இலங்கைத் தீவில் சைவ சமயம் வளர்த்த திருமடக் கோயில்கள் உண்டு என்றால், தற்போது வைணவ வழியில் ராமர், அனுமன், கண்ணன் கோயில்களும் ஆங்காங்கே துளிர்விடத் தொடங்கியுள்ளன.
சைவ சமயமும், முருக வழிபாடும், விநாயகர் ஆலயங்களும் என சைவத் தமிழ் தழைத்த புனித பூமியாகத் திகழ்கிறது இலங்கை மண். இதே மண்ணில்தான், ராமனும், அனுமனும், வானரங்களும், சீதையும் பாதம் பதித்து நடந்தார்கள் என ராமாயண இதிகாச வரலாறு எடுத்துக் கூறுகிறது.
இப்படி சக்கரவர்த்தி திருமகன் ராமபிரான், சீதா பிராட்டி, இளையபெருமாள் இலக்குவன், அனுமன் முதலான வானர பக்த சேனைகள், மிகச் சிறந்த வைணவ பக்தனாகத் திகழ்ந்த விபீஷணாழ்வான் ஆகியோரின் திருவடிகள் பட்ட இலங்கை மண்ணில் வைணவ மார்க்கம் சிறிது மறைந்திருந்தது. பௌத்தம் கோலோச்சிய நிலையில், மறைந்திருந்த வைணவ மார்க்கம், தற்போது அங்கிருக்கும் தமிழர்களின் தெய்வத் தமிழ்க் காதலால் மீண்டும் மலரத் தொடங்கியுள்ளது. மட்டக்களப்பு தேற்றாத்தீவில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீபிருந்தாவன கிருஷ்ணன் சந்நிதியில் உள்ளூர் மக்கள் ஆர்வத்துடன் வந்து இனிய தமிழ்ப் பாக்களைப் பாடி, கண்ணனுக்கு விழா எடுத்து, வணங்குகின்றனர். துளசிச் செடிகளும் திருமண் காப்பும் என அந்தப் பகுதியே இனிமை சேர்க்கிறது!




