத்தானே?”
“ஆமாம்..”
“என்ன சொல்றா?”
“கா….கா….ங்கிறா…”
“அப்படீன்னா என்ன அர்த்தம்?”
எல்லாரும் விழித்தார்கள்.
“காக்கா…சாப்பிட வா..ன்னு அர்த்தம்” என்று ஒரு தொண்டர் கூறினார்.
“அதுதான் எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கே! வேற விசேஷ அர்த்தம் உண்டோன்னு கேட்டேன்.”
எல்லாரும் மௌனமாக நின்றார்கள்.
“கா….கா…ன்னா…காப்பாற்று,காப்பாற்றுன்னு அர்த்தம். பித்ருக்கள் எல்லாரும் காக ஸ்வரூபமாக வருவதாக ஐதீகம்.
கா…கா…ன்னா…பித்ருக்களே! எங்களை ரட்சியுங்கள் என்று அர்த்தம் சொல்லலாமில்லையா?”
தொண்டர்கள் பிரமித்து நின்றார்கள்.
“அது மட்டுமில்லே. பகவான் எல்லா ஜந்துக்களிடமும் ஆத்மாவா இருக்கான் .காக்கையிடமும் இருக்கத்தானே செய்வான்? பகவானுக்கு நைவேத்யம் பண்ணினால், அவன் சாப்பிடுவதை நம்மால் பார்க்க முடியல்லே. அவனே காகமாக வந்து, நாம் போட்ட சாதத்தைச் சாப்பிடுவதைப் பார்க்க முடிகிறது. ஏதோ ஒரு ஜீவன்.. வினைப் பயனாக, காக்கையாப் பொறந்திருக்கு. அந்த ஜீவனுக்கு – நமக்குள்ளே இருக்கிற அதே ஆத்மாவுக்கு – ஸ்வரூபம் வேறே -சாதம் போடுகிறோம்.இது அத்வைதம் தானே?”
அத்வைதம் இவ்வளவு எளிதா? அத்வைதம் ஆசிரமங்களிலமட்டும் இல்லை; அடுப்பங்கரையிலும் இருக்கு.
“காக்கை, குருவி எங்கள் ஜாதி!” பாரதி, ஓர் அத்வைதி,பரமஞானி



