
கோவை: கோவை சரக டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடல் கோவை அரசு மருத்துவமனைக்கு செல்லப்பட்டது. இது குறித்துபோலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விஜயகுமார், 2009ல் ஐபிஎஸ் பேட்ஜில் பணியில் சேர்ந்தவர். நீட் தேர்வு மற்றும் சிவசங்கர் பாபா வழக்குகளில் சிறப்பு விசாரணை நடத்தியவர். காஞ்சிபுரம், கடலூர், நாகை, திருவாரூரில் எஸ்பி.,யாக பணியாற்றியவர். கடந்த ஜனவரி மாதம்தான் கோவை டிஐஜி.,யாகப் பொறுப்பேற்றார். கோவை சரகம் என்பது கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஆகிய நான்கு மாவட்டங்களைக் கொண்டது.
விஜயகுமார் இன்று அதிகாலை தனது வீட்டில் இருந்தபோது மெய்க்காப்பாளரின் துப்பாக்கியை வாங்கி, சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்டது. தகவல் அறிந்து அதிர்ச்சி அடைந்த உயரதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
விஜயகுமாரின் தற்கொலைக்கு என்ன காரணம் என்று விசாரணை தீவிரமாகியுள்ளது. டிஐஜி விஜயகுமாரின் தற்கொலை போலீஸாரிடம் மட்டுமின்றி, தமிழகத்தில் மக்களிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சமூகத் தளங்களில் பலரும் வருத்தங்களைப் பகிர்ந்து கொண்டதுடன், தற்கொலை குறித்து கருத்துகளையும் பகிர்ந்து வருகின்றனர்.
விஜயகுமார் தற்கொலை குறித்து கருத்து வெளியிட்ட பாஜக., மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, கோவை சரக டி ஐ ஜி விஜயகுமார் அவர்கள் இன்று காலை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. மன அழுத்தத்தின் காரணமாக இவர் தற்கொலை செய்து கொண்டதாக கருதப்படுகிற நிலையில், உயர் காவல் துறை அதிகாரி, ஐ பி எஸ் பயின்றவர், மன உறுதி படைத்தவர் திடீரென விபரீத முடிவுக்கு சென்றுள்ளது வியப்பளிக்கிறது. தற்கொலை எந்த பிரச்சினைக்கும் தீர்வல்ல என்றாலும், அலுவல் ரீதியாக அவர் மன அழுத்தத்திற்கு ஆளானாரா என்பது அறிந்து கொள்ளப்பட வேண்டும். தமிழக காவல் துறை அல்லாத சி பி ஐ போன்ற வேறு ஒரு அமைப்பின் மூலம் விசாரணை நடத்த தமிழக அரசு முன் வரவேண்டும். அப்படி செய்வதனால் மட்டுமே தவறுகள் நடந்திருந்தால் களையப்பட வாய்ப்புள்ளது என்பதோடு அலுவல் ரிதியாக அழுத்தங்கள் இல்லையென்பது தெளிவாகும் பட்சத்தில் காவல்துறை மீதான சிறு களங்கம் கூட துடைத்தெறியப்படும். இந்த கோரிக்கையை அரசியலாக பார்க்காமல் அரசின் நிர்வாகத்திற்கான ஆலோசனையாக கருதி செயல்படுத்துவது முதல்வருக்கு சிறப்பை தரும் – என்று குறிப்பிட்டுள்ளார்.