
மகரிஷிகள் நம் சரீரத்தை எவ்வாறு தரிசிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்துள்ளார்கள்.
சாதாரணமாக இந்த உடல் சாசுவதமானது இல்லை என்றும் மலினமானது என்றும் சாஸ்திரங்களில் ஒரு பக்கம் காணப்படுகிறது. மறுபுறம் இந்த உடல் மிகவும் தெய்வீகமானது, யோக சாதனைக்கு உகந்தது, பரமாத்மாவுக்கு ஆலயம் போன்றது என்ற கூற்றும் காணப்படுகிறது.
இவ்விரண்டும் ஒன்றுக்கொன்று எதிரெதிரான கருத்துக்களாக இருப்பதால் இதன் உட்பொருள் என்ன என்பதை அறிய வேண்டும்.
உண்மையில் இந்த உடலின் மீது மோகத்தோடு உடலே சத்தியமானது என்ற பிரமையில் இருப்பவர்களுக்கு முதலில் கூறிய கூற்று பொருந்தும். அதாவது இந்த உடல் நிரந்தரமானதல்ல, கீழான அம்சங்களால் நிறைந்துள்ளது என்று கூறுவது இந்த உடலே அனைத்தும் என்று நினைத்து இந்த உடலை போஷித்து இதற்காக வாழ்வதே உண்மையான வாழ்க்கை என்று மயங்கி இருப்பவர்களுக்காக. இந்த உடலை சுகப்படுத்துவதற்கான முயற்சியில் வாழ்க்கையையே செலவிடுபவர்கள்…. அந்த முயற்சியில் தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் வேறுபாடு தெரியாமல் நடந்து கொள்பவர்கள்… போன்றோருக்காக முதல் வாக்கியத்தை கூறியுள்ளார்கள்.
அடுத்து, இந்த உடல் இறைவனின் நிலையம் என்ற கூற்று நம் சாஸ்திரங்களில் தெளிவாக காணப்படுகிறது.
“தேஹோ தேவாலய ப்ரோக்தோ ஜீவோ தேவ ஸனாதன!” இது பிரசித்தி பெற்ற வேத வாக்கியம்.
தேகத்தை தேவாலயம் என்கிறார்கள் ரிஷிகள். அத்தகைய பவித்திரமான பார்வையில் மனித உடல் பார்க்கப்படுகிறது. இது யாருக்காக கூறப்பட்டது என்றால் இந்த உடலை பௌதீக சுகத்திற்காக கொஞ்சி செல்லம் கொடுத்து வளர்க்காமல், இந்த உடலை ஆன்மிக சாதனைக்கான கருவியாக எண்ணி தெய்வீகத்தை பெறுவதற்கான முயற்சியில் ஈடுபடுபவர்களுக்காக இரண்டாவது வாக்கியம் கூறப்பட்டுள்ளது.
ஏனென்றால் இந்த உடலால் நாம் தேட வேண்டிய எந்த திவ்ய வாஸ்து உள்ளதோ அந்த பரமாத்மா எங்கோ நம் உடலிலிருந்து தொலைவில் மேலுலகத்திலோ அல்லது கீழுலகத்திலோ இல்லை. இந்த உடலிலேயே அவன் இருக்கிறான். நம் உடலுக்குள் இருக்கும் பரமாத்மாவை இந்த உடலோடு நாம் இருக்கும்போதே முயற்சி செய்து காண வேண்டும்.
உடல் எதற்காக உள்ளது என்றால் இந்த உடலுக்குள் உள்ள பரமாத்மாவை தெரிந்து கொள்வதற்காக உள்ளது. அதனை உணர முடிந்தால் பரமாத்மாவின் நிலையமே இந்த நம் உடல் என்ற உணர்வு ஏற்படும். உடனே நம் எண்ணம் அனைத்தும் இறைமயமாக மாறிவிடும். இவ்விதம் பரமாத்மா மயமான எண்ணங்களால் நிறைந்தவுடன், “நம் உடலின் சைதன்யம் எல்லாம் பரமாத்மாவே!” என்ற தெளிவு ஏற்படும்.
அப்படிப்பட்ட நிலையில் இந்த உடல் வெறும் மண்ணாலும் மாமிசத்தாலும் ஆன உடலாக அன்றி ஈஸ்வர சைதன்யத்தோடு கூடியது என்பது புரிபடும். அப்போது இந்த உடல் யோக சரீரமாக மாறும்.
அவ்வாறின்றி வெறும் உலக போகங்களை அனுபவிக்க மட்டுமே உடலை பயன்படுத்தினால் அது போக சரீரம் ஆகிறது. போக சரீரத்தை யோக சரீரமாக தரிசிக்கும் வழிமுறைகளை அழகாக தெரிவிக்கிறார்கள் ருஷிகள்.
இது குறித்து ஒரு மந்திரம் பிரசித்தமாக உள்ளது.
“அஷ்டா சக்ரா நவத்வாரா தேவானாம் பூர் அயோத்யா
தஸ்யாம் ஹிரண்மய கோஸ: ஸ்வர்கலோகோ…..!”
-இது திவ்யமான மந்திரம். ஆசீர்வசனம் கூறும் போது வேத பண்டிதர்கள் இந்த மந்திரத்தை கூறி ஆசீர்வாதம் செய்வார்கள்.
இதன் கருத்து மிகவும் உயர்ந்தது. “தேவானாம் பூஹு அயோத்தியா!” இந்த உடல் தேவதைகளின் பட்டணம் என்கிறார்கள். மனித உடலை அயோத்தியா என்கிறார்கள்.
அயோத்தியா என்றால் பிறரால் ஜெயிக்க முடியாதது, பிறர் படையெடுத்து வந்து வெற்றி பெற முடியாதது என்று பொருள்.
அப்படிப்பட்ட அயோத்தி என்ற பட்டணமே மனித உடல்.
அயோத்தி என்பது வைகுண்டத்தின் மறு பெயர். பரமாத்மாவின் நிலையமான வைகுண்டம் எப்படிப்பட்டதோ மானிட சரீரம் கூட அப்படிப்பட்டதே! பிறர் நுழைய முடியாதது. அதாவது துஷ்டசக்திகள், துஷ்ட எண்ணங்கள் நுழைய முடியாதபடி பாதுகாப்பாக உள்ள புரம் இந்த சரீரம். எப்போது? “தேவாநாம் பூஹு”. இது தேவதைகளின் பட்டணம் என்று உணர முடியும் போது!
இது தொடர்பாக உபநிஷத்தில் பல அம்சங்கள் உள்ளன. அவற்றை யோக சாஸ்திரத்தோடு சேர்ந்து பார்க்கையில் அற்புதமான சில உண்மைகள் வெளிப்படும்.
உடம்பின் ஒவ்வொரு அவயமும் அவற்றிலுள்ள சக்தியும் – இவற்றைப் பற்றி நாம் ஆராய்ந்தால்… உதாரணத்திற்கு நம் கையை எடுத்துக் கொள்வோம். உள்ளங்கை, பொருளைப் பிடித்துக் கொள்ளவும் பிரிக்கவும் மூடவும் கூடிய செயல்களை செய்யக்கூடியதாக உள்ளது. இத்தகைய சக்தி ஒவ்வொரு அவயவத்திலும் இருக்கிறது. கண்களை ஆதாரமாகக் கொண்டு தரிசன சக்தி இருக்கிறது. செவியை ஆதாரமாகக் கொண்டு ஸ்ரவண சக்தி இருக்கிறது. அந்த சக்தி வேலை செய்யாவிட்டால் அந்தந்த உறுப்புகள் இருந்தும் கூட வீணே!
அதனால் இந்திரியங்களை விட அவற்றை வேலை செய்யத் தூண்டும் சக்தி மிக முக்கியம். அந்த சக்தியை நாம் உருவாக்க இயலாது. அவை நமக்கு இறைவனால் அருளப்படுகிறது. அந்த சக்திகளையே தேவதைகள் என்கிறோம். அதனால் உறுப்புகளோடு கூடிய இந்த உடல் தேவதைகளின் சக்தியால் நடக்கும் ஒரு பட்டணம் என்று கூறுகிறார்கள்.
இந்த உடலுக்கு எட்டு சக்கரங்கள் ஒன்பது துவாரங்கள் உள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்கள். எட்டு சக்கரம் என்றால் அஷ்ட தாதுக்கள் என்று பொருள். சப்த தாதுக்கள் அனைவரும் அறிந்தவையே! தோல், மாமிசம், அஸ்தி, மஞ்ஜை, ரக்தம், மேதஸ்ஸு, சுக்லம் – இவ்விதம் கூறப்படும் ஏழோடு கூட பிராணசக்தி எட்டாவதாக கூறப்படுகிறது. சக்கரம் என்றால் அசைவுக்கு காரணமானது என்று பொருள். இந்த எட்டு தாதுக்களும் நம் உடலில் அசைவை உண்டாகின்றன.
ஒன்பது துவாரங்கள் உள்ளன இந்த பட்டணத்திற்கு. எட்டு சக்கரங்கள், நவ துவாரங்கள், அவயவங்களில் தேவதைகளின் சக்திகள் – இவை அனைத்தும் கொண்ட தேவதைகளின் பட்டணம் மனித உடல்!
தலைநகரில் ஒரு கோட்டை இருக்கும். அந்தக் கோட்டையில் அரசன் இருப்பான். மனித உடல் ராஜதானி நகரமாக இருக்கையில் உள்ளே உள்ள கோட்டை ‘ஹிரண்மயகோசம்!’. அதாவது ஒளி பொருந்திய சொர்க்கலோகம். அதுவே ஆனந்தமய கோசம். அதன் உள்ளே இருக்கும் ஈசுவரனின் நிவாசம் “சிதாகாசம்”. அது சைதன்யமாக இருக்கிறது.
உள்ளே உள்ள பரமாத்மாவின் தத்துவம் அமிர்தம். அவரைச் சுற்றிலும் அமிர்தம் உள்ளது. அவரிடம் இருக்கும் அமிர்த தத்துவமே சுற்றிலும் வியாபித்துள்ளது. இதனை உணர்பவரின் ஆயுளும் கீர்த்தியும் பெருகி மேலும் பல நன்மைகளையும் பெறுவர். இது இந்த மந்திரத்தின் கருத்து.
இதனை பொறுத்து, நமக்கு அருள் புரியும் தெய்வம் நம் உடலிலேயே இருக்கிறான் என்றும் நாம் அந்தர்முகமாக பார்வையை செலுத்தி அவனை தியானித்தால் அவனே இந்த உடல் என்னும் பட்டணத்திற்கு அரசன் என்றும் புரிந்து கொள்வோம். இனி நம் நிர்வாகம் நம் அகங்காரம் என்பதெல்லாம் அடங்கிப்போகும். அவன் அருளைப் பெறுவோம்.
இத்தகைய உன்னதமான கருத்தை நமக்கு எடுத்துரைத்த மகரிஷிகளுக்கு வந்தனம்!
தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்



