October 20, 2021, 12:29 am
More

  ARTICLE - SECTIONS

  புதன் தசைக்கான முழு பலனுக்கும் தரிசிக்க வேண்டிய திருத்தலம்!

  thiruvenkadu - 1

  ஸ்ரீ புதன் ஸ்தலம்.

  அருள்மிகு ஸ்ரீ பிரம்ம வித்யாம்பிகை சமேத ஸ்ரீ ஸ்வேதாரண்யேஸ்வரர் திருக்கோவில்.

  காசிக்கு சமமான ஆறு தலங்களில் ஒன்றானது திருவெண்காடு. இத்தலத்திலுள்ள ருத்ர பாதம் மற்றும் நவகிரகங்களில் ஒன்றான புதன் பகவானை வழிபட்டால் பூர்வ ஜன்ம பாவங்கள் யாவும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

  யுகம் பல கண்ட கோயில் இது. நவகிரகங்களில் ஒன்றான புதன் பகவான் இங்கு வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.

  நரம்பு சம்பந்தமான அனைத்து நோய்களும் தீர்க்கும் தலமாக இது கருதப்படுகிறது.

  “காசியில் இருப்பது விஷ்ணு கயா. இங்கு வழிபட்டால் 7 தலைமுறைகளின் பூர்வ ஜன்ம பாவங்கள் நீங்கும் என்பது ஐதிகம். ஆனால் திருவெண்காட்டிலுள்ள ருத்ர கயாவை வழிபட்டால் காசியைவிட 3 மடங்கு அதாவது 21 தலைமுறைகளின் பிதுர் சாபங்கள் நீங்கும்” என்கிறார்கள்.

  இத்தலத்தில் மூர்த்தி, தீர்த்தம், தல விருட்சம் எல்லாமே மூன்று.

  தல மரம்:
  ஆல், கொன்றை, வில்வம்,அரசு

  தீர்த்தம் :
  முக்குளம் (சூரிய, சந்திர, அக்கினி தீர்த்தங்கள்; முதலில் அக்கினி, பிறகு சூரிய இறுதியாக சந்திர தீர்த்தம் என்றமுறையில் நீராடுவர்.)

  வழிபட்டோர்:
  சம்பந்தர், அப்பர், சுந்தரர்,சேக்கிழார்,பிரம்மன், இந்திரன், வெள்ளையானை, சிவப்பிரியர், வேதராசி, சுவேதகேது, சுவேதன், விஷ்ணு, சூரியன், சந்திரன், அக்னி, அகத்தியர், நாரதர், வியாக்ரபாதர், கிருஷ்ண த்வைபாயனர் முதலியோர்.

  இங்கு வழிபட்ட பிரமனுக்கு அம்பாள் வித்தையை உபதேசித்தாள்; ஆதலின் அம்பாளுக்கு பிரமவித்யாம்பிகை என்று பெயர் வந்தது.

  சிவனின் 64 மூர்த்தங்களுள் ஒன்றான அகோரமூர்த்தியை இக்கோயிலில் மட்டுமே காணலாம். காசியில் உள்ள 64 ஸ்நானக் கட்டடங்களுக்கு இணையான மணிகர்ணிகை ஆறு இங்குள்ளது.

  இங்குள்ள சந்திரத் தீர்த்தம் அருகில் ஆலமர விருட்சத்தின் அடியில் ருத்ர பாதம் உள்ளது. இவ்விடத்தில் சிவபெருமானின் திருவடிகள் வரையப்பட்டுள்ளன. இங்கு முன்னோர்க்கு திதி, தர்ப்பணம் செய்தால் அந்தக் குடும்பத்தினர்க்கு நல்ல பலன்கள் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இங்கு வழிபடுவோர்க்கு 21 தலைமுறைகளின் பிதுர் சாபங்கள் நீங்கி சகல செல்வங்களும் பெறுவார்கள் என்பதை பக்தர்களின் நம்பிக்கை.

  पुधन thiruvenkadu 1 - 2

  திருவெண்காடு.

  மயிலாடுதுறை மாவட்டம்.

  தேவேந்திரன், ஐராவதம் என்கிற வெள்ளை யானை, மஹாவிஷ்ணு, சூரியன், சந்திரன்,அக்னி , ச்வேத கேது, சுவேதன் ஆகியோர் பூஜித்துள்ளனர்.
  உத்தாலக முனிவரின் எட்டு வயது குமாரனான ச்வேதகேதுவின் உயிரைப் பறிக்கவேண்டி யமன் பாசக் கயிற்றை வீசியபோது சுவாமி வெளிப்பட்டுக் கால- சம்ஹாரம் செய்ததாக ஸ்தலபுராணம் சொல்கிறது.

  சலந்தரன் மகன் மருத்துவன்; இறைவனை நோக்கித் தவம் செய்தான், இறைவன் காட்சி கொடுத்து சூலத்தைத் தந்து அதை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ளுமாறு அறியுறுத்தி அருள் செய்தார். ஆனால் மருத்துவனோ அதைத் தேவர்கள் தவம் செய்யவொட்டாதவாறு துன்புறுத்தப் பயன்படுத்தினான். அறிந்த இறைவன் சினந்து நந்தியை அனுப்பினார்; மருத்துவன் மாயச் சூலத்தை அவர்மீது ஏவ, அச்சூலம் நந்தியின் உடலை ஒன்பது இடங்களில் துளைத்துவிட்டுப் போயிற்று. இஃதறிந்த இறைவன் தாமே அகோரமூர்த்தியாக (இத்தலத்தில் சிறப்பு மூர்த்தியாக அகோரமூர்த்தியே உள்ளார்.) வடிவுகொண்டு வந்து அவனை அழித்தார் என்பது வரலாறு. அவ்வாறு அழித்த (மாசி மகத்து மறுநாள்) நாள் ஞாயிற்றுக்கிழமை பூர நட்சத்திரம். இவ்வரலாற்றையொட்டிச் சுவாமிக்கு எதிரில் வெளியே உள்ள நந்தியின் உடம்பில் ஒன்பது துவாரங்கள் இருப்பதை இன்றும் காணலாம்.

  வெளிப்ராகாரத்தில் வடமேற்கு மூலையில், தனி உள் ப்ராகாரத்துடன் பிரம்மவித்யாம்பிகையின் சன்னதி கிழக்கு நோக்கு அமைந்துள்ளது. பிரமனுக்கு வித்தையை உபதேசித்ததால் இப்பெயர் வந்தது. திருநாங்கூரில் மதங்க முனிவரின் புதல்வியாகத் தோன்றிய அம்பிகை, தவம் செய்து. ஈச்வரனைத் திருவெண்காட்டில் மணந்து கொண்டதாகப் பாத்ம புராணம் கூறுகிறது. பின் இரு கரங்களில் தாமரையும், அக்ஷ மாலையும் ஏந்தி, முன்னிருகரங்கள் அபய வரதமாகக் அருட்காட்சி வழங்குகிறாள் அம்பிகை.

  பிரம்மா சமாதி இங்குள்ளது. இவ்வூர் சங்கல்பத்தில் “ப்ரஹ்ம ஸ்மாஷனே” என்று சொல்லப்படுகிறது.

  மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் புதன் திசை என்பது 17 ஆண்டுகள் வரும். இதனால்தான் திருவெண்காட்டில் இருக்கும் புதன் பகவானுக்கு, 17 அகல் தீபங்கள் ஏற்றி வைத்து வழிபட வேண்டும் என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. இந்த முறைப்படி விரதம் இருந்து புதன் பகவானுக்கு இத்திருத்தலத்தில் தீபமேற்றி வழிபட்ட பின்பு, அடுத்து வரும் கால கட்டங்களில் உங்களுக்கு நடக்கப்போகும் புதன் திசையானது அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தி தரும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

  தொழிலில் சிறந்து விளங்க வேண்டும் என்றாலும், கல்வியில் நல்ல முன்னேற்றம் அடைய வேண்டும் என்றாலும், கடன் தொல்லை, தீராத நோய் தீர, குழந்தை வரம் பெற, திருமண யோகம் வர, தீராத பாவங்கள் தீர இத்திருத்தலத்தில் இருக்கும் புதன் பகவானுக்கு 17 தீபங்களை ஏற்றினாலே போதும். எதிர்பாராத அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

  இந்திரன் விருத்திராசுரனைக் கொன்ற பாவத்தை இங்கு திருவெண்காடரை வழிபட்டு நீக்கிக்கொண்டான் இங்கு நடைபெறும் மஹோத்சவம் இந்திர மஹோத்சவம் என்று அழைக்கப்படுகிறது. இந்திரனே வந்து நடத்தி வைப்பதாக ஐதீகம் .

  ஐராவதம்
  இந்திரன் ஐராவதம் என்னும் தன் வெள்ளை யானையின் மேல் பவனி வந்தபோது துருவாச முனிவர் தந்த மாலையை மதியாது வாங்கி, யானையின் மத்தகத்தின் மேல் வைக்க, யானையோ அம்மாலையைக் காலிலிட்டு மிதித்தது. துருவாசர் சினந்து யானையைக் காட்டானை ஆகுமாறு சபித்தார். பின்னர் யானை தவறுக்கு வருந்தி, முனிவரைப் பணிந்து சாபவிமோசனம் வேண்டியது. முனிவர், திருவெண்காட்டீசரைச் சென்று தொழச் சாபம் நீங்குமென்றார். அதன்படி ஐராவதம் திருவெண்காட்டில் சில காலம் காட்டானையாகத் திரிந்தது. பின்னர் திருவெண்காட்டில் ஈசான திசையில் தன் பெயரில் ஒரு தடாகம் அமைத்துச் சிவலிங்கம் ஸ்தாபித்து, வழிபாடியற்றி ஈசன் அருள் பெற்று மீண்டும் இந்திரலோகம் சேர்ந்தது. யானை அமைத்த தடாகம் இன்றும் யானை மடு என்று வழங்குகிறது. யானை வெண்காட்டில் தவமியற்றியதைத் திருஞானசம்பந்தர், “வெள்ளானை தவஞ்செய்யும் மேதகு வெண்காட்டான்” என்றும், யானை வழிபட்டதை “பெரிய உருவத்தானை வணங்கும் வெண்காடே” என்றும், ‘இந்திரன் கயந்திரம் வழிபட நின்ற கண்ணுதல்’ என்றும், யானை அருள் பெற்றதை, ‘அடைந்த ஐராவதம் பணியமிக்க தனக்கருள் சுரக்கும் வெண்காடு” என்றும் பாடுகிறார். திருநாவுக்கரசர் “வெள்ளானை வேண்டும் வரங்கொடுப்பர்” என்று பாடுகிறார்.

  சிவப்பிரியர்
  முற்கல முனிவரின் குமாரரான சிவப்பிரியர் திருவெண்காட்டிற்கு வந்து ஈசனை வழிபாடு செய்து கொண்டிருந்தார். ஒருநாள் அவர் தாமரை மலர்களைக் கொய்து வரும்போது ஐராவதமெனும் யானையால் தாக்கப்பட்டார். அவர் நெஞ்சினுள் அஞ்செழுத்து அழுந்தியிருந்ததால் யானையின் கொம்புகள் அவரைக் குத்தாது யானையின் முகத்தில் அழுந்தி வயிற்றினுட் சென்றது. யானை நல்லுணர்வு பெற்றுச் சிவப்பிரியரிடம் மன்னிப்பு வேண்ட சிவப்பிரியர் அதனை மன்னித் தருளினார். பின்னர் வைகாசி மாதத்து அமாவாசையில் சிவப்பிரியர் சிவஜோதியில் கலந்தார்.
  கந்தப்புராணத் திருவிளையாட்டுப் படலம்
  ‘காழற்று தந்தம் அறஏகி வெண்காட்டில் ஈசன்
  கேழற்ற தாளர்ச்சனை செய்துகிடைத்து வைகும்வேழம்” என்றும்,
  திருவிளையாடற் புராணம் அர்ச்சனைப் படலம்
  “கோடு நான்குடைய வேழம் தானவன் குறைந்த கோட்டைப்
  பாடற நோற்றுப் பெற்ற பதியிது” என்றும் இந்நிகழ்ச்சியைப் பாடுகிறது.

  வேதராசி
  வேதராசி என்ற அந்தணன் ஊருக்குச் செல்லும் போது தான் எடுத்துச் சென்ற கட்டமுதை ஓர் ஆலமர பொந்தில் வைத்தான். அச்சோற்றில் பாம்பொன்று நஞ்சை உகந்தது. அவன் அச்சோற்றினை ஒரு மறையவனுக்கு இட மறையவன் அதனை உண்டு மாண்டான். வேதராசியைப் பிரம்மஹத்தி தோஷம் தொடர்ந்தது. அவன் திருவெண்காட்டை அடைந்ததும் அது அவனை விட்டு நீங்கியது. வேதராசி வெண்காட்டீசனை வழிபட்டு எமதூதரிடமிருந்து தப்பி இறையடி நீழலை எய்தினான்.

  சுவேதகேது
  உத்தால முனிவரின் புத்திரராகிய சுவேதகேது எட்டு வயதுடன் தம் ஆயுள் முடியுமென்பதை உணர்ந்து திருவெண்காட்டிற்கு வந்து சிவபூசை செய்து கொண்டு இருந்தார், எட்டாம் வயது முடியும் நாளில் எமன் வந்து சுவேதகேதுவின் மேல் பாசத்தை வீச, சிவபூசை தடைப்படுகிறதே என அவர் வருந்த சிவபெருமான் வெளிப்போந்து எமன் வலியை அழித்தருளினார். பின்னர் சுவேத கேது திருவெண்காட்டில் சில காலமிருந்து இறைவனின் ஆடல் கண்டபின் அவன் திருவடியிற் சேர்ந்தார். சம்பந்தர் ‘வெங்காலன் உயிர் விண்டபினை’ என்று இவ்வூர்ப் பதிகத்தில் இதனைக் குறிப்பிடுகிறார்.

  சுவேதன்
  சுவேதன் என்னும் மன்னர் வாதாபி எனும் தன் மகனுக்கு அரசாட்சியை அளித்து விட்டு, தன் மனைவி சுலோசனையுடன் வானப்பிரஸ்தாச்சிரமத்தில் இருக்கையில், தன் மனைவியைப் பிரிந்த பின்னர் சாவில்லாத வரந்தரும் திருவெண்காட்டை அடைந்து தவமும் வழிபாடும் செய்து வந்தார். ஒருநாள் எமன் சுவேதனை அணுகிப் பாசத்தைப் பூட்டினான். சுவேதன் சிவலிங்கத்தைத் தழுவிக் கொண்டான். அப்போது திருவெண்காடர் அங்கே தோன்றக் காலன் அஞ்சி ஓடி வீழ்ந்திறந்தான். சிவபெருமான் சுவேதனுக்குச் சிவசொரூபமளித்தார். பின்னர் தேவர்களின் வேண்டுதலுக்கு இரங்கி எமனையும் எழுப்பியருளினார்.

  சத்தியநல்விரதன்
  சத்திய நல்விரதன் என்பவர் நாகையை ஆண்ட மன்னர். இவன் ஆட்சிக்காலத்தில் சாக்தமத பிராமணர் ஒருவர் பசியோடு வந்த பிராமணருக்குக் கள்ளைக் கொடுத்து விட்டார். கள்ளுண்ட பிராமணரைத் திருவெண்காட்டிற்கு அழைத்து வந்து அவர் செய்த பாவத்தைக் கழுவத் துணை செய்தான் சத்தியநல்விரதன். பின்னர் தன்னரசை மகனிடம் விடுத்து, திருவெண்காட்டி லேயே தங்கி வழிபாடியற்றி இறையருள் பெற்றான்.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,139FansLike
  366FollowersFollow
  38FollowersFollow
  74FollowersFollow
  1,566FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-