
ஒருத்தி மகனாய்ப் பிறந்துஓர் இரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
தரிக்கிலான் ஆகித்தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே உன்னை
அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

விளக்கம்
———
முந்தைய பாசுரத்தில் தன்னை மங்களாசாசனம் செய்த பெண்களிடம், “பெண்களே! நம் வெற்றிக்கு பல்லாண்டு பாடுதல் என்பது உங்கள் பிறவி நோக்கம். அப்படி இருக்க, நடுக்கும் இந்தக் குளிரில் நீங்கள் உங்கள் உடலைப் பேணாமல், வருத்துவது ஏன்? நீங்கள் விரும்புவது வெறும் பறைதானோ அல்லது வேறு ஏதும் உண்டோ?” என்று கேட்டான். அதற்கு அந்தப் பெண்கள், “பெருமானே! உன் குண விசேஷங்களை நாங்கள் பாடிக் கொண்டு வந்ததால், வருத்தம் இன்றி சுகமாகவே வந்தோம். பறை வேண்டுதலை சாக்காக வைத்து உன்னைக் காண்பதையே பேறாக நினைத்து வந்தோம்” என்கின்றனர் இந்தப் பாசுரத்தில்!
“தேவகி பிராட்டியாகிற ஒருத்திக்கு மகனாக அவதரித்தாய். பின்னர், அவதார காலமாகிய அந்த ஓர் இரவுப் பொழுதில், திருவாய்ப்பாடியில் நந்தகோபரின் திருமாளிகைக்கு வந்து சேர்ந்தாய். அங்கே, யசோதை பிராட்டியாகிய ஒருத்தியின் மகனாக வளர்ந்தாய். அதுவும் கம்சன் கண் படாதவாறு ஒளித்து வளர்க்கப்பட்டாய்.
இப்படி ஏகாந்தமாக வளரும் காலத்தில், அங்ஙனம் நீ வளர்வதைப் பொறுக்க மாட்டாத கம்சன், உன்னை எப்படியாவது கொன்றுவிட வேண்டும் என்று தீங்கு நினைத்தான். கம்சனின் எண்ணத்தை வீணாக்கி, அவன் வயிற்றில் நெருப்பு எனும்படியாக நின்ற நெடுமாலே! உன்னிடத்தில், புருஷார்த்தத்தை யாசித்துக் கொண்டு இங்கே வந்து நின்றோம்.
எங்களுடைய மன விருப்பத்தை நீ நிறைவேற்ற வேண்டும். அவ்வாறு நீ நிறைவேற்றித் தருவாயாகில், பிராட்டி விரும்பத்தக்க செல்வத்தையும் வீர்யத்தையும் புகழையும் நாங்கள் பாடி, உன்னைப் பிரிந்து படுகிற துயரம் நீங்கி, மகிழ்ந்திடுவோம்” என்கிறார் ஸ்ரீஆண்டாள்.
சகடம், கொக்கு, கன்று, கழுதை, குதிரை, விளாமரம், குருந்தமரம் என பல்வேறு பொருள்கள் மூலம், அசுரர்களை அனுப்பியும், பூதனையை அனுப்பியும், விழா நடப்பதென வரவழைத்து குவலயாபீட யானையை ஏவியும், இப்படியாகக் கண்ணபிரானின் நலிவைக் காண கம்சன் செய்த தீங்குகளுக்கு வரையறை இல்லாமல் இருந்ததைப் புலப்படுத்துகிறார் ஸ்ரீஆண்டாள்.
மேலும், எப்படியாவது கண்ணன் கதையை முடித்து, மருமகன் போனானே என்று கண்ணீர் விட்டு அழுது துக்கம் பாவிக்கலாமே என்ற கம்சனின் எண்ணத்தை அவனுடனேயே முடியும்படி செய்துவிட்டானே என்றும் போற்றுகிறார்.
– விளக்கம் : செங்கோட்டை ஸ்ரீராம்