மண்ணிற் பிறந்து மண் ஆகும் மானிடப் பேர் இட்டு அங்கு
எண்ணம் ஒன்று இன்றி இருக்கும் ஏழை மனிசர்காள்
கண்ணுக்கு இனிய கருமுகில் வண்ணன் நாமமே
நண்ணுமின் நாரணன் தம் அன்னை நரகம் புகாள்
– பெரியாழ்வார் திருமொழி.
இந்த பாசுரத்தின் மூலம் என்ன சொல்ல வருகிறார் பெரியாழ்வார்? இல்லற சம்சாரக் கடலில் தத்தளிக்கும் மனிதர்களே இறைவனின் பக்தர்களே உங்களால் குடும்பம், அதற்கான தேவைகள், அதை எப்படி நிறைவேற்றுவது என்பதிலேயே சதா சர்வகாலமும் ஓடிக் கொண்டே இருக்கிறோம். இதில் நம்மால் எப்படி பரம்பொருளான நாராயண நாமத்தை சொல்ல முடியும்?
அல்லது இந்தப் பிரச்னைகளுக்கு இடையே ஞாபகப்படுத்தி நினைவில்தான் வைத்துக் கொள்ள முடியுமா? அதனால்தான் குழந்தை பிறந்த உடனேயே அந்தக் குழந்தைகளுக்கு கேசவன், தாமோதரன், நாராயணன் என்றெல்லாம் பரந்தாமனின் பெயர் சூட்டி மகிழ்கிறார்கள். அப்படி நாராயணன் பெயரை சூட்டுவதனால் என்ன நன்மை கிடைக்கும்? பரம்பொருளான நாராயணனை பெற்றோர்கள் கூப்பிடுகிறார்களோ இல்லையோ, மகன் நாராயணன் பெயரை அடிக்கடி கூப்பிடுவதால் அந்தக் குழந்தையின் பெற்றோருக்கு சொர்க்கம்தான் வாய்க்கும், நரகம் கண்டிப்பாக கிடையாது.
ஏனெனில் தன் பிள்ளையை நாராயணன் கேசவன், ஸ்ரீதரன் என்று அடிக்கடி அழைக்கும்போதே அந்த ஆண்டவனுடைய அருள் தானாக கிடைக்கும் என்று அறுதியிட்டு சொல்கிறார் பெரியாழ்வார்.
ஓம் நமோ வெங்கடேசாய.




