
அலங்காரம், சௌந்தர்யம் இவற்றைப் பற்றி ருஷிகள் என கூறியிருக்கிறார்கள் என்று பார்ப்போம்! ராமாயணத்தில் அயோத்தி மக்கள் எவ்வாறு இருந்தார்கள்? மகிழ்ச்சியான வாழ்க்கையில் எப்படி நடந்து கொண்டார்கள்? என்பதை வால்மீகி விவரித்துள்ளார்.
“அயோத்தியில் அலங்காரம் செய்து கொள்ளாதவர் ஒருவர் கூட இல்லை. மகிழ்ச்சியாக இல்லாதவர் ஒருவர் கூட இல்லை. திருடர்களே இல்லை. துயரமே இல்லை” என்று வர்ணித்துள்ளார்.
இது ராம ராஜ்யத்தில் மட்டுமே அல்ல! ராமனுக்கு முன்பு தசரதரின் ஆட்சியிலும் அவ்வாறே இருந்தது. இன்னும் சொல்லப்போனால் இக்ஷ்வாகு வம்சத்தில் மனு முதல் சூரிய வம்ச அரசர்கள் ஆண்ட காலத்திலும் அவ்வாறே இருந்ததாக வர்ணித்துள்ளார்.
அதாவது மனிதர்களனைவரும் ஆனந்தமாக இருக்கவேண்டும். அலங்கரித்துக் கொண்டு மகிழ்ச்சியாக விளங்க வேண்டும் என்பது அன்றைய பாரதீய ஆதர்சமாக இருந்தது. பாரத தேசத்தில் அலங்காரம் குறித்து அழகான சாஸ்திரம் கூட உள்ளது. ஆபரண விஞ்ஞானம் அத்தனை சிறப்பாக இருந்தது.
பாரத தேசத்தில் மக்கள் இமயம் முதல் குமரி வரை சிரம் முதல் பாதம் வரை பலவித ஆபரணங்களை அணிந்து கொள்வதைக் காணமுடிகிறது. காலுக்கு மெட்டி, கொலுசு, சிரத்தின் மீது மகுடம், சூடாமணி, செவிகளுக்கு, நாசிக்கு, கழுத்திற்கு, ஹாரம், கேயூரம், தோள்வளைகள்… இவ்விதம் வர்ணனைகள் உள்ளன. ஆண்களும் பெண்களும் அணிந்த வெவ்வேறு வித ஆபரணங்களைப் பற்றி வால்மீகி வர்ணித்துள்ளார். அவற்றை சம்பாதித்து அலங்கரித்துக் கொள்ளும் அளவுக்கு செல்வமும் தங்கம் வெள்ளி ரத்தினங்கள் போன்றவற்றால் ஆன நகைகளும் அவற்றை பலவித வடிவங்களில் உருவாக்கக்கூடிய கலையாற்றலும் நிபுணத்துவமும் ஞானமும் அப்போது இருந்தது என்பதை இதன் மூலம் அறிகிறோம்.
இத்தகைய அறிவாற்றல் வேத காலத்திலேயே பாரத தேசத்தில் இருந்தது என்பதை அறிய முடிகிறது. மிகப் பழங்காலத்திலிருந்தே பாரத தேசத்திலிருந்த நாகரீகத்திற்கு அவை அடையாளங்கள். அதனால்தான் அன்றைய புராதன சிற்பக் கலைகளில் கூட இத்தகைய அலங்காரத்தைக் காண முடிகிறது.
இந்த அலங்காரங்கள் வெறும் உடலழகை வெளிப்படுத்துவதற்காக மட்டுமே அல்ல. யோக சாஸ்திரத்தின்படி கூட இதற்கு பரமார்த்தம் உள்ளது என்று ரிஷிகள் தெரிவிக்கிறார்கள்.
அதாவது பாரதீயர்கள் அழகுக்காக உடலை அலங்கரித்துக் கொண்டாலும் அது ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது என்பதை அறிய முடிகிறது. தலை பின்னிக் கொள்வது முதல் பல்வேறு அவயவங்களில் அணிந்து கொள்ளும் ஆபரணங்கள் மூலம் உடலின் நாடி கேந்திரங்களையும் பிராணசக்தி கேந்திரங்களையும் உயிர்ப்பித்து ஆரோக்கியத்திற்கு உதவுகின்றது என்று விஷயம் கூட தற்காலத்தில் செய்யப்படும் பரிசோதனைகள் மூலம் தெரிய வருகிறது.

ஆனால் சம்பிரதாயத்தோடு கூடிய அலங்காரங்களுக்கு மட்டுமே அத்தகைய சக்தி உள்ளது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். அது மட்டுமல்ல நவீன வாழ்க்கை முறை என்ற பெயரில் அலங்காரங்களைத் தாறுமாறாக்கி கொள்வதால் ஆபத்து ஏற்படுகிறது.
அலங்காரம் என்பது அலங்காரமாக இருக்க வேண்டுமே தவிர பிறரை கவர்வதற்காக செய்யும் வேடமாக இருக்கக்கூடாது. இதனை முக்கியமாக கவனிக்க வேண்டும். உடையும் அணிகலன்களும் நிரம்பி அடக்கமாக இருக்கும் போது அது சௌந்தரியம் என்று பெயர் பெறும். உடையையும் முடியையும் குறைத்துக்கொண்டு சரீர அங்கங்களை விளம்பரப்படுத்துவது போன்ற முறைகளை பாரதீய பாரம்பரியம் அங்கீகரிக்கவில்லை.
கவர்ச்சியை விட அலங்காரம் முக்கியம். அலங்காரத்தால் கிடைக்கும் கௌரவமான ஈர்ப்பு மிகவும் விசேஷமானது. வெளிப்படையான அலங்காரங்கள் ஒருவரின் செல்வச் செழிப்பையும் நாகரிகத்தையும் அழகையும் வெளிப்படுத்தினாலும் அவற்றோடு கூட நற்குணங்களின் அலங்காரமும் இருக்க வேண்டும் என்பதை ருஷிகள் நமக்கு ஒவ்வொரு இடத்திலும் விளக்கிக் கூறுகிறார்கள்.
அதனால் மிகச்சிறந்த அலங்காரம் எது என்று கேட்டால், பர்த்ருஹரி, “வெட்கம் என்று ஒன்று இருந்தால் போதும். உடலுக்கு வேறு அலங்காரம் தேவையில்லை” என்று கூறுகிறார். அதாவது, “வெட்கப்படுவதே சிறந்த அலங்காரம்” என்கிறார். வெட்கம் என்றால் அடக்கம், லஜ்ஜை என்று பொருள். இவற்றைத் துறந்துவிட்டு எத்தனை வேடங்கள் போட்டாலும் அவை அலங்காரங்கள் ஆகாது.
உண்மையான அலங்காரம் எது? இந்திரிய நிக்ரஹம், வெட்கம் இவ்விரண்டுமே! உடல் உறுப்புகளை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதும் வெட்கப்படுவதுமே உண்மையான அலங்காரங்களாக வர்ணிக்கப்படுகின்றன.
அதுமட்டுமல்ல. மனிதனுக்கு நல்ல பேச்சு கூட அலங்காரமே! “வாக் பூஷணம் பூஷணம்” என்கிறார்கள் சுபாஷிதத்தில். இது ஒரு சிறந்த வாக்கியம். எத்தனை அழகாக விவரித்துள்ளார்கள் என்றால், “கேயூரம் ஹாரம் இவை எதுவும் கூட சரீரத்திற்கு அலங்காரமாகாது. அதுபோல் ஸ்நானம் சந்தனம் மலர்கள் பலவித சிகை அலங்காரங்கள் இவை எதுவும் மனிதனை அழகுபடுத்த மாட்டா! நல்ல பண்பாட்டோடு கூடிய வாக்கு மனிதனுக்கு உண்மையான அலங்காரம். மீதி உள்ள அலங்காரங்கள் எல்லாம் அழியக்கூடியவை. ‘வாக்பூஷணம்’ எனப்படும் நல்ல பேச்சு ‘நித்திய பூஷண’மாக இருக்கும் என்கிறார்கள்.
“அப்படிப்பட்ட வாக்கோடு கூடிய வித்யையும் அலங்காரமே!” என்கிறார்கள்.
“உடலுக்கு அலங்காரங்கள் இருந்தபோதிலும் தீயவனை யாரும் போற்ற மாட்டார்கள். அலங்காரங்கள் இல்லாமல் போனாலும் கல்வியறிவும் பண்பாடும் உள்ள சத்புருஷர்கள் போற்றப்படுவார்கள்!” என்று கூறும் சுபாஷிதகாரர்கள் இன்னும் இவ்வாறு குறிப்பிடுகிறார்கள்,
“மிக உயர்வாக அலங்கரித்துக் கொண்டார்கள் என்பதற்காக தீயவர்கள் நல்லவர்களாக மாட்டார்கள். மணி ஒளி வீசுவதால் மட்டும் சர்ப்பத்தின் பயங்கரத்தன்மை போய்விடுமா, என்ன?” என்று கேட்கிறார்கள் அலங்காரம் செய்து கொண்டாலும் தீயவர்கள் பாம்பு போல் பயங்கரமானவர்கள் என்றறியவேண்டும்.
கிராத அர்ஜுனீயம் என்ற காவியத்தில் பாரவி கூறுகிறார், “அற்புதமான ஞானம், சாஸ்திர அறிவு, மனத்தூய்மை இவையே அலங்காரங்கள்!”.
இவ்வாறு ருஷிகள் கூறியுள்ள சர்வ அலங்காரங்களையும் ஏற்றுக்கொண்டு பண்பாட்டோடு கூடிய நாகரீக வாழ்க்கையை விரும்புவோம்!
தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்



