மறந்த ரெண்டு வில்வ தளமும், மகானின் திருவிளையாடலும்.

மறந்த ரெண்டு வில்வ தளமும், மகானின் திருவிளையாடலும்.

(பக்தை தன்னை வேண்டிண்ட சமயத்துலயே, சரியா நாற்பத்தெட்டு வில்வதளம் இருக்கிற சரத்தை எடுத்து வைச்சது,அவா வந்த சமயத்துல, மறந்து தவறவிட்ட ரெண்டே ரெண்டு தளம் மட்டும் அதுல மிச்சம் இருந்தது.-புல்லரிக்கும் திருவிளையாடல் – தொடர்ந்து படியுங்கள்)


கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன்.
குமுதம் பக்தி-இந்த வாரம் வந்தது.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

ஒருநாள், சந்திரமௌளீஸ்வர பூஜை பண்ணி முடிச்சுட்டு பிரசாதம் குடுத்துண்டு இருந்த சமயத்துல, சிவலிங்கத்து மேல் சாத்தியிருந்த வில்வச்சரம் ஒண்ணை எடுத்தார், மகாபெரியவா. தனக்குப் பக்கத்துல இருந்த அணுக்கத் தொண்டர் ஒருத்தர்கிட்டே அதை கொடுத்தார்.”இந்தச் சரத்துல எத்தனை வில்வ தளம் இருக்குன்னு எண்ணு!”ன்னு சொன்னார்.

சரத்தை பவ்யமா வாங்கிண்ட தொண்டர், அதுல கட்டியிருந்த வில்வத்தை மெதுவா நகர்த்தி ஒவ்வொண்ணா எண்ணினார்.– “பெரியவா… இதுல ரொம்பச் சரியா நாற்பத்தெட்டு வில்வ தளம் இருக்கு!” சொன்னார்.

“சரி நல்லது. இந்தச் சரத்தை எடுத்துண்டுபோய், ஸ்ரீகார்யம் (மேனேஜர்) ரூம்ல, காலண்டர் ஒண்ணு மாட்டியிருக்கே, அதுல சாத்திவை…! அப்படியே இன்னிக்கு என்ன தேதின்னு பார்த்துக் குறிச்சு வைச்சுக்கோ!” உத்தரவு மாதிரி சொன்னார், மகாபெரியவா.

“அப்படியே செய்யறேன் பெரியவா!”ன்னு சொன்ன தொண்டரும் சரி, அப்போ அங்கே இருந்தவாளுக்கும் சரி, பெரியவா எதுக்காக இப்படி ஒரு விஷயத்தைச் செய்யச் சொன்னார்னு தெரியாது. ஆனா, மகாபெரியவா அப்படிச் சொன்ன அதேசமயத்துல, காஞ்சிபுரத்துல இருந்து கிட்டத்தட்ட ரெண்டாயிரம் மைலுக்கு அப்பால இருக்கிற டெல்லியில ஒரு சம்பவம் நடந்தது.

பெரியவாளோட பக்தர் கும்பம் ஒன்று டெல்லியில் இருந்தது.அவா பல வருஷத்துக்கு முன்னால ஒரே ஒரு தரம் தான் பெரியவாளை தரிசனம் செஞ்சிருந்தா. ஆனா, ஒவ்வொரு நாளும் தினமும் கார்த்தால எழுந்ததும் மகாபெரியவாளை மனசாரக் கும்பிடுவா. அதேமாதிரி ராத்திரியிலயும் மகாபெரியவா படத்து முன்னால நமஸ்காரம் பண்ணிட்டுதான் தூங்குவா.

இந்த மாதிரி இருந்த பக்தர் குடும்பத்துக்கு, ஏதோ பகவானோட சோதனை மாதிரி ஒரு பிரச்னை வந்தது. அந்த பக்தரோட ஆத்துக்காரிக்கு சாப்டது ஜீரணம் ஆகறதுல ஏதோ சங்கடம் ஏற்பட்டது. எதை சாப்டாலும் குமட்டிண்டு வெளியே வந்தது.

பித்தமா இருக்கலாம்…சாப்டது ஒத்துக்கலை போல இருக்கு அப்படின்னு ஒருவாரத்துக்கிட்டே சரியா கவனிக்காம இருந்தா அவா. கிட்டத்தட்ட பத்துநாளைக்கு அப்புறமும் அந்த உபாதை தொடர்ந்ததும்தான் கொஞ்சம் பயம் எட்டிப்பார்த்தது அவாளுக்கு. அதைவிட முக்கியம்; ஆரம்பத்துல சாதம் சாப்டா மட்டும்தான் குமட்டல் வந்த நிலை மாறி, தாகத்துக்கு தீர்த்தம் குடிச்சாலும்கூட குமட்டிண்டு வாயிலெடுக்கிற அளவுக்கு நிலைமை மோசமாயிடுத்து.

டாக்டர் கொடுத்த மருந்து மாத்திரைகளை, சாப்பிட்டபிறகும் குமட்டல் தொடர்ந்ததுல ரொம்பவே பயந்து போய்ட்டா பக்தரின் மனைவி. மறுநாள் டாக்டர்கிட்டே போய், எல்லா டெஸ்டும் செஞ்சு பார்த்துடலாம்னு மனைவிகிட்டே சொன்னார் பக்தர்.

அந்தப் பெண்மணிக்கு அதுக்கு அப்புறம் தூக்கமே வரலை. மறுநாள் டாக்டர் என்ன சொல்வாரோங்கற பயத்துலயே உட்கார்ந்துண்டு, மகாபெரியவா படத்தையே பார்த்துண்டு இருந்தா.முன்னால நின்னு வேண்டிண்டும் இருந்தா.

“டாக்டர் எனக்கு ஒண்ணும் இல்லைன்னு சொல்லிட்டா, நான் காஞ்சிபுரம் வந்து உங்களை தரிசனம் பண்றேன்!”னு வேண்டிண்டா.

அப்போ,அவ மனசுக்குள்ளே, “பயப்படாதே நான் இருக்கேன், நீ தினமும் சுவாமியை வேண்டிண்டு,வில்வ தளம் ஒண்ணை உள்ளுக்கு எடுத்துக்கோ…நாற்பத்தெட்டு நாளைக்கு மறக்காம வில்வத்தை சாப்டு!” அப்படின்னு சொன்ன மாதிரி தோணியிருக்கு.

கணவரோட டாக்டர்கிட்டே போனவாளுக்கு எல்லா டெஸ்டும் பண்ணிட்டு, “பெரிசா பிரச்னை எதுவும் இருக்கிற மாதிரி தெரியலை.இன்னும் கொஞ்ச நாளாகட்டும். வேற ஏதாவது சிம்ப்டம் தெரிஞ்சா அப்புறம் வேற டெஸ்ட் எடுத்துப் பார்க்கலாம்”னு சொல்லி சத்து மாத்திரைகளை மட்டும் எழுதிக் குடுத்து அனுப்பிட்டார் டாக்டர்.

அப்பவே மகாபெரியவா, தன்னைக் காப்பாத்திடுவார்ங்கற நம்பிக்கை முழுசா வந்துடுத்து அந்த அம்மாளுக்கு மறுநாள் கார்த்தாலேர்ந்து தூங்கி எழுந்து ஸ்நானம் பண்ணினதும், முதல் வேலையா, வில்வ தளம் ஒண்ணை பெரியவா படத்து முன்னால வைச்சுட்டு எடுத்து சாப்பிட ஆரம்பிச்சுட்டா.

ஒரு வாரம்…ஒரு மாசம்.. நாற்பது நாள் வேகமாக நகர்ந்தது.’எனக்கா இருந்தது குமட்டலும் கோளாறும்?’னு கேட்கற மாதிரி, அந்தப் பெண்மணி பரிபூரண குணமடைஞ்சு முன்னால இருந்ததைவிடா தெம்பாகவும் உற்சாகமாவும் மாறிட்டா.

ஆச்சு…நாற்பத்தெட்டு நாளைக்கு இன்னும் ரெண்டு நாள்தான் பாக்கி.அந்த சமயத்துல அவா சொந்தக்காரா சிலர், அகத்துல ஏதோ விசேஷம்னு அழைக்க்கறதுக்காக விடியற்காலம்பரவே வந்திருந்தா உறவுக்காரர்களை பார்த்த  சந்தோஷத்துல பழைய விஷயங்களை எல்லாம் பேசிண்டு இருந்தா.அந்த சுவாரஸ்யத்துல அன்னிக்கு எடுத்துக்கு வேண்டிய வில்வ இலையை அந்தப் பெண்மணி எடுத்துக்கலை. மறுநாளும் அதேமாதிரி ஏதோ மறதியில் வில்வத்தை எடுத்துக்கலை, 

மூணாவது நாள்,அதாவது, வில்வம் எடுத்துக்க ஆரம்பிச்ச தினத்தில் இருந்து நாற்பத்து ஒன்பவாது நாள், கார்த்தால எழுந்து காபி போட்டுக் குடிச்ச அந்தப் பெண்மணிக்கு பழையபடி குமட்டல் வர ஆரம்பிச்சுடுத்து பதறிண்டு; டாக்டர்கிட்டே கூட்டிண்டு போனார்,பக்தர்.

“இந்த தடவை இவா வாயிலெடுக்கறப்போ லேசா அதுல ரத்தக் கசிவும் கலந்திருக்கிற மாதிரி தெரியறது! என்ன பிரச்னைங்கறதை டெஸ்ட் ரிசல்டெல்லாம் வந்ததும்தான் சொல்லமுடியும். அடுத்தவாரம் கூட்டிண்டு வாங்கோ!” சொன்னார்,டாக்டர்.

வீட்டுக்குத் திரும்பற வழியல,’அந்தப் பெண்மணிக்கு தான் மகாபெரியவர்கிட்டே வேண்டிண்டதும், நாற்பத்தெட்டு நாள்ல ரெண்டுநாள், வில்வம் சாப்பிட மறந்துட்டதும் ஞாபகம் வந்தது’.விஷயத்தை அகத்துக்காரர்கிட்டே சொன்னா, ” எனக்கு என்னவோ மகாபெரியவா என்னைக் கைவிடமாட்டார்னு தோணறது. நாம ஒருதரம், காஞ்சிபுரத்துக்குப் போய் மகாபெரியவாளை தரிசிச்சுட்டு வரலாமா”-கேட்டா. 

அன்னிக்கு ராத்திரியே புறப்பட்டு, ரெண்டு நாளைக்கு அப்புறம் சென்னை வந்து அங்கேர்ந்து,காஞ்சிபுரம் ஸ்ரீமடத்துக்குப் போனா, அந்தத் தம்பதி.

மகாபெரியவாளை தரிசிக்கக் காத்துண்டிருந்த வரிசையில நின்னா.அவா முறை வந்ததும், மகான் முன்னலா   போய் நின்னா.

அவாளை ஏற இறங்கப் பார்த்த பெரியவா, “என்ன மறுபடியும் குமட்டல் ஆரம்பிச்சுடுத்தா? பயப்படாதே ஒனக்காக ஒரு பிரசாதம் வைச்சிருக்கேன் ! “-சொன்னார்.

பக்கத்துல இருந்த அணுக்கத் தொண்டரைக் கூப்பிட்டார். “அன்னிக்கு ஒரு நாள் வில்வ சரம் ஒண்ணைத் தந்து காலண்டர்ல மாட்டிவைக்கச் சொன்னேனே ஞாபகம் இருக்கா? போய் அதை எடுத்துண்டு வா” சொன்னார்

அப்படியே வில்வ சரத்தை எடுக்கப் போன தொண்டருக்கு, அதிர்ச்சிதான் காத்திருந்தது. அன்னிக்கு நாற்பத்தெட்டு வில்வதளம் இருந்த சரத்துல, இன்னிக்கு ரெண்டு தளம் மட்டும்தான் பாக்கியிருந்தது. மீதியெல்லாம் கட்டின நார்தான் இருந்தது. தயக்கத்தோட அதை எடுத்துண்டு வந்து மகாபெரியவா கிட்டே தந்தார்.

“இது மட்டும்தான் மீதியோ…!” கேட்ட மகான், அந்த இரண்டு வில்வதளத்தையும் தனியா எடுத்து,அந்தப் பெண்மணி கிட்டே குடுத்தார்.”ஓனக்காக எடுத்து வைச்சதுல இதுதான் மீதி இருக்கு,இதை எடுத்துக்கோ சரியாயிடும் !” -சொன்னார்.

பயபக்தியோட அதை வாங்கிண்ட பெண்மணி, அந்த வில்வத்தை கண்ணுல ஒத்திண்டா. மகாபெரியவாளை தம்பதி சமேதரா நமஸ்காரம் செஞ்சா. ஆசிர்வாதம் வாங்கிண்டு புறப்பட்டா.

பக்தை தன்னை வேண்டிண்ட சமயத்துலயே, சரியா நாற்பத்தெட்டு வில்வதளம் எடுத்து வைச்சது, அவா வந்த சமயத்துல மறந்து தவறவிட்ட ரெண்டே ரெண்டு தளம் மட்டும் அதுல மிச்சம் இருந்தது. இப்படியெல்லாம் திருவிளையாடல் பண்ணின மகானோட அனுகிரஹத்துல, அந்தப் பெண்மணி பூரண குணம் அடைஞ்சுட்டாங்கறதை சொல்லணும்னு அவசியம் இல்லையே !..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Latest Posts

spot_imgspot_img

Follow Dhinasari on Social Media

19,157FansLike
374FollowersFollow
64FollowersFollow
0FollowersFollow
2,572FollowersFollow
17,300SubscribersSubscribe
-Advertisement-