
பகவானுடைய அனுக்ரஹத்தைச் சம்பாதிப்பதற்கு முக்கியமான ஸாதனம் பக்தி ஆகும். பக்தி இருந்துவிட்டால் பிறகு வேறெந்த யோக்யதையும் ஒருவனுக்குத் தேவையில்லை.
மனிதனுக்கு, பக்தி என்பது மிகவும் அவசியம், பக்தி பல வகையாக சாஸ்திரங்களில் விளக்கப்பட்டிருக்கிறது. பகவத் கதைகளைக் கேட்பது, அவன் புகழ் பாடுவது, அவனை எப்போதும் நினைப்பது, அவனது பாதஸேவை செய்வது, பூஜிப்பது, வணங்குவது, தாஸ்ய பாவத்துடன் ஸேவை செய்வது, நட்போடு பழகுவது, இறுதியில் தன்னையே அர்ப்பணிப்பது ஆகிய இவையெல்லாம் பக்தியின் வகைகள்.
இவற்றில் எந்த விதமான பக்தியை நாம் வளர்த்துக் கொண்டாலும் அது நமக்கு சிரேயஸ்ஸையே தரும். நமக்கு எந்த விதமான பக்தியும் இல்லை என்றால் அத்தகைய வாழ்க்கை எதற்கும் பயனில்லாத வாழ்க்கை ஆகிவிடும்.
மனிதப் பிறவி என்பது கிடைப்பதற்கு துர்லபமானது என்று எல்லோருக்கும் தெரியும். நம்முடைய சென்ற பிறவியில் நாம் செய்த எண்ணற்ற புண்ணிய கர்மாக்களின் விளைவாகத்தான் இப்போது நமக்கு மனிதப் பிறவி கிடைத்திருக்கிறது.
அப்படியிருக்கையில், இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் ஒருவனுக்கு இருந்தால், பக்தி போன்ற சாதனங்களை ஒருவன் கடைப்பிடித்தல் மிக அவசியமாகும்.