
கோவில் உள்ள ஊரில் குடி இருக்க வேண்டியது முக்கியமானது. இன்னும் மனிதன் வசிப்பதற்கு யோக்கியமான இடங்கள் என்ன? இதுபற்றிய சாணக்கியர் என்ன கூறுகிறார் என்று பார்ப்போம்.
கௌரவம் இருக்க வேண்டும். தொழில் வசதி இருக்க வேண்டும். நண்பர்கள் உறவினர்கள் அருகில் இருக்க வேண்டும். கல்வி கற்பதற்கு வாய்ப்பு இருக்க வேண்டும். இந்த நான்கையும் நாம் பரிசீலித்து பார்த்தால் ஞானமே மனிதனுக்கு மிகவும் இன்றியமையாதது என்று புரியும்.
ஞானம் பெறுவதற்கு வாய்ப்புள்ள இடமாக இருக்க வேண்டும். சிலர் உத்தியோகம் அல்லது வியாபாரத்தில் இறங்கிய பின் இனி வித்யை கற்பது தேவையில்லை என்று நினைப்பார்கள். ஆனால் வாழ்நாள் முழுவதும் கல்வி அறிவை வளர்த்துக் கொண்டே இருக்க வேண்டும். நம் வாழ்க்கையில் பணம் சம்பாதிப்பது ஒரு பாகமாக உள்ளது போல் வித்யை பெறுவது கூட ஒரு முக்கிய பாகமாக இருக்க வேண்டும்.
இங்கு வித்யை என்றால் மீண்டும் பணம் சம்பாதிப்பதற்கு உபயோகப்படும் கல்வியறிவு என்று எண்ணக்கூடாது. தனம் சம்பாதிப்பதற்கு வேண்டிய கல்வி அறிவு பெற்று விட்டோம். அதன் மூலம் வயிற்றை நிரப்பிக் கொள்கிறோம். அதோடு நின்றுவிடாமல் மனிதன் அதைத் தவிர வேறொரு வித்யை ஏதாவது கற்க வேண்டும். அது மிக முக்கியம்.
அது மனத் திருப்திக்கும், மன மலர்ச்சிக்கும் புத்தியின் விசாலத்திற்கும் பயன்படுவதாக இருக்க வேண்டும். அது மனிதனைச் சிறந்த பண்பாடு உடையவனாக சீர்ப்படுத்துகிறது. அப்படிப்பட்ட வித்யையைக் கற்றுக் கொண்டால் இகம் பரம் இரண்டும் ரம்யமாகிறது. அப்படியின்றி ஒரு வேலையில் சேர்ந்துவிட்டால் எதுவும் மேலே படித்தறியக் கூடாது என்று எண்ணக் கூடாது. அதில் இருந்தபடியே ஒரு நல்ல தெய்வீக வித்யையோ ஒரு தார்மீக வித்யையோ படித்தறிய வேண்டும். ஒரு சாஸ்திரம், ஒரு சங்கீதம்… இப்படிப்பட்டவற்றைப் பயில வேண்டும். நாம் வசிக்கும் இடத்தில் வித்யை கற்பதற்கு வாய்ப்பு உள்ளதா என்று கவனிக்கும்படி கூறுவதற்கு இதுதான் காரணம்.
பிள்ளைகள் படிப்பதற்கு ஏற்ற பள்ளிகள் உள்ளனவா என்று பார்ப்பதோடு நமக்கும் கூட ஞானம் பெறுவதென்பது வாழ்க்கையில் பிரதானமாக இருக்க வேண்டும்.
வசிக்குமிடத்தில் தண்ணீர் வசதி இருக்க வேண்டும். மருத்துவ வசதி இருக்க வேண்டும். செழுமை இருக்க வேண்டும். இது அனைவரும் அறிந்ததே. அதற்கும் மேலாக சாஸ்திரம் அறிந்த பண்டிதர்கள் அருகில் இருக்க வேண்டும். “இது தர்மம். இது அதர்மம். இப்படி நடந்து கொள். இவ்வாறு நடந்து கொள்ளாதே! இப்படிச் செய்தால் நன்மை பயக்கும்!” என்று கூறக்கூடிய சாஸ்திர ஞானம் உள்ள பண்டிதர்கள் இருக்க வேண்டும். பண்டிதர்கள் உள்ள ஊரில் வசிப்பது ஒரு பாக்கியம்!
இவ்வாறு அழகாகக் கூறி, மற்றுமொரு அற்புதமான கருத்தைக் கூறுகிறார் சாணக்கியர். இந்த உயர்ந்த வார்த்தைகளை அரசாள வேண்டும் என்ற தீவிர எண்ணத்தில் துடிக்கும் தலைவர்கள் முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். அந்த தலைவர்கள் தாம் எந்த தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்களோ அந்த இடங்களில் இவற்றை ஏற்பாடு செய்ய வேண்டும். அப்போதுதான் உண்மையில் அவர்கள் தலைவர்களாவார்கள்.

“லோகயாத்ரா, பயம், லஜ்ஜா, தாட்சிண்யம், த்யாக சீலதா பஞ்ச யத்ர நவிஞ்யந்தே ந குர்யாத் தத்ர சம்ஸ்திதம்”
இந்த ஐந்தும் இல்லாத இடத்தில் வசிக்கலாகாது என்கிறார் சாணக்கியர்.
லோகயாத்ரா – நாம் வாழ்க்கைப் பயணத்தை நடத்துவதற்கு வசதியான இடமாக இருக்க வேண்டும். இரண்டாவது, சட்டத்தின் மீது பயம் இருக்க வேண்டும். அரசாங்கம் விதிக்கும் நீதிக்கும் ஆணைக்கும் பயந்து நேர்மையாக வசிக்கும் மக்கள் இருக்கும் இடமாக இருக்க வேண்டும். அதை விடுத்து, ‘சட்டம் பாட்டுக்கு சட்டம் இருக்கும். அவனிஷ்டம் போல் துஷ்டன் இருப்பான்’ என்றால் அப்படிப்பட்ட சமுதாயம் ஆபத்தானது.
துரதிருஷ்டவசமாக தற்போது பாரத தேசத்தில் அப்படிப்பட்ட சமுதாயமே நமக்குத் தென்படுகிறது. நம் அரசியல் சாசனத்தை படித்தாலும் சட்ட நூல்களை எடுத்துப் பார்த்தாலும் அற்புதமான சிறப்பான அரசாங்க நெறிகளோடு காணப்படுகின்றன. எங்கே? புத்தகங்களில்! அதுதான் பிரச்சனையே!
ஆனால் தினசரி வாழ்க்கையில் அவை தென்படுவதில்லை. சாலையில் செல்லும் வாகனங்கள் கூட சாலை நியமங்களை கடைபிடிப்பதில்லை. நியமங்கள் ஏடுகளில் மட்டுமே உள்ளன! பிரஜைகளுக்கு அத்தகைய அழகிய பரிபாலனை எட்டாமல் போய்விட்டது.
அதனால் சட்ட பயம் என்பது எங்கே உள்ளதோ அந்த நாடு மட்டுமே உயர்வடையும். இதை அறிய வேண்டும். இதனை ‘லா பைண்டட் சொசைட்டி’ என்பார்கள்.
சட்டத்தை மீறினால் கடுமையான தண்டனை விதிப்பார்கள் என்ற பயம் இருக்க வேண்டும். ஊழலும் அநீதியும் செய்தால் தப்பிக்க முடியாது என்ற மனநிலை மக்களிடம் ஏற்பட வேண்டும். அதனை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு அரசாட்சி செய்பவருடையது. அப்படிப்பட்ட ஆட்சியாளர்களை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டிய பொறுப்பு மக்களுடையது. இதனையும் அறிய வேண்டும்.
அதனால் தண்டனைக்கான பயம் இருக்கும் இடத்தில் மக்கள் க்ஷேமமாக வாழ முடியும். அனைவரும் நலமாக இருக்க வேண்டுமென்றால் நீதியின் மீது பயம் இருக்க வேண்டும்.
அடுத்து, சமுதாயத்தில் லஜ்ஜை இருக்க வேண்டும். லஜ்ஜை என்றால் தவறு செய்வதற்கு வெட்க்கப்படுவது. பலரும் தவறுகளையே செய்து வந்தால் மீதி உள்ள சிலரும் தவறு செய்வதற்கு முன் வருவார்கள். அதர்மம் செய்வதற்குப் பின் வாங்குவதே லஜ்ஜை எனப்படுகிறது. அப்படிப்பட்டவர்கள் இருக்கும் இடத்தில் வசித்தால் நாம் நலமாக இருக்க முடியும்.
அடுத்து, தியாகசீலம் – தியாக மனப்பான்மை கொண்டவர்கள் இருக்க வேண்டும். சமுதாயத்தில் அனைவரும் ஒரே மாதிரி இருக்கமாட்டார்கள். ஏழையும் பணக்காரனும் சேர்ந்தே இருப்பார்கள். செல்வம் இருப்பவர்கள் சிறிது தியாக மனத்தோடு இல்லாதவருக்குக் கொடுத்து உதவவேண்டும். இல்லாதவர் என்ற சொல்லுக்குப் பல பொருள் உள்ளது. தனம் சுற்றம் நட்பு செழிப்பு கல்வி போன்றவை எல்லோரிடமும் புஷ்டியாக இருக்காது. சிலரிடம் மட்டுமே இருக்கும். இருப்பவன் இல்லாதவனுக்கு பகிர்ந்து கொடுக்க வேண்டும்.
இது போன்ற தியாக புத்தி கொண்ட மனிதர்கள் அந்த சமுதாயத்தில் இருக்க வேண்டும். அப்படிப்பட்டவர்கள் அரசாங்கத்துக்கும் உபயோகமாக இருப்பார்கள். தன்னார்வத்தோடு மக்களுக்கும் உதவுவார்கள். நற்செயல்கள் புரிவார்கள். அது போன்ற தியாக சீலமும், தான புத்தியும் கொண்டவர்கள் வசிக்கும் இடமாக இருக்க வேண்டும்.
திறமையாக வேலை செய்யும் திறமைசாலிகள் இருக்கும் இடமாக இருக்கவேண்டும். உத்தியோகிகளோ அதிகாரிகளோ நாட்டுக்காக வேலை செய்பவர்களோ நிபுணத்துவத்தோடு கூடியவர்களாக இருக்க வேண்டும்.
இந்த ஐந்தும் எங்கே இருக்குமோ அங்கே வசிக்க வேண்டும். இந்த ஐந்தும் இல்லாத இடத்தில் வசிக்கும் கூடாது என்று கூறியுள்ளார்.
“லோக யாத்ரா, பயம், லஜ்ஜா, தாட்சிண்யம், த்யாக சீலதா” –இவை உள்ள இடங்களே உத்தமமான இடங்கள். இவை இல்லாத இடங்களில் வசிக்கக் கூடாது என்று கூறுகிறார் சாணக்கியர்.
எத்தனை உயர்ந்த கூற்று! சனாதன தர்மம் கூறுகின்ற இந்த வாக்கியங்களில் அழகான சமுதாயம் எப்படி இருக்கும் என்பது தெரிகிறது. அப்படிப்பட்ட சமுதாயம் ஒரு காலத்தில் பாரதீய சமுதாயமாக இருந்தது. அது மீண்டும் நம் கண்முன் தென்படவேண்டும் என்று விரும்புவோம்!
தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் –ராஜி ரகுநாதன்



