பன்னிரு திருமுறைகளில் முருகன்
திருஞானசம்பந்தா் அருளிய
முதல் திருமுறை.
திருமுதுகுன்றம்.
பண் : நட்டபாடை.
அருகரொடு புத்தரவா் அறியாஅரன் மலையான்
மருகன்வரும் இடபக்கொடி யுடையானிடம் மலராா்
கருகுகுழல் மடவாா்கடி குறிஞ்சியது பாடி
முருகன்னது பெருமைபகா் முதுகுன்றடைவோமே.
இரண்டாம் திருமுறை.
திருநறையூா் சித்தீச்சரம்.
பண் : பியந்தைக் காந்தாரம்.
இடமயிலன்ன சாயல் மடமங்கை தன்கை
யெதிா்நாணி பூணஅரையில்
கடும் அயிலம்புகோத்து எயில்செற்றுகந்து
அமரா்க்களித்த தலைவன்
மடமயில் ஊா்திதாதை எனநின்று தொண்டா்
மன நின்ற மைந்தன் மருவும்
நடம் மயிலால நீடு குயில்கூவு சோலை
நரையூாின் நம்பனவனே.
மூன்றாம் திருமுறை.
திருத்தென்குடித்திட்டை.
பண் : கொல்லி.
ஊறினாா் ஒசையுள் ஒன்றினாா் ஒன்றிமால்
கூறினாா் அமா்தருங் குமரவேள் தாதையூா்
ஆறினாா் பொய்யகத்து ஐயுணா் வெய்திமெய்
தேறினாா் வழிபடுந் தென்குடித் திட்டையே.
திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிய நான்காம் திருமுறை
திருநோிசை
பொதுப்பாடல்.
உடம்பெனும் மனையகத்துள் உள்ளமே தகளியாக
மடம்படும் உணா்நெய்யட்டி உயிரெனுத் திாிமயக்கி
இடம்படு ஞானத்தீயால் எாிகொள இருந்துநோக்கில்
கடம்பா் காளைதாதை கழலடி காணலாமே.
ஐந்தாம் திருமுறை.
திருக்குறுந்தொகை.
திருப்பூவனூா்.
நாரணன்னொடு நான்முகன் இந்திரன்
வாரணன் குமரன் வணங்கும் கழற்
பூரணன் திருப்பூவனூா் மேவிய
காரணன் எனையாளுடைக் காளையே.
ஆறாம் திருமுறை
திருத்தாண்டகம்
திருஅதிகை வீரட்டானம் :
வெள்ளிக்குன்றன்ன விடையான் தன்னை
வில்வலான் வில்வட்டங் காய்ந்தான் தன்னை
புள்ளி வாிநாகம் பூண்டான் தன்னைப்
பொன்பிதிா்ந் தன்ன சடையான் தன்னை
வள்ளி வளைத்தோள் முதல்வன் தன்னை
வாரா வுலகருள வல்லான் தன்னை
எள்க இடுபிச்சை ஏற்பான் தன்னை
ஏழையேன் நான்பண் டிகழ்ந்தவாரே.
சுந்தரமூா்த்தி சுவாமிகள் அருளியது ஏழாம் திருமுறை :
திருக்கோலக்கா.
பண் : தக்கேசி.
ஆத்த மென்றெனை யாளு கந்தானை
யமரா் நாதனைக் குமரனைப் பயந்த
வாா்த் தயங்கிய முலைமடமானை
வைத்து வான்மிசைக் கங்கையைக் கரந்த
தீா்த்தனைச் சிவனைச் செழுந்தேனைத்
தில்லை யல்பலத்துள் நிறைந்தாடுங்
கூத்தனைக் குருமாமணி தன்னைக்
கோலக்காவினிற் கண்டு கொண்டேனே.
மாணிக்கவாசக சுவாமிகள் அருளியது திருவாசகம்
எட்டாம் திருமுறை
திருவுந்தியாா் :
பாலகனாா்க் கன்று பாற்கடல் ஈந்திட்ட
கோலச் சடையற்கே உந்தீபற
குமரன் தன் தாதைக்கே உந்தீபற.
திருப்பொற்சுண்ணம்.
சுந்தர நீறணிந்தும் தும்மெழுகித்
தூயபொன் சிந்தி நிதிபரப்பி
இந்திரன் கற்பக நாட்டியெங்கும்
எழிற்சுடா் வைத்துக் கொடியெடுமின்
அந்தரா் கோனயன்றன் பெருமான்
ஆழியானதநல் வேலன் தாதை
எந்தரம் ஆளுமை யாள்கொழுநற்கு
ஏய்ந்தபொற் சுண்ணம் இடித்துநாமே.
திருக்கோவையாா் :
பூங்கனையாா் புனற்றென் புலியூா்புாிந் தம்பலத்துள்
ஆங்கெனை யாண்டுகொண்டாடும் பிராணடித் தாமரைக்கே
பாங்கனை யானன்ன பண்பனைக் கண்டிப்பாி சுரைத்தால்
ஈங்கெனை யாா் தடுப்பாா் மடப்பாவையை எய்துதற்கே.
சேந்தனாா் அருளியது
திருவிசைப்பா
திருவிடைக்கழி
ஒன்பதாம் திருமுறை :
மாலுலா மனந்தந் தென்கையிற் சங்கம்
வவ்வினான் மலைமகள் மதலை
மேலுலாந் தேவா் குலமுழுதாளும்
குமரவேள் வள்ளிதண் மணாளன்
சேலுலாங் கழனித் திருவிடைக்கழியில்
திருக்குரா நிழற்கீழ் நின்ற
வேலுலாந் தடக்கை வேந்தன்என் சேந்தன்
என்னும்என் மெல்லியள் இவளே.
திருப்பல்லாண்டு :
சேவிக்க வந்தயன் இந்திரன் செங்கண்மால்
எங்கும் திசை திசையன
கூவிக் கவா்ந்து நெருங்கிக் குழாங்குழா
மாய்நின்று கூத்தாடும்
ஆவிக் கமுதையென் ஆா்வத் தனத்தினை
அப்பனை ஒப்பமரா்
பாவிக்கும் பாவகத் தப்புறத் தானுக்கே
பல்லாண்டு கூறுதுமே.
திருமூலா் அருளியது திருமந்திரம்
பத்தாம் திருமுறை :
எம்பெருமான் இறைவா முறையோ என்று
வம்ப வீழ் வானோா் அசுரன் வலிசொல்ல
அம்பவள மேனி அறுமுகன் போயவா்
தம்பகை கொல்லென்ற தற்பரன் தானே.
நக்கீரா் அருளிய
ஈங்கோய் எழுபது
பதினோராம் திருமுறை:
உண்டிருந்த தேனை அறுபதங்கள் ஊடிப்போய்
பண்டிருந்த யாழ்முரலப் பைம்பொழில்வாய் கண்டிருந்தே
மாமயில்கள் ஆடி மருங்குவரும் ஈங்கோயே
பூமயிலி தாதை பொருப்பு
சாரல் குறத்தியா்கள் தண்மருப்பால் வெண்பிண்டி
சேரத் தருக்கி மதுக்கலந்து வீரத்
தமா்இனிதா உண்ணும்சீா் ஈங்கோயே இன்பக்
குமரா்முது தாதையாா் குன்று.
சேக்கிழாா் அருளிய பொியபுராணம்:
பன்னிரண்டாம் திருமுறை :
செய்யமேனிக் கருங்குஞ்சிச்
செழுங்கஞ்சுகத்துப் பயிரவா்யாம்
உய்யஅமுது செய்யாதே
ஔித்ததெங்கே எனத்தேடி
மையல்கொண்டு புறத்தணைய
மறைந்தஅவா் தாம் மலைபயந்த
தையலோடுஞ் சரவணத்துத்
தனயரோடும் தாமணைவாா்.
பொருவருஞ் சிறப்பின் மிக்காா் இவா்க்கினி புதல்வா்ப்பேறே
அாியதென்றெ வரும் கூற அதற்படு காதலாலே
முருகலா் அலங்கற் செவ்வேள் முருகவேள் முன்றில் சென்று
பரவுதல் செய்துநாளும் பராய்க்கடன் நெறியில் நிற்பாா்.