
— அக்காரக்கனி ஸ்ரீநிதி
लघुता में प्रभुता बसै, प्रभुता से प्रभु दूर l
कीड़ी सो मिसरी चुगै, हाथी के सिर धूर ll
வைணவ மரபில் ‘நைச்சியம் பாவித்தல்’ ‘நைச்சிய அனுசந்தானம்’ என்பது மிக மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. நைச்சியம் என்றால் தாழ்ச்சி. நம்முடைய தாழ்ச்சியை/ குறைகளை எண்ணுதல் மற்றும் அவற்றை உளமாறச் சொல்லுதல் வேண்டும். அடுத்தவர்களை ஒருபோதும் பழித்திடல் கூடாது. நமக்கு அதற்கான உரிமை வழங்கப்படவில்லை.
உண்மையில் இங்கு அனைவரும் நம்மைக் காட்டிலும் நல்லவர்களே! அதிலொன்றும் சந்தேகம் வேண்டாம். இங்கு நான் மட்டுமே தீயவன்.. தீமைகளின் பிறப்பிடம் / இருப்பிடம் நான் மட்டுமே என்று உறுதியாக நம்மை நாமே சொல்லிக் கொள்ள வேண்டும்.
நான் அல்பன் ( சிறியவன் ), துச்சமானவன், தொண்டர்களுக்கெல்லாம் தொண்டன் என்றெல்லாம் எவன் பணிவுடன் சொல்லுகின்றானோ அவன் சர்வ நிச்சயமாக உலகத்தவர்களால் உயர்ந்தவனாகக் கொண்டாடப்படுவான். அவன் எடுத்த காரியங்கள் எல்லாவற்றிலும் வெற்றியும் பெறுகிறான். ஆம்! பணிவினால் உலகை வசப்படுத்தி வெற்றி கொள்கிறான் அவன்.
கவனமாகக் கேளுங்கள். பணிவு இருந்தால் மட்டுமே இறைவன் உங்களுக்கு வசப்படுவான். எளிவருமியல்வினன் எளியவர்களுக்கே தன்னை எழுதிக் கொடுக்கிறான். நம்மை நாமே உயர்ந்தவர்களாக, பெரியவர்களாக, சிறந்தவர்களாக அறிவித்துக் கொள்வதால் பயனேதுமில்லை.
வெற்றுப் பேச்சுகள், போலிப் பூச்சு போன்றதான அறிவு, ஆடம்பரத்தில் விருப்பம் போன்றவைகள் இவ்வுலகத்தில் எந்தவொரு விஷயத்திலும் நம்மை ஒருபோதும் வெற்றி பெறச் செய்யாது. அகங்காரமுடையவன் நிரந்தரமாகத் தோற்றவன். அன்னவர்கள் எங்ஙனம் பெருமானைக் கிட்டிப் பேரானந்தம் பெறலாகும்? இம்மியளவும் அதற்கு வாய்ப்பில்லை.
ஒரு உதாரணத்தின் மூலமாக அடக்கத்துடன் இருப்பதால் வரும் நன்மையயும் பெரியவன் என்கிற இறுமாப்பினால் வரும் கேட்டையும் உங்களுக்குச் சொல்கிறேன். ஒரு சிறிய எறும்பு சர்க்கரைத்தூளினை சுமந்து செல்வதை எப்போதேனும் நீங்கள் பார்த்திருக்கக் கூடும். எறும்பு அளவில் மிகச் சிறியது தான். வருவது போவது தெரியாமல் எளிமையாக நம்மைக் கடந்து செல்லும் ஒரு உயிரினம் தான் அது. ஆனால் அது சர்க்கரையை; இனிப்பினைச் சுமந்து செல்கிறது பாரீர்.
இப்போது ஒரு பெருத்த யானையை நினைவில் கொள்க. அளவில் மிகப் பெரிய உயிரினம் தான். கம்பீரமானதும் கூட. மறுப்பாரில்லை. செருக்கித் திரியும் இயல்புடையது யானை.
அந்த யானையைக் கூர்ந்து கவனியுங்கள். பெரிய துதிக்கையை அதற்குப் பரிசளித்திருக்கிறான் ஆண்டவன். ஆனால் அந்த யானையோ தன்னுடைய நீண்டவப் பெரிய கையினால் தரையில் கிடக்கும் மண்ணை அள்ளித் தன் தலையில் அதாவது மத்தகத்தில் போட்டுக் கொள்வதை வாடிக்கையாகக் கொண்டதாதலால் எப்போதும் அவ்வாறே செய்கிறது.
( ஸ்ரீரங்க கம்ர! கலபம் க ஏவ ஸ்நாத்வாபி தூளி ரஸிகம் நிஷேத்தா – என்பர் ஸ்ரீபராசர பட்டபாதர் )
சிறிய பிராணியான எறும்போ சுவை மிக்க சர்க்கரையைத் தூக்கிச் செல்கிறது. மிகப்பெரிய யானையோ தன் தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொள்கிறது.
எறும்பிடம் அகங்காரமில்லை! எளிமை இருக்கிறது. அதற்கான பரிசாகத் தான் அது சர்க்கரையைப் பெற்றிருக்கிறது. மாறாக யானையோ அகங்காரத்தினால் அறிவிழந்து தன்னையே அழுக்காக்கிக் கொள்கிறது.
இங்கு எறும்பு எளிமையின் குறியீடு. சர்க்கரை ‘மிக்கார் வேதவிமலர் விரும்பும் அக்காரக்கனியான எம்பெருமான்’.
பணிவானவர்களுக்கே பரமன் வசப்படுவான் என்பதைத் தெரிந்து கொண்டீர்களா?!
அகங்கார மமகாரங்களைக் கைக் கொண்டவன் யானையைப் போல் தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டவனாகிறான் என்பதனை உணர்க.
பணிவு என்பது பலவீனம் அன்று.. அது தான் பலம்! உணர்க! உயர்க !