புதன்கிழமை இன்று (ஆக.11) சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜனநாயக மக்கள் எழுச்சிக் கழகத்தின் (இசுலாமிய அமைப்பு) நிறுவனர் ஜனாப் காயல் அப்பாஸ் நூற்றுக்கணக்கான தொண்டர்களுடன் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சிறுபான்மைப் பிரிவான முஸ்லிம் ராஷ்ட்ரீய மன்ச்சில் தனது கட்சியான ஜனநாயக மக்கள் எழுச்சிக் கழகத்தினை இணைத்தார்.
முஸ்லிம் ராஷ்ட்ரிய மன்ச்சின் மாநில தலைவர் ஃபாத்திமா அலி தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில் முஸ்லிம் ராஷ்ட்ரிய மன்ச்சின் நிர்வாகிகளும், பாரதிய ஜனதா கட்சி மற்றும் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் செங்கை சர்புதீன் சிறப்புரையாற்றினார். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் காயல்பட்டனத்தை பூர்வீகமாக கொண்ட காயல் அப்பாஸ் பேசுகையில் , பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் நல்லாட்சியாலும், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் அவர்களின் மத நல்லிணக்க முயற்சிகளாலும் ஈர்க்கப்பட்டு தான் தனது கட்சியினை முஸ்லிம் ராஷ்ட்ரிய மன்ச் உடன் இணைத்ததாகவும், மேலும் பல இஸ்லாமிய அமைப்புகள் முஸ்லிம் ராஷ்ட்ரிய மன்ச் உடன் இணைய இருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்த இணைப்புக்கான ஏற்பாடுகளை முஸ்லிம் ராஷ்ட்ரிய மன்ச்சின் மாநில துணைத் தலைவர் முகவைத் தமிழன் ரைசுதின் செய்திருந்தார்.