கந்தாடை அண்ணல் சுவாமி குடும்பத்தாருக்கு பஞ்ச சம்ஸ்கார வைபவம் நடந்தபோது, சுவாமி மணவாளமாமுநிகள் தனது பீடத்தில் இருந்து எழுந்து, பொன்னடிக்கால் ஜீயர் சுவாமியை பீடத்தில் உட்கார வைக்க முயன்றார். அவரோ, ஆசார்ய பீடத்தில் அமர மறுத்தார். “எமக்கு உகப்புக்குரிய காரியத்தை செய்யும்” என்றார் மாமுநிகள்.
இதைக் கேட்ட உடனே பீடத்தில் பொன்னடிக்கால் சுவாமி உட்கார்ந்தார். தாம் கையில் வைத்திருந்த சக்கரத்தாழ்வாரையும், பாஞ்சசைன்ய முத்திரையையும், வானமாமலை ஜீயரிடம் கொடுத்து மீதமுள்ளவர்களுக்கு பஞ்ச சம்ஸ்காரம் செய்யுமாறு மாமுநிகள் கூறினார். ஜீயர் சுவாமியும், முதலாவதாக அப்பாச்சியார் அண்ணாவுக்கும், பின்னர் அவரது தம்பி தாசரதிக்கும் பஞ்ச சம்ஸ்காரம் செய்து வைத்தார்.
இருவருக்கும் மந்திர உபதேசங்களைச் சொன்னதும், பீடத்தில் இருந்து வானமாமலை சுவாமி எழுந்து தூரமாக சென்று, அங்கிருந்தபடியே கீழே விழுந்து நமஸ்கரித்து, “தேவரீர் திருவுகப்புக்காக அவர்கள் இருவருக்கும் பஞ்ச சம்ஸ்காரம் செய்தேன். அது போதும் சுவாமி… இனி தாங்களே மேற்கொண்டு செய்தல் வேண்டும்” என்று பிரார்த்தித்தார். ஆசார்யர் – சிஷ்யர் உறவுக்கு இது ஒர் எடுத்துக்காட்டாகும்.





