ஶ்ரீ முருகன் மானஸ பூஜை
1) த்யானம் ஆவாஹனம்
எந்தையே எம்பிரானே உண்ணுவார்க்கெளிதில் தோன்றும்
கந்தனே கார்த்திகேயா கழலடி போற்றி செய்தேன்
அந்தமாய் அடியேன் உள்ளக் கோயிலில் குடிகொண்டென்றும்
சொந்தமாய்க் கொள்வாய் தணிகை தலமேவிய சரவண பவனே
2) ஆசனம் அர்க்யம்
எங்கிலும் நிறைந்த ஈசா எளியனென் இதயபீடம்
தங்கியே அன்புடன் உன் தாசன்செய் பூஜை ஏற்பாய்
அங்கையில் வேலையுடையாய் அர்க்யம் அங்கீகரிப்பாய்
மங்களவல்லி நாதா மாமறை போற்றும் பாதா.
3) பாத்யம் ஆசமனம்
தாசர்களைக் காத்தருளும் தணிகைமலை நாயகாவென்
பாசங்களைத் தீர்த்தருளிப் பாத்யமிதை ஏற்றருள்வாய்
வாசனைகள்தான் கலந்து வண்ணப் பொற் பாத்திரத்தில்
ஆசமனம் ஏற்றருள்வாய் ஆறுமுக வேலவனே.
4) அபிஷேகம்
பால்தயிரும் பழம்தேனும் பஞ்சாம்ரு தத்துடனே
நால்வகை நதிநீரால் நறுமஞ்சனம் ஆட்டி மேல் துடைத்து
அகில்ஊட்டி மெல்லிய பூம் பட்டுடுத்தி
வேல்முருகா உன்மார்பில் நூலணிந்தேன் ஏற்றருள்வாய்.
5) ஆபரணம்
வன்னபொற்குண்டலங்கள் வகைவகையாய் ஒளிவீச
முனூலும் முத்தாரம் முடிமகுட கேயூரம்
பொன்னும் நவமணியும் புனைந்தபல பூஷணங்கள்
அன்னையினும் அன்புடையாய் ஆறுமுகா ஏற்றருள்வாய்.
6) அலங்காரம்
சந்தனத்தாற் காப்புமிட்டேன் ஷண்முகனே உன் நுதலில்
கந்தமிகம் கஸ்தூரித் திலகமுடன் திருநீறும்
அந்தமிரும் குங்குமமும் அக்ஷதையும் அர்ப்பித்தேன்
பந்தமெல்லாம் தீர்த்துனது பாதமருள் பரம்பொருளே.
7) மலர் மாலை
மல்லிகையும் செண்பகமும் மணமிகுந்த மருக்கொழுந்தும்
அல்லியுடன் தாமரையும் அலரிஇரு வாக்ஷியுடன்
முல்லைமலர் மாலைதனை முருகா உனக்கணிந்தேன்
எல்லையில்லா அருளுடையாய் என்பூஜை ஏற்றருள்வாய்.
8)தூப தீபம்
தாபங்களைத் தீர்த்தருளும் தணிகைமலை நாதனுக்குத்
தூபமுடன் ஆவின்நெய் தீபமும் அர்ப்பித்தேன்
ஆபத்தெல்லாம் தீர்க்கும் அண்ணலே அடியேன்என்
பாபமெல்லாம் தீர்த்துனது பாதமருள் ஷண்முகனே.
9)நைவேதியம்
அறுசுவையோ டன்னமும் ஐந்துவகை பக்ஷியமும்
பருப்புகறி பச்சடியும் பாயசமும் பழவகையும்
நறுமணங் கமழ்ந்திடும் நன்னீரும் நல்கினேன்
விருப்புமுடன் நைவேத்யம் வேல்முருகா ஏற்றருள்வாய்.
10) கற்பூர தாம்பூலம்
வெற்பணங்கிடமிருக்க வேறொருத்தி சடையில்வைத்துச்
சிற்பொதுவில் நடம்புரியும் சின்மயனார் சீர்மகனே
கற்பூர தாம்பூலம்கைக் கொண்டு கருணையுடன்
அற்பன் எனை ஆண்டருள்வாய் ஆதி பரம்பொருளே.
11) ராஜோபசாரம்
வெண்கொற்றக் குடை பிடித்து வெண்சாமரம் வீசிப்
பண்ணுடன் நாட்டியமாடிப் பதினெண் இசைகள்பாடித்
திண்ணிய ரதகஜங்கள் துரகம் ஓராயிரங்கள்
மண்ணிலென் உடல் பொருள் ஆவி மகிழ்ந்துனக்களித்தேன் ஏற்பாய்.
12) புனர் அர்க்யம் = அர்க்ய ப்ரதானம்
காராம் பசும்பாலில் கங்கைநன் னீர்கலந்து
மோரா மலர்தூவி முன்னவனே உன்னடியில்
சீராய் அர்க்யம் அளித்தேன் ஏற்றருள்வாய்
பாராதி அண்டம் படைத்த பராபரனே.
13) பிரார்த்தனா
பரனே நின் பாதமலர் போற்றிசெய்து வேண்டியொரு
வரமே நான் விரும்புகின்றேன் வள்ளிமணவாளா உனை
மறவா திருக்கமதி தந்தெனக்கு இனிஉலகில்
பிறவா திருக்கவரம் பெம்மானே தந்தருள்வாய்.
ஶ்ரீ முருகன் மானஸ பூஜை நிறைவு….