
திருமலை திருப்பதி தேவஸ்தானம் தற்போது பெருமாளை தரிசிக்க வரும் பக்தர்கள் ஒவ்வொருவருக்கும் இலவச லட்டு வழங்கும் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
புத்தாண்டுப் பரிசாக 2020 ஜன. 1ஆம் தேதி முதல் திருப்பதிப் பெருமாளை தரிசிக்க வரும் பக்தர்கள் அனைவருக்கும் லட்டு பிரசாதம் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பின்படிபக்தர்களுக்கு இலவச லட்டு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
‘திருப்பதி லட்டு’ பிரசாதத்தை, திருமலைக்கு வருகை தரும் அனைத்து பக்தர்களுக்கும் ஒவ்வொரு நாளும் 80,000 முதல் 1 லட்சம் வரை வழங்க முடிவு செய்யப் பட்டுள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் படி, திங்கள் கிழமை நேற்று தொடங்கி, திருமலையப்பன் கோவிலுக்கு வருகை தரும் அனைத்து பக்தர்களுக்கும் தலா ஒரு லட்டு இலவசமாக வழங்கப்படும்.

தற்போது வரை, திருப்பதி மலைக்கு பாத யாத்திரையாக வரும் பக்தர்களுக்கு மட்டுமே ஒரு லட்டு இலவசமாக வழங்கப்பட்டது. இந்நிலையில் அனைத்து பக்தர்களுக்கும் ஒரு லட்டு இலவசம் என்று அறிவித்துள்ளதன் மூலம், ஒவ்வொரு நாளும் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு 80,000 முதல் 1 லட்சம் லட்டுக்களை தேவஸ்தானம் வழங்க உள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் (டி.டி.டி) கூடுதல் நிர்வாக அதிகாரி (இ.ஓ), ஏ.வி.தர்ம ரெட்டி, கோயிலுக்கு வருகை தரும் அனைவருக்கும், அவர்கள் வி.ஐ.பி.யா அல்லது பொது தரிசனத்தில் வந்த பக்தரா என்பதைப் பொருட்படுத்தாமல் இலவச லட்டு வழங்கப்படும் என்று கூறினார்.

“டிடிடி அறக்கட்டளை வாரியம் திங்கள்கிழமை முதல் இந்தத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. பக்தர்கள் கூடுதலாக லட்டுக்களைப் பெற விரும்பினால், அவர்கள் லட்டு வளாகத்தில் உள்ள கவுண்டர்களை அணுகி தலா ரூ.50 க்கு லட்டுகளை வாங்கலாம். முன்பு நான்கு கவுண்டர்கள் இருந்தன! இப்போது நாங்கள் 12 கவுண்டர்களாக விரிவுபடுத்தியுள்ளோம்” என்றார்.
இதன் மூலம், தற்போது லட்டுக்களுக்கு வழங்கப் பட்டு வந்த மானியத்தை அகற்றவும் முடிவு செய்துள்ளது! மேலும் ஒவ்வொரு லட்டுக்கும் ரூ .50 என்ற நிலையான விலையில் அவற்றை விற்பனை செய்யத் தொடங்கும். ஒவ்வொரு பக்தருக்கும் ஒரு இலவச லட்டு வழங்குவதன் மூலமும், மானியத்தை ரத்து செய்வதன் மூலமும், ஆண்டுக்கு சுமார் 250 கோடி ரூபாய் மிச்சப்படும் என்று தேவஸ்தான செய்திக் குறிப்பு தெரிவிக்கின்றது.
திருப்பதி திருமலையில் பரவலாக மாறியிருந்த லட்டுப் பிரசாத கள்ளச் சந்தையை முடிவுக்குக் கொண்டு வர இந்த நடவடிக்கையை தேவஸ்தானம் எடுத்துள்ளதாம்.
கடந்த ஆண்டு நவம்பரில், தேவஸ்தானத்தின் விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு பிரிவு அதன் 26,000 க்கும் மேற்பட்ட லட்டு தயாரிப்பு ஒப்பந்ததாரர்கள் மற்றும் நிரந்தர ஊழியர்களால் முறைகேடாக விற்பனைக்கு லட்டுகள் பயன்படுத்தப்பட்டதாக ஒப்புக் கொண்டது. நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் போது முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் லட்டுக்கள், கோயிலுக்கு பக்தர்கள் அதிகமாக வரும்போது, ரூ .14 லட்சம் அளவுக்கு முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கூறப் படுகிறது.

திருமலை திருப்பதி தேவஸ்தான வலைத்தளத்தின்படி, 1715 ஆகஸ்ட் 2 ஆம் தேதி லட்டு பிரசாதம் அறிமுகப்படுத்தப்பட்டது! இது தேவஸ்தானத்தின் முக்கிய வருவாய் ஆதாரமாக உள்ளது, அதன் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் பல கோடி ரூபாய்களைச் சேர்த்துள்ளது. திருமலையில் ஒவ்வொரு நாளும் சராசரியாக சுமார் 3 லட்சம் லட்டுக்கள் விற்பனை செய்யப்படுகின்றன என்று மதிப்பிடப்பட்டுள்ளது.



