விந்தியம்..
அன்றிரவு உறக்கம் வரவில்லை,..
கோவிந்தன் சொன்னதும் மெய்யோ?ஆச்சார்யனா அவ்வாறு செய்வார்..
அண்ணா…
மெல்லிய குரல் கேட்டு உணர்வு பெற்றார் வைணவம் வாழ்விக்க வந்த வள்ளல்..
என்ன தம்பி..
இதுவே சமயம்.இப்போதே புறப்படு.
ஏதோ கூற முற்பட்ட இளையாழ்வாரைத் தடுத்துத் தனிவழி காட்டினார் எம்பார்..
காரிருள்..
கண்கள் கலங்கக் காலெடுத்து வைத்தார் கார்வண்ணச் சீடர்..
துருவ நக்ஷத்ரத்திற்கு எதிர்ப்புறம் பயணித்தார்..
அன்று அண்ணனோடும் அண்ணியோடும் நடந்தவர் இன்று ஆதரவற்று நடந்தார்..
அன்றிலிருந்து இன்று வரை இருளும் மாறவில்லை காடும் மாறவில்லை..
யுகம் மட்டுமே மாறியிருக்கிறது..
நடந்த கால்களுக்கு ஓய்வு தர சற்றே ஒரு பெரும் வ்ருக்ஷத்தின் கீழே நின்றார்.
அரைச் சந்திரன் மேல் புறம் சாய, சப்த ரிஷிகளும் இடம் மாற,அந்த க்ருஷ்ண பக்ஷ இரவில் தனியே நின்றார் தரணி போற்றப்போகும் தயாளர்..
வ்ருக்ஷத்தின் மறு புறம் பேச்சுக்குரல் கேட்க, நிதானித்தார்…
குரல் நெருங்க அது ஆஜானுபாகுவான ஒரு வில்லி மற்றும் சௌந்தர்யவதியான அவன் மனையாட்டியின் சம்பாஷனை.
தாம் அதில் கவனம் செலுத்தாது ஒதுங்க நினைக்க, அவ்வில்லி நெருங்கினான் அரவுக்கரசை..
வடமொழியில் வினவினான்..
ஸ்வாமி எங்கே இந்நேரத்தில் அதுவும் இக்காட்டில்..
நாவசைத்தார் ஆயிரம் நாவுடையார்..
நாம் தக்ஷிணப்ரதேசம் செல்கிறோம்.. வழியறியாததால் நின்றோம்..
ஓ …அப்படியா…நாம் உமக்கு வழிகாட்டுவோம்..இவள் என் மனைவி….
கை தொழுதார் கடவுளை அடைய உபாயம் கொடுக்கப் போகிறவர்..
சரி.. சற்று இம் மர வேரில் இளப்பாறுங்கள்..விடியலில் பயணப்படலாம்…
மந்த்ரோபதேசம் கேட்டு அவ்வாறே ஒரு வேரில் தலை சாய்த்துப் படுத்தார் பரந்தாமனின் படுக்கையானவர்…
ஆனாலும் உறங்கவில்லை..
இந்நேரம் காசிக்குப் புறப்பட்டிருக்க வேண்டும் ஆனால்..
மீண்டும் வேடுவத் தம்பதியின் சம்பாஷனை கேட்டு அந்நினைவறுத்தார்..
ஏங்க எப்ப விடியும்…
இரண்டு ஜாமம் ஆகும் ஏன்..
இல்ல தண்ணி தாகம்..
சுரைக்குடுவைல இல்லயா..
இல்ல..
சரி காலைல பாப்போம் இப்போ தூங்கு..அந்தச் சாமி முழிச்சிக்கப் போறாரு..
ஆமாங்க..காலைல அவுர பத்திரமா காட்டத் தாண்டிப் போய் வுட்டுடணும்..
சரி செய்வோம்..
இருவரும் உறங்க இராமானுசர் உறங்கவில்லை..
ஆஹா! என்னே இவர்கள் பண்பு ..தமக்குத் தாகம் எடுத்த போதும் நம்மைக் கரை சேர்க்கச் சொல்கிறாரே இந்தத் தாய்.. இவருக்கு நாம் என்ன செய்துவிட முடியும்…
ஆ ..இவர் தாகம் என்றாரே…சரி நாம் விடியலில் இவர்க்கு முன்பாகவே விழித்து தண்ணீர் கொடுக்க வேண்டும் என்று நினைத்து இருந்த போதிலும் உறங்கிப் போனார் உடையவர்…
ப்ரும்ம முஹூர்த்தப் பக்ஷிகளின் சப்தம் கேட்டு கண் விழித்தவருக்கு முதலில் தோன்றியதே அந்த வேடுவத் தாய்க்குத் தண்ணீர் தர வேண்டும் என்பதே..
அவர்கள் இருந்த பக்கம் திரும்ப …அதிர்ச்சியானார்..
அவர்களைக் காணவில்லை..
இருளும் விலகவில்லை..
வழியும் தெரியவில்லை…
நம் கும்ப கர்ணத் தூக்கம் கண்டு அவர்கள் போய்விட்டனர் போலும்..
அடடா…அவருக்குத் தண்ணீர் கொடுக்க நினத்தோமே இப்படி ஆகி விட்டதே…
தம்மையே நொந்தவாறு சில அடிகள் நடந்தார்…
அப்போது அங்கே ஒருவர் எதிர்ப்பட ,அவரிடம் வடமொழியில் தக்ஷிணப்ரதேசம் செல்ல வழி கேட்க, அவரோ செந்தமிழில் விடையளித்தார்…
என்ன சாமி …உங்கள பாத்தா இந்தப் பக்கத்து ஆள் போல தெரீது…வேற பாஷ பேசறீங்க..
அதிர்ந்தார் ஆழ்வார்..
உமக்குத் தமிழ் எப்படித் தெரியும்…
என்ன சாமி …இது கல்வியிற் கரையிலாக் காஞ்சி அல்லவா..நான் வேற என்ன பேசுவேன்…
என்ன காஞ்சியா..
அட என்ன சாமி…
அதோ கெழக்கால பாரு புண்யகோடி…சொன்னவர் சென்றார்..
பார்த்தவர் அழுதார்.. கை தொழுதார்..
ஹே ஹஸ்தீசா!… என்னைக் காண அவ்வளவு தொலைவு வந்தாயா.. தாயே!! தயாபரி..பெருந்தேவி..அம்மா..என்னைக் காக்க அவ்விடத்திலும் எனக்காக ஸ்வாமியிடம் புருஷாகாரம் செய்தாயே… என்னே உன் கருணை.. விந்தியமலை எங்கே ஆனைமலை எங்கே… விந்தியத்திலிருந்து காஞ்சி… நூற்றைம்பது காத தூரம்.. அதுவும் ஓரிரவில்….
ஆயிரம் நாவுடையோர் ஆனாலும் இப்போதுள்ள ஒரு நாவினின்றும் ஒரு வார்த்தையும் வரவில்லை…
அங்கேயே ஸங்கல்பித்துக் கொண்டார்….
மாதா ..மஹாதேவி… இவ்விடத்திலிருந்தே இக்காஞ்சிச் சாலையிலிருந்தே உனக்கு நீர் கொண்டு வந்து தருகிறேன் அம்மா..
சொன்னவாறே கிணறு தோண்டினார்..
தீர்த்தக் கைங்கர்யம் செய்தார் இருபது ஆண்டுகள் இராமானுசர்…
இதோ அன்று நம் ஆச்சார்யனைக் காக்க வில்லேந்திய கோலத்தில் சென்ற நம் இமையோர் தலைவன் இன்றும் நம்மைக் காக்க வில்லேந்தி…..
அநுஷ்டான குள உத்ஸவத்தில்… வேடுவ கோலம் பூண்ட அத்தியூரான்…
- ஆச்சார்யா லக்ஷ்மிநரசிம்மன்