
சனாதன தர்மத்தில் இறைவனுக்கு பூஜை செய்வது என்று ஒன்று உள்ளது. ஆனால் அது ஒன்று மட்டுமே சனாதன தர்மம் அல்ல. இன்னும் நிறைய அம்சங்கள் சேர்ந்தது சனாதன தர்மம்.
ஆயின், தர்ம வழியில் வாழ்ந்தால் போதும்; பூஜை புனஸ்காரங்கள் தேவையில்லை என்று கூறுபவர்களும் உள்ளார்கள். அது சரியல்ல. தர்மத்தில் பூஜை புனஸ்காரங்களுக்குப் பிரதானமான இடம் உள்ளது. அதற்காக அது மட்டுமே தர்மம் அல்ல. இதனை ஜாக்கிரதையாக நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
ஏனென்றால் தற்போது, “சனாதன தர்மத்தில் பக்தியை போகிறார்களே தவிர தர்மத்தைச் சொல்லித் தருவதில்லை” என்று சிலர் விமர்சனம் செய்கிறார்கள். பக்தியும் தர்மமும் சேர்ந்து இருக்குமே தவிர இரண்டும் தனித்தனியாக இருக்காது. இதனை அறிய வேண்டும். பக்தியில் தர்மம் பிரதான இடத்தைப் பிடிக்கிறது.
பக்தி என்றால் பூஜைகளும், க்ஷேத்திர தரிசனங்களும், புண்ணிய தீர்த்த யாத்திரைகளும் மட்டுமே அல்ல. தீர்த்த யாத்திரை, க்ஷேத்திர தரிசனம் கட்டாயம் செய்ய வேண்டியவை. அதோடு புண்ணியத் தலங்களையும் புனித தீர்த்தங்களையும் நாம் பவித்திரமாகவும் தூய்மையாகவும் பாதுகாத்து வரவும் வேண்டும். அந்த அமைப்புகளை கௌரவித்து வரவேண்டும். அங்கே நடக்கக் கூடாத செயல்கள் எதுவும் நடந்துவிடாமல் ஒவ்வொருவரும் கண்காணித்து தம் பங்கு முயற்சி செய்து காப்பாற்றி வர வேண்டும். இது மிக முக்கியம்.
அதேபோல் த்ரிகரணங்களில் பிரதானமாக உடலால் செய்வதே பூஜை. மனது என்று ஒன்று உள்ளது அல்லவா? மனதினால் இறைவனை நினைக்க வேண்டும். அதேபோல் த்ரிகரணங்களுக்கு இன்னும் சில கடமைகள் உள்ளன. அப்போதுதான் அது சம்பூர்ணமான கடவுள் வழிபாடாகும். அது என்னவென்றால் கரங்களால் தானம் செய்ய வேண்டும். அதே போல சமுதாயத்தில் தேவையானவர்களுக்கு சேவை வடிவத்தில் தேவையானதை அளிக்க வேண்டும். உடல் உழைப்பை நற்செயல்களுக்குப் பயன்படுத்த வேண்டும். அதனால் கடவுளை பூஜை செய்வது எத்தனை முக்கியமோ சமுதாயத்தில் நற்செயல் செய்வது கூட பூஜையே என்று உணர்வதும் அத்தனை முக்கியம்.
இதே கருத்தை ஆதிசங்கரரும் எடுத்துரைக்கிறார். “நாம் காலையிலிருந்து இரவு உறங்கும் வரை பலவித செயல்களைச் செய்கிறோம். உலக விவகாரங்களில் ஈடுபடுகிறோம். ஆனால் செய்யும் ஒவ்வொரு வேலையையும் சிவபூஜை என்ற எண்ணத்தோடு செய்ய வேண்டும்” என்கிறார் ஆதிசங்கரர்.
அதற்காக இறை பூஜையை மறந்துவிட்டு வேறு செயல்களை இறை பூஜை என்று செய்ய வேண்டும் என்பதல்ல கருத்து. வீட்டில் நித்திய பூஜை எத்தனை நேரம் செய்வோம்? நாள் முழுவதும் செய்ய மாட்டோம் அல்லவா? தினமும் நாள் முழுவதும் சாப்பிட்டுக் கொண்டே இருக்க விட்டாலும் சிறிது நேரமாவது உணவருந்துவோம் அல்லவா? அதேபோல் சிறிது நேரமாவது தினமும் கடவுள் வழிபாடு செய்ய வேண்டும். அவ்வாறு பூஜை செய்வதால் உடல் புனிதமடைகிறது. உடலுக்கு சக்தி கிடைக்கிறது. அதன் பிறகு நாம் செய்யும் ஒவ்வொரு வேலையையும் கடவுள் வழிபாடாகக் கருதி செய்ய வேண்டும்.
எப்பொழுது நாம் செய்யும் வேலையை இறைவழிபாடு என்று எண்ணுவோமோ அப்போது நாம் தவறுகள் செய்ய மாட்டோம். இதனைப் புரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் கடவுள் பூஜையில் தவறான பொருட்களை உபயோகப்படுத்த மாட்டோம் அல்லவா? அதுபோல சமுதாயத்தில் செயலாற்றும் போது அதர்மச் செயல்களில் ஈடுபடமாட்டோம். நாம் செய்யும் செயலை கடவுள் வழிபாடாக செய்யும் பொழுது அந்த செயல் அதர்மச் செயலாகாது. நற்செயல்கள் என்றால் உலகிற்குப் பயன்படும் செயல்கள்.
நம் இருப்பு உலகத்திற்குப் பயன்பட வேண்டும். அதுவே உண்மையான வாழ்க்கை.
அதேபோல் சத்தியம், அஹிம்சை, தானம், தூய்மை, தயை இவை கடவுள் பக்தியில் முக்கியமான அம்சங்கள். இவை மானசீகமான எண்ணங்களிலிருந்து உடல் வழியே வெளிப்படவேண்டும். செயல்வடிவம் எடுக்க வேண்டும். எனவே இறைவனுக்கு செய்யும் பூஜை என்ற வெளிப்படையான செயலோடு கூட இவற்றையும் பக்தியில் பிரதான அம்சங்களாக கூறியுள்ளார்கள்.
நல்ல குணங்களே நல்ல தர்மங்கள் ஆகின்றன. அவற்றை நாம் பக்தியில் பிரதான தகுதியாக கடைபிடிக்க வேண்டும். எனவே தர்ம மயமான வாழ்க்கையில் சத்தியம், அகிம்சை, அஸ்தேயம், தூய்மை முதலானவை உள்ளன. இவை அனைத்தும் சேர்ந்ததே இறைவழிபாடு.
எனவே தர்மம் இல்லாமல் பக்தி இல்லை. பக்தி இல்லாவிட்டால் தர்மத்திற்கு பலம் இல்லை. அதனால் பக்தி இருந்தால் போதும் தர்மம் தேவையில்லை என்ற கருத்து தவறு. தர்மத்தோடு நடந்து கொண்டால் போதும் பக்தி தேவையில்லை என்று எண்ணுவது இன்னும் தவறு. ஏனென்றால் பக்தியோடு இருந்தால் இறைவன் நம்மை தர்ம வழியில் நடப்பதற்குத் தூண்டுவான். அதேபோல் தர்மவழியில் நடந்து வந்தால் மனம் இறைவனின் பக்கம் திரும்பும்.
ஏனென்றால் இறைவனின் உடல்களில் தர்மம் என்பதும் ஒரு உடல். “ராமோ விக்ரஹவான் தர்ம:”, தர்மஸ்ய ப்ரபு ரச்யுத:” என்று கூறுவது போல் தர்மம் பகவானின் சொரூபம்.
தர்மத்தை கடைபிடிப்பதும் பக்தியோடு வழிபடுவதும் சேர்ந்தே இருக்க வேண்டும். அதனால்தான் சாஸ்திரங்களில் பூஜைகள் வழிபாடுகள் பற்றி எத்தனை கூறியுள்ளார்களோ நல்ல குணங்கள் பற்றியும், சம்ஸ்காரங்கள் பற்றியும், நற்செயல்கள் பற்றியும் கூட அத்தனை கூறியுள்ளார்கள்.
இவை இல்லாமல் வெறுமனே விக்ரஹ பூஜை செய்வதால் மட்டும் பலன் இருக்காது என்ற எச்சரிக்கை கூட பக்தி நூல்களிலேயே காணப்படுகிறது. உதாரணத்திற்கு பாகவதத்தில் ஓரிடத்தில் ஒரு கூற்று உள்ளது.
“பிரதிமையை பூஜித்தால் மட்டும் போதாது. சகல ஜீவர்களின் இதயத்திலும் நானே உள்ளேன் என்பதை உணர்ந்து எந்த உயிரையும் துன்புறுத்தாமல் வாழ்வதே சிறந்த பூஜை!” என்று கூறுகிறார் சாக்ஷாத் பரமாத்மா பாகவதத்தில்.
இதன் பொருள் பூஜைகள் செய்ய வேண்டாம் என்பதல்ல. வீட்டில் பூஜை செய்துவிட்டு பிறரைத் துன்புறுத்துவோரின் பூஜை, பூஜையே அல்ல என்பது பொருள். அதனால் பிறருக்கு உதவுபவனாக பக்தன் இருக்க வேண்டும் என்று பக்தி சாஸ்திரம் போதிக்கிறது.
சரியாக பக்தி சாஸ்திரத்தை புரிந்து கொள்ள முடிந்தால் இளைஞர்களும் நல்ல வழியில் நடக்க முடியும். பூஜை, வழிபாடு, தியானம் முதலானவற்றை செய்வதால் அவர்களின் உடல் மனம் ஆத்மா – மூன்றும் தூய்மையாகிறது. அதோடு நற்செயல்கள் செய்வதுகூட பகவத் பூஜையே என்று அவர்கள் அறிந்து கொள்வார்கள். அதன்மூலம் அவர்கள் வாழ்க்கை முழுவதும் நற்செயல்களை கடைபிடிப்பார்கள். ஒரு கணமும் வீணடிக்காமல் சோம்பேறித்தனத்தை அருகில் நெருங்கவிடாமல் ஒவ்வொரு கணத்தையும் நல்ல வழியில் செலவிடுவார்கள்.
அதோடு கூட வாய் துடுக்குத்தனம் இருக்கக் கூடாது. பொய் பேசக்கூடாது. அப்போதுதான் இறைவனுடைய மந்திரம் கூட பலனளிக்கும். அதனால் வாக்கினால் மந்திர ஜபம் செய்யச் சொல்லி எத்தனை அழுத்தமாகக் கூறியுள்ளார்களே, வாக்கினால் சத்தியம் பேசு, இதமாகப் பேசு, பிரியமாகப் பேசு, சாஸ்திர சம்மதமாகப் பேசு, லோக ஹிதமான நல்ல சொற்களை நட்புணர்வோடு பேசு என்றும் கூறியுள்ளார்கள். இது வாக்கிற்கு சாஸ்திரம் விதிக்கும் நியமம்.
அதேபோல் மனதினால் கூட அடுத்தவருக்கு கெடுதல் நினைக்கக் கூடாது. யாரையும் வெறுக்கக் கூடாது என்று மனதிற்கும் போதித்துள்ளார்கள். அதனால் பாரதீய பக்தி சாஸ்திரங்கள் வெறும் பூஜை புனஸ்காரங்கள் பிரார்த்தனைகள் பற்றி மட்டுமே கூறுகின்றன என்று எண்ணி விடக்கூடாது.
தனி மனித நடத்தையை நல்வழிப்படுத்தி உலகிற்கு உபயோகப்படும் விதமாக வாழ்க்கையைத் திருப்பும் வழிமுறைகளை பக்தி சாஸ்திரங்கள் எடுத்துரைக்கின்றன. இறைபக்தியில் நற்செயல்களும் இணைந்தே உள்ளது என்பதை அறிய வேண்டும். தர்மத்தோடு கூடிய பக்தியுடன் இறைவனை வழிபட்டு நிறைநிலை எய்துவோமாக!
தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்



