
தல விருட்சம் விண்ணகரங்களில் இல்லை; ஆனால் மாலவனையும் மரத்தையும் வேறுபடுத்த இடமில்லை.
கீதையில் உயர்ந்த பல விபூதிகளைக் கூறிவரும் கண்ணபிரான் மரங்களையும் தம் விபூதிகளாக மதித்துத் தம்மை அவற்றுள் அரச மரமாகக் கூறிக்கொள்கிறார் – அஶ்வத்த₂: ஸர்வ வ்ருʼக்ஷாணாம்…..
மாலவனின் ஆயிரம் நாமங்களுள் அவனுக்குப் பரத்வம் கூறும் நாமங்கள், ஆற்றலை வெளிப்படுத்தும் நாமங்கள், அழகைப் புகழும் நாமங்கள் பலவற்றின் நடுவில் அவனை மரங்களாகவும் சில நாமங்கள் விவரித்துள்ளன-
நயக்ரோத:, உதும்பர:, அச்வத்த: இவை மூன்றும் மரத்தின் பெயர்கள்-
ॐ न्यग्रोधाय नम: । [ஆல்]
ॐ उदुम्बराय नमः। [அத்தி]
ॐ अश्वत्थाय नमः। [அரசு]
ஆல், அத்தி, அரசு மூன்றும் வைஷ்ணவ அம்சம் பொருந்தியன. ப்ரயாகையின் விஷ்ணு ஸாந்நித்யம் பெற்ற வட வ்ருக்ஷம் பித்ருக்களுக்கு நிழலளிக்கிறது – அக்ஷயவட சாயாயாம்….
அத்தி மரத்தால் அச்சுதனுக்குத் திருமேனி அமையலாம் என ஆகமங்கள் கூறும். காஞ்சிப் பேரருளாளரின் பழைய அர்ச்சை அத்திமரத்தால் அமைந்திருந்தது; இன்று புஷ்கரிணிக்குள் உள்ளது. அடுத்த ஆண்டு நாம் அத்திகிரியின் அத்தி வரதரை சேவிக்க இயலும்.கோழிகுத்தியின் நெடிதுயர்ந்த அர்ச்சைத் திருமேனியும் அத்தியால் அமைந்ததே. வேதக் கிரியைகளிலும் அத்திக்கு இடமுண்டு.
திருக்கோவலூர் ஆயனார் தாருவால் ஆன பேரம் என அன்பர் திரு Jagan Nathதெரிவிக்கிறார். ஸாலக்ராம மூர்த்தியான கண்ணபிரானும் இங்குள்ளார்.
ஸ்ரீ ஜகந்நாத புரியின் மூலவர் தாருமயமானவர். ’…..யத் தாரு ப்லவதே ஸிந்தோ: பாரே அபூருஷம்’ [ரிக் வேதம்], வேதம் உருவ வழிபாட்டைச் சொல்லவில்லை என்பர் ஆராய்ச்சியாளர்; நம்பித்தானே ஆக வேண்டும். ‘ஜகந்நாத தாரோ ஹரே..’எனப் பாடுவர். ‘ஏ மரமே’ என நம்மை விளித்தால் நாம் கோபித்துக் கொள்ளுவோம். [தமிழகத்தின் ஜகந்நாத புரி ‘திருமழிசை’. அர்த ஜகந்நாதம் என்பர்]
நெல்லி மரமும் நாராயண ஸாந்நித்யம் பெற்றதே-
கரு நெல்லி மேனியரி மருகோனே
கன வள்ளியார் கணவ முருகேசா
திருவல்லிதாயம் அதில் உறைவோனே!
என அருணகிரிநாதர் பாடுவார்.
ஆமலகீ ஏகாதசி நோன்புகளுள் முக்கியம். ஸ்ரீ ப்ருந்தாவந த்வாதசியன்று நெல்லிக்கும், துழாய்க்கும் விவாஹம் நடத்தி வழிபடுவர், நெல்லி நாராயண வடிவம் என்பதால். தமால வ்ருக்ஷத்தைக் கண்ணன் திருமேனிக்கு உவமை கூறுகிறது பக்தி இலக்கியம் – தமால ஶ்யாமல ஆக்ருதயே நம:
கண்ணன் வளர்ந்தருளியதே யமுனா தீரமான மதுவனப் பகுதியில்தான் – ’கற்றினம் மேய்த்தான், காடுவாழ் சாதியானான், பற்றி உரலிடை ஆப்புண்டு அழுதான்’ என்றன்றோ சிசுபாலன் அவனைப் பலவாறாக ஏசியது.
ராமாயணத்தின் பெரும்பான்மை நிகழ்ச்சிகள் வனத்தில்தான்; ஸ்வாமி நிகமாந்த மஹாதேசிகனின் திரு உள்ளத்தை அணிமணிகளணிந்த நாகரிகமான ஸாகேத ராமனைக் காட்டிலும் வனத்தில் ‘தண்டகா தபோவந ஜங்கம பாரிஜாத’மாகத் திரிந்த தவசியான- சீர ஜடாதரனான இராமபிரானே மிகவும் கவர்கிறார்போல. பாரளந்த பரமன் பக்தர்களுக்குப் பாரிஜாதத்தரு.
வைணவத்தின் உயிர்நாடியான திருவஷ்டாக்ஷரம் தோன்றியதே பதரீவனத்தில்தான்; பதரீவனம் – இலந்தைக் காடு.
பதரி, புரி போன்ற விஷ்ணு ஸ்தலங்களை சைவ புராணமான ஸ்கந்த புராணமும் போற்றுகிறது; ஸ்காந்தத்தின் ஏழு காண்டங்களுள் ஒன்று ‘வைஷ்ணவ காண்டம்’.
‘மாயோன் மேய காடுறை உலகம்’ என்பது தண்டமிழ் இலக்கியம்; நைமிசாரண்யம் நாரண வடிவம் என்பது புராணம். பதினெண் புராணங்கள் மாமுனிவர்களுக்குச் சொல்லப்பட்டது நைமிச வனத்தில்தான்.
சம்பகாரண்யம் ஸ்ரீவித்யா ராஜகோபாலன் உறையும் தலம் – இன்றைய ராஜமன்னார்குடி.



