தன்னம்பிக்கையின் அடையாளம்: மருத்துவ விஞ்ஞானி சக்திவேல்!
நீட் தேர்வு எழுதி விட்டு தேர்வு முடிவுகளைப் பார்த்துக் குழப்பத்தில் இருக்கும் பெற்றோர் களையும், கவலையோடு இருக்கும் மாணவர்களையும் பார்த்து வருகிறேன்.
இந்த நேரத்தில் பி.எஸ்ஸி; எம்எஸ்ஸி படித்து மருத்துவத்துறை சார்ந்த பிஎச்.டி செய்தால் மருத்துவப் பல்கலைக்கழக ஆராய்ச்சித்துறையில் மருத்துவ விஞ்ஞானியாக உலக நாடுகளில் வேலை பார்க்க முடியும் என்ற கருத்தைப்பதிவு செய்ய விரும்புகின்றேன்.இதற்கு ஆதாரமாகத் திருச்சி, தினமலரில் 3.6.2018 நாளில் வெளிவந்த சக்திவேலின் தன்னம்பிக்கைத் தகவல் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பட்டிவீரன்பட்டி விவாசாயி சடையப்பன் மகன் சக்திவேல் அப்பாவுடன் தோட்டவேலையும் பார்த்துக் கொண்டே +2 பள்ளிப்படிப்பை மண்ணெண்ணை விளக்கில் படித்து 800 மதிப்பெண் பெற்ற எளிய மகன். எந்த வழிகாட்டலும் இல்லாமல் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பி.எஸ்ஸி தாவரவியல் பட்டம் பெற்ற சக்திவேல் சரியான வேலை கிடைக்காமல் பொள்ளாச்சி பிரியாணிக் கடையில் பில் போடும் வேலையில் சேருகிறார்.
அப்போது அவருடன் படித்த வகுப்புத் தோழன் ராஜாமணி, சக்திவேலை விருதுநகர் செந்தில்குமார் நாடார் கல்லூரியில் எம்ஸ்ஸி படிக்க ஊக்கப்படுத்தி விண்ணப்பம் வாங்கி இடத்துக்கும் ஏற்பாடு செய்து விட்டு 800 ரூபாய் பணத்துடன் வரச்சொல்லித் தகவல் தருகிறார்.
உடனே சக்திவேல் ஊருக்குப் போய் அப்பாவிடம் மேலும் படிக்க 800 ரூபாய் கேட்டவுடன் அவர் அலைந்து எப்படியோ 800 ரூபாயைக் கொடுத்து
“ மகனே நீ நல்ல படி” என்று வாழ்த்தி வழியனுப்பி
வைக்கிறார்.
சக்திவேல் தன்னம்பிக்கையோடும் புதிய உத்வேகத்தோடும் ஒரு இலக்கை நிர்ணயத்துக்கொண்டு எம்ஸ்ஸி படிப்பில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முதலிடத்தில் தேர்ச்சி பெற்றுத் தங்கப்பதக்கம் பெறுகிறார்.அக்கல்லூரிப் பேராசிரியர்கள் சக்திவேலை ஆராய்ச்சி(பிஎச்.டி) செய்ய மதுரை காமராசர் பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் இராசமாணிக்கத்திடம் அனுப்பி வைக்கின்றனர்.
அவரும் சக்திவேலின் திறமையைக் கண்டறிந்து மருத்துவத்துறை சார்ந்த இருதயத் தசையியல் நோய் பற்றிய கார்டியோமையோபதியில் (cardiomyopathy) ஆய்வு செய்து டாக்டர் பட்டம்(Ph.D) பெற வைக்கிறார்.
டாக்டர் பட்டம் பெற்றபின் அமெரிக்காவின் சின்சினாட்டி, பல்கலைக்கழக
இதய நோய் சிகிச்சைப் பிரிவின் பேராசிரியராகப் பணியாற்றி இந்தியாவுக்குப் பெருமை சேர்த்து வருகிறார். இவருக்குக் கீழ் ஆறு அமெரிக்கர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இவர்களின் ஆய்வு இருதய தசை நோய் பாதிப்புக்களைத் தடுக்கும் முறைகளைக் கண்டறிவதும்,மரபணுக்களைப் பிரித்துச் சீர்படுத்தும்
வழிகளை ஆராய்ந்தும் வருகின்றனர்.
சக்திவேல் ஒவ்வொரு ஆய்விலும் ஈடுபடும்போது நெஞ்சில் நிற்பவர்கள் அப்பாவும் 800 ரூபாய், நண்பன் ராஜாமணி,ஆய்வு வழிகாட்டி முனைவர் இராசமணிக்கம்.
இது உலக மக்கள் இருதய தசை வளர்ச்சிலியிருந்து காப்பாற்றவும், வராமல் தடுக்கவும் பயன் தரும் ஆராய்ச்சியாகும். எனவே பெற்றோர்கள், தன் குழந்தைகளை இது போன்ற படிப்புகளில் ஈடுபடுத்த வேண்டும்.
காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழகத்தில் உலகத்தரம் வாய்ந்த உயிரி தகவலியல்( Bioinformatics) எம்ஸ்ஸி படிப்பு நடத்தப்படுகிறது. இத்துறையில் புற்றுநோய், சர்க்கரை நோய் மற்றும் மருந்துகளின் பயன்பாடு, வடிவமைப்பு, மருந்துகளின் எதிர்விளைவுகளை ஆராய்ந்து வரும் ஆராய்ச்சித்துறையாகும். இத்துறையிலும் ஆராய்ச்சி மேற்கொண்டால் உலக அளவில் மருத்துவ விஞ்ஞானியாக உயர முடியும்.
தன்னம்பிக்கைத் தகவல் : முனைவர் பேரா., சுபாஷ் சந்திரபோஸ்




