வேதவல்லி : பாட்டி. இன்னிக்கு நாங்கள் தொண்டரடிப்பொடியாழ்வார் ஆழ்வாருடைய திருமாலை பாசுரம் ஸேவத்துக் கொண்டிருந்தோம், அதில் ஒரு சந்தேகம் . கேட்கலாமா பாட்டி ?
அலமேலு பாட்டி : தாராளமாக கேளம்மா .
வேதவல்லி ; திருமாலையில் 9 ஆம் பாட்டு
*மற்றுமோர் தெய்வமுண்டோ மதியிலா மானிடங்காள்; உற்ற போதன்றி நீங்கள் ஒருவனென்று உணர மாட்டீர். அற்ற மேல் ஒன்றறீயீர், அவனல்லால் தெய்வமில்லை, கற்றினம் மேய்த்த எந்தை கழலினை பணிமிந் நீரே *
இதில் கண்ணனைத் தவிர வேறு தெய்வமில்லை என்கிறாரே பாட்டி ?
ருக்மிணி : எந்த மதமும் சம்மதம் என்கிறார்களே! நமது மதத்தவர்களே சர்ச்சுக்கும் தர்காவிற்கும் போகிறார்களே பாட்டி .!
பாட்டி : பிற மதத்தினரிடம் சகிப்பு மனப்பான்மையோடு இருக்க வேண்டும் என்ற பொருளில் தான் அவ்வாறு கூறியுள்ளார்கள்.
மனிதர்களுடைய பக்தி கூட ஸாத்விகம், ராஜஸம், தாமஸம் என்ற மூன்று வகைப்படும்.
தெய்வத்திற்கேற்ப குணம் மாறுபடும் . அதற்கேற்ப அந்த தெய்வத்தின் பக்தனுடைய வாழ்க்கையும் மாறுபடும்.
ஆண்டாள்: புரியவில்லையே பாட்டி நீங்கள் கூறுவது
அர்ச்சா ரூபத்தை கண்டிப்பவர்கள் அவர்கள். உணவு முறைகளில் ஸாத்வீகம் இல்லை.
நாமோ , பெருமாளுக்கு சேஷபூதராக, கருணையுள்ளத்துடன் வாழக் கற்கிறோம், ” ஶ்ரீமதே ராமாநுஜாய நம:” சொல்லி நெற்றியில் திருமண் அணிகிறோம் .
வேதவல்லி: ஆமாம் . மற்ற மதத்தினரிடம் சகிப்புத்தன்மையோடு இருக்க வேண்டுமே தவிர அவர்களைப் போலவே, அவர்களுடைய ஸம்ப்ரதாயப்படி அந்த தெய்வங்களை வணங்கக் கூடாது என்றே பெரியோர்கள் கூறியிருக்கிறார்கள் அல்லவா?
பாட்டி: ஆமாம் . சில ஆண்டுகளுக்கு பிறகு தம் பிள்ளைகள் பைபிளை மனப்பாடம் செய்யத் துவங்கும் போது பெற்றோர்கள் செய்வதறியாமல் நம்முடைய பெருமாள் தான் சர்ச்சிலும் உள்ளார் என்று கூறி குழந்தையின் மத மாற்றத்திற்கு சப்பை கட்டும் நிலை தான் ஏற்படுகிறது.
ஆத்மாவானது மாயப்ரக்ருதியை வென்று விரஜையை தாண்டி வைகுந்தம் போக வேண்டும் என்ற நோக்கத்தோடு நம் பூர்வர்கள் நமக்கு வைணவத்தை கற்றுக் கொடுத்தார்கள்.
அதை விட்டுவிட்டு ஏதோ ஒரு சாமியை கும்பிட்டு உலகியல் வாழ்க்கையை வெற்றிகரமாக நடத்தினால் போதும் என்று மற்ற ஸம்ப்ரதாயங்களை நாம் பின்பற்ற துவங்கி விட்டோம்.
ஆண்டாள்: நவக்கிரகங்களைச் சுற்றலாமா பாட்டி ?
பாட்டி: நவக்ரஹங்களே ஶ்ரீமந் நாராயணனுடைய அருளால் தானே ராவணனுடைய இம்சையிலிருந்து தப்பின. அவ்வாறிருக்க நாமே ஏன் நவக்ரஹ சன்னதியை சுற்ற வேண்டும்?
ருக்மணி: அப்படியானால் துர்கை …..பாட்டி ?
பாட்டி: ” கலியுகத்தில் உனக்கு புகழும் மேன்மையும் உண்டாகும் ” என்று துர்கைக்கு வரம் கொடுத்தவனே கண்ணன் தானே . ஆனால் நாமோ அம்பிகையை சரண் புகுந்தால் அதிக வரம் பெறலாம் என்று பாதை மாறுகிறோம்
ராக்ஷஸ குணத்தையும் தாமஸ குணத்தையும் தூண்டி விடக்கூடிய தெய்வங்களை வழிபடுவதில் நம் ஸம்ப்ரதாயத்தை சேர்ந்தவர்கள் கூட ஈடுபடத் துவங்கி விட்டனர்
ஆண்டாள்: மற்ற தெய்வங்களை வழிபடுவதால் உடனே பலன் கிடைக்கிறதே பாட்டி !
பாட்டி : அவை நிலையானது இல்லை.எம்பெருமான் அருளை பரிபூரணமாகப் பெற வேண்டுமானால் சிறிதளவாவது ஆசார்ய பக்தி வேண்டும் .
ஶ்ரீராமாநுஜர் காலத்தில் தம்மை அண்டிய ஆயிரக்கணக்கான சீடர்களுக்கும் உணவு முதலிய வசதிகளை கொடுத்து காப்பாற்றினார்.
அவரைத் தேடி அவர் காலடியில் பணம் வந்து கொட்டியது . வேறு எந்த தெய்வத்தை வழிபட்டு அந்த பலன்களை அடைந்தார் ?
திருமகளைத் துதித்து தேசிகர் பொன் மழை பெய்ய வைத்தாரே !
வேதவல்லி : தன்னை நாடி வருகிற , வைணவம் என்றால் என்ன என்றே தெரியாத அனைவருக்கும் கூட பணத்தை வாரிக் கொடுக்கிறானே திருமலை ஶ்ரீனிவாசன்.
பாட்டி: பகவான் , தான் பரதேசியாய் காட்டில் அலைந்தாலும் தன் பக்தர்களை அரசனாக்கி மகிழ்ந்தான்.
வேதவல்லி: ஆமாம் பாட்டி , வானர ஜாதியை சேர்ந்த சுக்ரீவனையும், அசுர குலத்தைச் சேர்ந்த விபீஷணனையும் அரசர்களாக்கினான்
ருக்மணி: குசேலர் கோடீஸ்வரர் ஆனாரே !
ஆண்டாள்: பாண்டவர்கள் சக்ரவர்த்தி ஆனார்கள்.
ருக்மணி : ப்ரஹலாதன் ராஜாவாக ஆனானே !
பாட்டி : திருமங்கையாழ்வாருடைய பெரிய திருமொழியில் பலஸ்ருதி பாசுரங்களில் எம்பெருமான் நாராயணனை நம்பியவர்கள் உலகியலிலும் அரசனைப் போலவே வாழ்ந்து வைகுந்தப் பேறும் பெறுவார்கள் என்று கூறியுள்ளார்.
எத்தகைய சோதனைகள் வந்தாலும் விடாப்பிடியான விசுவாசம் , வைணவ ஸம்ப்ரதாயத்தில் ஊற்றமான ஈடுபாடு கொண்டவர்களை பெருமாள் கைவிடுவதில்லை .
பதிவ்ரதையாய் இருக்கும் பத்தினிக்கு கணவன் சகல க்ஷேமங்களையும் செய்வது போல வைணவ நெறியில் நிலையாக நிற்பவருக்கு பெருமாள் ஒரு குறையும் வைப்பதில்லை
:ஶ்ரீவைஷ்ணவ பரம்பரையில் வந்த நம் முன்னோர்களுடைய கம்பீரம் , அறிவு , ஆற்றல் , செல்வம், மகிழ்ச்சி இவை நமக்கு கிடைக்க வேண்டுமென்றால் ……
ஆண்டாள்: * அவனல்லால் தெய்வமில்லை * என்று நிலையாக இருப்போம். நிலை நிறுத்துவோம்.
அனைவரும் சேர்ந்து: ” குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார் படுதுயராயினவெல்லாம் நிலந்தரஞ் செய்யும் , நீள் விசும்பருளும் அருளொடு பெரு நிலமளிக்கும் வலந்தரும் மற்றும் தந்திடும் பெற்றதாயினும் ஆயின செய்யும் நலந்தருஞ் சொல்லை நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் ‘”.




