
ஆதித்ய ஹிருதயம் ராமாயணத்தில் மட்டுமின்றி வேறொரு இடத்திலும் காணப்படுகிறது. வியாசர் இயற்றிய பவிஷ்யோத்ர புராணத்தில் ஏழு அத்தியாயங்களில் ஆதித்ய ஹ்ருதயம் உள்ளது.
அதில் பல ரகசியங்களைக் கூறியுள்ளார். அது ஸ்ரீகிருஷ்ணர் அர்ஜுனனுக்குக் கூறிய உபதேசம். சூரிய உபாசனையின் இரகசியங்களை அதில் விவரித்துள்ளார். அதில் சூரிய யந்திர விஞ்ஞானம், சூரிய மந்திர விஞ்ஞானம் பற்றி தெரிவிக்கிறார்.
பவிஷ்யோத்தர புராணத்தில் ஸ்ரீகிருஷ்ணன் அர்ஜுனனிடம் கூறுகிறான்,
“தேவதேவம் நமஸ்க்ருத்ய ப்ராத ருத்தாய சார்ஜுன
விக்னான்யனேக ரூபாணி நஸ்யந்தி தர்சநாதபி
தஸ்மாத் சர்வ ப்ரயத்னேன சூர்யமாராதயேத் சதா !”
‘தேவா’ என்றால் ஒளி வடிவானவன். பிரகாசமானவற்றுக்கு அந்த பிரகாசத்தை அளிப்பவன் தேவதேவன். பூமி முழுவதும் ஒளியோடு விளங்குகிறது. அவற்றின் வெளிச்சத்துக்கு காரணம் தேவதேவனான சூரியன். “தேவதேவம் நமஸ்க்ருத்ய ப்ராத ருத்தாய” – காலையில் எழுந்து யார் சூரியனை வழிபடுகிறாரோ அவர்களுக்கு “விக்னான்யனேக ரூபாணி நஸ்யந்தி” – அவர்களுக்கு அவர்களின் செயல்களில் ஏற்படும் தடைகள் நீங்கி விடுகின்றன. எனவே எப்போதும் சூரியனை வழிபட வேண்டும் என்கிறார்.
சூரியன் ஒரு தெய்வம். சூரியன் ஒரு யந்திரம். சூரியன் ஒரு மந்திரம். இவை அனைத்தும் கூட சூரிய மண்டலத்தின் உள்ளே உள்ள தெய்வீக சைதன்யத்தை விவரிக்கின்றன. அந்த விஞ்ஞானம் வேறு. சயின்ஸ் பார்வை வேறு. உபாசனையின் பார்வை வேறு. சயின்ஸ் கண்ணோட்டத்தில் சூரியன் எரியும் அக்னிக் கோளம் மட்டுமே.
உலகில் ஒரு பெண்ணை பிறர் பார்க்கும் பார்வை வேறு. அந்தப் பெண்ணின் குழந்தை பார்க்கும் பார்வை வேறு. குழந்தை ‘அம்மா!’ என்ற பாவனையோடு பார்க்கிறது. குழந்தைக்காக அவள் செய்யும் வேலைகள் தாய்மை மூலம் வெளிப்படுகின்றன. அந்த அன்பு அந்த சிசுவுக்கு மட்டுமே தெரியும். அவன் ‘அம்மா!’ என்று அழைத்தவுடனே அப்பெண் அவனிடம் வாத்சல்யத்தோடு கருணை புரிகிறாள். அதேபோல் உபாசகன் சூரியனை தெய்வம் என்ற கண்ணோட்டத்தோடு பார்க்கிறான்.
நாமனைவரும் சூரியனால் பிராண சக்தியைப் பெற்று சூரியன் மூலம் உயிர் வாழ்கிறோம். சூரியன் வெறும் ஜடப் பதார்த்தம் அல்ல. மகா சைதன்ய மூர்த்தி. இந்த ஜகத்திற்கு சைதன்யத்தை அளிக்கும் பரஞ்சோதி. சர்வ ஜகத்திற்கும் சக்தியை அளிக்கும் உயிர் காப்போன். சூரியன் நமக்கு எத்தனை கொடுக்கிறான் என்பதை அன்றே வேதம் கூறியுள்ளது. இன்று சயின்ஸ் சிலவற்றைக் கூறுகிறது.
சூரியன் தென்படாவிட்டால் ஜீவனுக்கும் ஜகத்துக்கும் சைதன்யம் இருக்காது. உற்சாகம் இருக்காது. ஜகத்திற்கு பிறப்பும் இருக்காது. இது பாரதீய ரிஷிகளின் பார்வை. இது சத்தியப் பார்வை. உபாசனை பார்வை! அந்தப் பார்வை நமக்கும் இருந்தால் நாம் உய்வடைவோம்.
ஆதித்ய மண்டல சொரூபனான சூரியன், தான் சாக்ஷாத் பரமாத்மாவே என்ற பாவனையை வெளிப்படுத்துகிறான். அந்த பார்வையோடு யார் தினமும் சூரிய பகவானை தியானிக்கிறார்களோ அவர்களே அவனை அறிய முடியும்.
ஸ்ரீமகாவிஷ்ணு நம் கண்முன் சாக்ஷாத்தாக பிரடத்யக்ஷமானால் நாராயணன் அவனே என்று தெரிந்து கொள்ள மாட்டோம். அவ்வாறு அறிய வேண்டுமானால் நம்மில் உபாசனைப் பார்வை இருக்க வேண்டும். அது இருந்தால்தான் தெய்வத்தை அறியமுடியும்.
தினமும் தென்படுகின்ற சூரியனை எத்தனை பேர் தெய்வம் என்று அறிந்து கொள்கிறார்கள்? அவனில் இறைவனைப் பார்க்க முடியாவிட்டால் பிரபஞ்சத்தில் எங்கும் தெய்வத்தை நாம் பார்க்க இயலாது.
பாரதீய சாஸ்திரங்கள் அனைத்தும் சூரிய பகவானையே அனைத்து தேவதைகளின் சொரூபமாக விளக்கிக் காட்டுகின்றன. விஷ்ணு பக்தர்களானாலும் சிவ பக்தர்களானாலும் தேவீ பக்தர்களானாலும் சூரிய பகவானின் பக்தர்களானால்தான் அந்த பக்தி பலன் தரும். நாம் உபாசனை செய்யும் தெய்வங்களனைவரும் சூரியனின் வடிவங்களே! அனுதினமும் நமக்காக சூரிய பகவான் உதயித்து தன் பிராண சக்தியைப் பரவச் செய்து அருளுகிறான்.
எத்தனையோ சூரியர்கள் உள்ளார்கள். இவனே சூரியன் என்று எவ்வாறு கூற இயலும்? என்று சிலர் கேட்பார்கள். பிரபஞ்சத்தில் அனேக சூரிய மண்டலங்கள் இருக்கலாம். ஆனால் நம்மை போஷித்துக் காக்கும் இந்த கிரக மண்டலத்தில் உள்ள சூரியனே நமக்குத் தென்படுகிறான்.
நம் ஊரில் எத்தனையோ விளக்குகள் இருக்கும். ஒவ்வொரு வீட்டிலும் தீப ஒளிகள் இருக்கும். அனைவர் வீட்டிலும் தீபங்கள் இருந்த போதிலும் நம் வீட்டில் வெளிச்சத்தைத் தரும் தீபமே நமக்கு தெய்வம். எனவே எல்லையில்லாத விஸ்வத்தில் எத்தனையோ சூரிய மண்டலங்கள் இருக்கலாம். ஆனால் நாம் உள்ள இந்த கிரக மண்டலத்தையும் இந்த பூமியையும் இந்த பூமி மீதுள்ள ஜீவராசிகளையும் வாழவைத்து அருளுகின்ற இந்த சூரியனில் நாம் தெய்வத்தை பார்க்க இயல வேண்டும்.
தீபங்கள் எத்தனை இருந்தாலும் அவற்றில் உள்ள அக்னிப் ப்ரகாசம் ஒன்றே! எத்தனை சூரிய மண்டலங்கள் இருந்தாலும் அனைத்திலும் உள்ள சூரியன் எனப்படும் தெய்வ சைதன்யம் ஒன்றே!
இதற்கு அற்புதமான சமன்வயம் பகவத் கீதையில் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா கூறுகிறான்.
“யதாதித்ய கதம் தேஜோ ஜகத் பாஸயதே கிலம்
யச்சந்த்ரமஸி யச்சாக்னௌ தத்தேஜோ வித்தி மாமகம் !!”
“சூரியனிடமும் அக்னியிடமும் சந்திரனிடமும் எந்த தேஜஸ் உள்ளதோ அந்த தேஜஸ் என்னுடையதே என்று அறிவாயாக!” என்கிறான்.
நாமனைவரும் சூரிய தேஜஸை பார்க்கிறோமே தவிர அதை பரமாத்மாவின் தேஜஸ் என்று தெரிந்து கொண்டால் அது உபாசனையாகிறது. அவ்வாறு தெரிந்து கொண்டவருக்கு அந்த சூரியனில் இருக்கும் பரமாத்மா ஒரு அம்மா தன் குழந்தையிடம் கருணை காட்டுவது போல் அருள்புரிகிறான்.
மகாபாரதம் விராடபர்வத்தில் திரௌபதி சைரந்திரியாக இருந்த சமயம் கீசகன் அவளைத் தன் இருப்பிடத்திற்கு மதுவை எடுத்துக் கொண்டு வரச் சொல்கிறான். அப்போது சுதேஷணாதேவி கூட திரௌபதியை போகச் சொல்லி வற்புறுத்துகிறாள். வேறு வழியில்லை. அவள் போகும் முன்பு சூரிய பகவானை வணங்கி விட்டுச் செல்கிறாள் என்று வியாசர் எழுதியுள்ளார். திரௌபதி அங்கு சென்றபோது கீசகன் அவள் கையைப் பிடிப்பதற்காக முயற்சிப்பான். அப்போது சூரியன் அனுப்பி வைத்த ஒரு சக்தி அவளில் பிரவேசித்து கையை உதறிய உடனே கீசகன் தூரமாகப் போய் விழுந்து விடுவான். கீசகன் மகா பிரதாபசாலி. அப்படிப்பட்டவன் திரௌபதி உதறிய உடனே விழுந்துவிட்டான். கண்ணுக்குத் தெரியாமல் இருக்கும் சூரிய கணங்களைச் சேர்ந்த ஒரு சக்தியின் பிரதாபம் இது.
சூரியனே பரமாத்மா! சூரியன் விஷ்ணுவின் நேத்திரம் என்று சொல்வார்கள். நேத்திரம் என்றால் பார்வை. கண் என்ற உறுப்பல்ல. சூரியனே பரமேஸ்வரனின் பார்வை! பரமாத்மா நம்மைப் பார்த்துக் கொண்டே இருக்கிறான்.

விடியற்காலையில் அவனுக்கு அர்க்கியம் அளித்து ஒரு நமஸ்காரம் செய்தால் அதைவிட வேறென்ன வேண்டும்? “நமஸ்கார ப்ரிய: சூர்ய:” என்று கிருஷ்ண பரமாத்மா கூறியுள்ளார்.
பாகவதத்தில் கிருஷ்ண பரமாத்மா தன் அவதாரத்தை முடித்துக் கொள்ளும் சமயத்தில் உத்தவரிடம், “விஸ்வத்தில் எங்குமுள்ள பரமாத்மா ஒருவனே என்ற ஞானம் பெறுவதே மோட்சம்! பரமாத்மா வேறு, பிரபஞ்சம் வேறு, நாம் வேறு என்று நினைக்கிறோம். ஆனால் உன்னில் என்னில் எங்கும் உள்ளது ஒன்றே என்ற ஞானம் ஏற்பட வேண்டும்” என்கிறான்.
அது பௌதீகமாகப் பார்த்தால் தெரியாது. நாம் பெளதீகமாகப் பார்த்தால் பூமி சுற்றுவது போல் தெரியாது. அதனால் பூமி நிலையாக இருக்கிறது என்று கூறினால் ஒப்புக்கொள்வார்களா? பிரத்தியக்ஷமே பிரமாணம் என்று கூறும்போது இதனை ஒப்புக் கொள்ளத்தானே வேண்டும்? ஆனால் சயின்ஸ் பூமி சுற்றுகிறதென்று கூறுகிறது. சயின்ஸ் கூறினால் கண்ணில் தென்படாததைக் கூட ஒப்புக் கொள்கிறோமல்லவா? அதேபோல் விஸ்வம் அனைத்தும் பரமாத்மாவே என்பது ஆன்மீக விஞ்ஞானம் கூறும் சத்தியம்! எவ்வாறு பூமி நகர்ந்தாலும் நகர்வதுபோல் தெரியாதோ இதுகூட அதேபோல் தெரிவதில்லை! அந்த சாஸ்திர ஞானத்தால் அதனை எவ்வாறு அறிகிறோமோ இந்த சாஸ்திர ஞானத்தால் இதனையும் அறிய வேண்டும்! தெரிந்து கொள்வதற்குத் தகுந்த சாதனை செய்ய வேண்டும்! வேதாந்த சாஸ்திரத்தை சரியாக அத்யானம் செய்தால் அனைத்தும் பரமாத்மாவே என்ற ஞானம் ஏற்படும்.
கிருஷ்ண பரமாத்மா கூறுகிறான், “நான் எங்கும் வியாபித்துள்ளேன். ஆனாலும் எங்கும் உன்னால் என்னைப் பார்க்க இயலாது. எங்கும் என்னைப் பார்க்க இயலாது என்பதால் சில இடங்களில் என்னை வழிபடு! அவ்வாறு வழிபடவேண்டிய முதலிடம் சூரிய மண்டலம்!” என்கிறான். “சூரிய மண்டலத்திற்கு அர்க்கியமளித்து ஏழு நமஸ்காரம் செய்து இரண்டு விதிகளாக பூஜை செய்!” என்று கூறுகிறான்.
சூரிய மண்டலத்தில் யாரை பூஜிக்கிறோம்? சூரியனையா? சூரிய மண்டலத்தில் உள்ள பரமாத்மாவை! இரண்டாவது, இறைவனை அக்னியில் பூஜை செய்! என்கிறான். அதனால்தான் அக்னியில் ஆகுதிகளை சமர்ப்பிக்கிறோம்.
யக்ஞம் செய்ய வேண்டுமானால் அக்னி மூட்டித்தான் செய்ய வேண்டும். விஷ்ணு யாகம், சுதர்சன யாகம் அனைத்தும் அக்னியிடம்தான் செய்கிறோம். பரமாத்மாவையே அக்னியிடம் வழிபடுகிறோம்.
அதேபோல் சந்திரனில் என்னை பார்! என்கிறான். இவ்வாறு வரிசையாக சொல்லிக்கொண்டே உத்தமர்களான தபஸ்விகளிடம் என்னைப் பார்! என்கிறான். அவ்வாறு இறுதியில் அனைவரிலும் என்னைப் பார்க்கும் நிலை வரும் என்கிறான்.
பரமாத்மா எங்கும் நிறைந்தவன் என்றாலும் அவன் ஸ்பஷ்டமாக தென்படும் விபூதி ஸ்தானங்கள் சில உள்ளன. அவற்றுள் சூரிய மண்டலமும் ஒன்று. இந்த பூமியைப் படைத்தவன் அவன்தான். வாழ வைப்பதும் அவன்தான். லயம் செய்வதும் அவனே!
விஞ்ஞானத்தின்படி சிந்தித்துப் பார்த்தாலும் இதுவே உண்மை. சிருஷ்டி, ஸ்திதி, லயம் எனப்படும் படைத்தல் காத்தல் அழித்தல் மூன்றும் அவனால்தான் நடைபெறுகின்றன.
பூமி தன்னைத் தானே சுற்றுவதால் பகல் இரவு ஏற்பட்டாலும் பூமி தன்னைத் தானே சுற்றுவதும் சூரியன் மூலம் பெற்று ஆகர்ஷண சக்தியால்தான்!
பூமி தன்னைத் தானே சுற்றிக் கொள்வது ஆத்ம பிரதட்சணம். சூரியனைச் சுற்றுவது பரமாத்மாவைப் பிரதட்சணம் செய்வது. கிரக மண்டலத்தில் பூமி கூட சூரியநாராயணனை பிரதக்ஷணம் செய்கிறது!
வேதத்தில் வர்ணித்த சிவன் விஷ்ணு அனைத்தும் சூரிய பகவானே! சூரியன் சந்திரன் அக்னி என்று மூன்று இருந்தாலும் மூன்றும் ஒன்றே! “சந்திரனும் சந்திரனின் பிரகாசமும் என்னுடையது என்று அறிவாயாக!” என்றான் கீதையில் கண்ணன்.
சந்திரனுக்கு சுயமாக பிரகாசம் கிடையாது. சூரியன் மூலம் சந்திரன் பிரகாசிக்கிறான். விஞ்ஞானத்தின்படி யோசித்துப் பார்த்தால் அக்னி கூட சூரிய சம்பந்தம் கொண்டதே! அக்னி சந்திரன் இரண்டும் வேறு வேறாகத் தென்பட்டாலும் அவற்றில் உள்ளது சூரியனின் பிரகாசமே!
சூரியனை “அன்னப்பிரதாதா!” அன்னமளிப்பவன் என்று உபாசனை செய்தால் அன்னத்திற்குக் குறைவிருக்காது! பிரத்யக்ஷ தெய்வமான சூரிய பகவானுக்கு வந்தனம்!
தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்



