பஞ்சாங்கம் வாசிப்பது புத்தாண்டின் முக்கிய அம்சமாகும். பஞ்சாங்கம் வாசிப்பதில் வல்லுநர்கள் புது வருடத்திற்கான பஞ்சாங்கத்தை வாசித்து பலன் கூறுவார்கள். 12 ராசிகளுக்கான பலன்களும், லாப நஷ்ட கணக்கும் படிப்பார்கள். புது வருடத்தின் நிகழ்வுகள் கணித்துச் சொல்லப்படும்.
முந்தைய காலத்தில் தினந்தோறும், பஞ்சாங்கம் படிக்கச் செய்து கேட்கும் வழக்கம் நடைமுறையில் இருந்தது. தினமும் படிக்க முடியாவிடினும், வருடப் பிறப்பு அன்றாவது பஞ்சாங்கம் படிக்கும் இடத்துக்குப் போய், வரவிருக்கும் வருடத்தின் பலாபலன்களைக் கேட்க வேண்டும்.
இதைப் பஞ்சாங்க படனம் எனச் சொல்வார்கள். வருடப் பிறப்பன்று புதுப் பஞ்சாங்கத்தைப் பூஜையில் வைத்து, மாலை நேரத்தில் அதைப் படிக்கும் வழக்கமும் சில வீடுகளில் உண்டு. வீட்டிலுள்ள அனைவரும் கூடி அதைக் கேட்பார்கள்.
காலையில் எழுந்தவுடன் பஞ்சாங்கம் பார்க்கும் பழக்கம் பல ஊர்களிலும் பல இடங்களிலும் உண்டு. இன்றைக்கும் திருப்பதியிலும் கூட வெங்கடேஸ்வர ஸ்வாமி சன்னதியில் பஞ்சாங்கம் பார்க்கும் பழக்கம் இருந்து வருகிறது. ஆகவே பஞ்சாங்கப் படலம் என்பது ஒரு நல்ல காரியம்.
இது வருஷத் தொடக்கத்திலிருந்து ஒவ்வொரு வீட்டிலும், ஒவ்வொரு கிராமத்திலும், நகரத்திலும் எல்லோரும் கூடி அன்றைய தினம் படிப்பதுண்டு. புது வருஷ பிறப்பன்று எந்த சின்ன காரியம் செய்கிறோமா அது, நாள்தோறும் தொடர்ந்து நடைபெறுவதற்காகவும் செய்வதுண்டு.
நாள்தோறும் செய்ய வேண்டும் என்பதற்காகவும், நினைவுக்காகவும் செய்வதுண்டு. இப்படி ஒவ்வொரு நாளும் புத்தாண்டு அன்று போலவே பஞ்சாங்கப் படலம் செய்வது இன்றியமையாதது.
பஞ்சாங்கத்தின் அத்தியாவசியம்
ஒவ்வொரு காரியம் செய்வதற்கும் ஐந்து விஷயங்களைத் தெரிந்துகொண்டு செய்யவேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. எப்படி ஒரு காலண்டரைப் பார்த்து அன்றைய தேதியைத் தெரிந்துகொண்டு பல காரியங்களை நாம் செய்கிறோமோ, அதுபோல் பழங்காலம் முதல் இருந்து கொண்டிருக்கிற ஒரு பழக்கம். திதி, வார, நட்சத்திர, யோக, கரணம் என ஐந்து விதமான விஷயங்களையும் அறிந்து கொண்டு காரியங்களைச் செய்வது பழக்கமாயிருந்து வருகிறது. பஞ்ச அங்கங்களைக் கொண்டது பஞ்சாங்கம். தினமும் இதைப் படிப்பதால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் தெரியுமா?
“திதேஸ்ச ஸ்ரீயமாப்நோதி வாராத் ஆயுஷ்ய வர்தனம்
நக்ஷத்ராத் ஹரதே பாபம் யோகாத் ரோக நிவாரணம்
கரணாத் கார்ய ஸித்திஸ்ச பஞ்சாங்க பலமுத்தமம்”
ஒவ்வொரு நாளும் அதிகாலையில் எழுந்தவுடன், இன்று என்ன திதி? என்று அறிவதால் செல்வம் பெருகும். கிழமையை அறிவதால் ஆயுஸ் வளரும். இன்று என்ன நக்ஷத்ரம்? என்பதை அறிவதால் பாபங்களில் சிறிது குறையும். இன்று என்ன யோகம்? என்பதை அறிவதால் ரோகம் விலகும். கரணம் என்ன? என்று அறிவதால் காரியம் சித்தியாகும்.
ஒவ்வொரு திதிக்கும் தேவதைகள் உண்டு. அந்தத் திதியை நினைத்துக் கொண்டு தேவதையை நினைத்துக் கொண்டு காரியங்களைச் செய்யும் பொழுது அந்த தேவதையினுடைய ஆசீர்வாதம் கிடைக்கும் என்று சொல்வார்கள்.
“திதியேஸ்ச ஸ்ரீப்ரதம் க்ரோக்தம்” திதியை நினைத்துக் கொண்டு செய்தால் ஐஸ்வரியம் கிடைக்கும், அருள் கிடைக்கும் என்று சொல்லுவார்கள். “ஆராதாயுஷ்யவர்தனம்” கிழமைகளை நினைத்துக்கொண்டு செய்தால் அதன் மூலம் அல்பாயுசு இல்லாமல் கிடைக்கக்கூடிய ஆயுசு பரிபூரணமாக இருந்து காரியங்களைச் செய்யமுடியும் என்று சொல்லுவார்கள்.
” நட்சத்திர தர்தே பாபம் ” நட்சத்திர தேவதைகளைப் பிரார்த்தனை செய்து கொண்டு காரியங்களைச் செய்தால் நம்முடைய வாழ்க்கையில் தெரிந்தோ, தெரியாமலோ செய்யக்கூடிய பழக்கங்கள் கூட அகன்று விடும் என்று சொல்லுவார்கள். “யோகாதுரோக நிவாரணம்” யோக தியானத்தின் மூலம் காரியங்கள் செய்தால், இயற்கையினாலும், செயற்கையினாலும் வரக்கூடிய வியாதிகள் கூட குறையும் என்று சொல்லுவார்கள். “கரணா கார்ய சித்திஸ்ச” கரணத் தியானம் மூலம் காரியங்கள் செய்வதினால் எடுத்த காரியம் இடையூறு இன்றி நன்றாக முடியும் என்பார்கள். இப்படி ஐந்து அங்கங்களைக் கொண்டது தான் பஞ்ச காலம் என்று அழைக்கப்படுகிறது.
மாங்காய் பச்சடி
மாங்காய் பச்சடி புது வருடத்தின் சிறப்பு அங்கம் என்பது நாம் அறிந்ததே. மாங்காயின் புளிப்போடு சேர்ந்த துவர்ப்பும், வெல்லத்தின் இனிப்பும், வேப்பம்பூவின் கசப்பும், மிளகாயின் காரமும் சேர்ந்த பச்சடி வாழ்வின் பல சுவைகளை நினைவுறுத்தும் வண்ணமாக அமைகிறது.
இதனை உண்ணுவதன் மூலம் வாழ்வின் பலவிதமான நிகழ்ச்சிகளையும் ஒரே மாதிரி ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை புது வருட ஆரம்பத்திலிருந்தே வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதே இதன் கருத்து. மேலும் இதோடு உவர்ப்பு சுவையும் சேரும்போது அது அறுசுவையாகி மகிழ்ச்சியளிக்கிறது. வருடத்தின் முதல் நாள் போலவே அனைத்து நாட்களும் அறுசுவை நிரம்ப வேண்டும் என்பதற்காகவே இது கடைப்பிடிக்கப்படுகிறது.
வெயில் காலமானதால் அந்தக் காலத்திலே கிராமங்களிலே பானகம், நீர்மோர், சுண்டல் போன்றவற்றையெல்லாம் கொடுத்து பஞ்சாங்க படலத்தை நடத்துவார்கள்.
மேலும், கசப்பும் இனிப்பும் சேர்ந்ததுதான் வாழ்க்கை என்பதை உணர்த்தும் விதமாக, இல்லத்தில் வேப்பம்பூ பச்சடி செய்து சாப்பிடுவார்கள். ஆகவே யுகாதி பண்டிகை, வருஷப்பிறப்பு போன்றவை எல்லாம் ஒரு புனிதமான நல்ல நன்னாள். அன்றைய தினம் அனைவரும் ஸ்நானம் செய்து, புத்தாடை உடுத்திக்கொண்டு சூரிய பகவானை வழிபட்டு ஆரோக்கியமாக இருப்பதற்காகப் பிரார்த்தனை செய்ய வேண்டும்.