
விஷ்ணு புராணத்தில் பிரம்மதேவரிடம் மகாவிஷ்ணு கூறும் சில வாக்கியங்கள் உள்ளன. அவை நினைவில் நிறுத்த வேண்டிய வாக்கியங்கள்.
“அஹம் ச வோ பவந்தஸ்ச சர்வம் நாராயணாத்மகம் !
விஷ்ணோரன்யந்து பஸ்யந்தி யே த்வாம் மாம் ச சிவம் ச வை !
குதர்க்க மதயோ மூடா: பதந்தி நரகேஷ்வத:
யே ச மூடா துராத்மான: பின்னம் பஸ்யந்தி மாம் ஹரம் !
ப்ரஹ்மாணம் ச ததா தேஷாம் ப்ரூண ஹத்யா சமம்த்வகம் !!”
இவை மிக அழுத்தமான வாக்கியங்கள். மகாவிஷ்ணு கூறுபவை. அதாவது, “நான் பிரம்மா ருத்ரன் மூவரும் ஒரே நாராயணனின் சொரூபங்கள். அதேபோல் விஷ்ணுவையும் சிவனையும் வேறாகப் பார்த்தாலும், குதர்க்கம் செய்து பாண்டியத்தால் வேறுபட்ட அபிப்பிராயங்களை ஏற்படுத்தினாலும் அவர்கள் நரகத்தில் விழுவதோடு அவர்களுக்கு (ப்ரூண ஹத்யா) கருவில் இருக்கும் சிசுவைக் கொன்றதற்குச் சமமான பாவம் வந்து சேரும்”. இது விஷ்ணு கூறியுள்ள வசனம்! கூர்ம புராணத்தில் கூட இதே போன்ற வாக்கியங்களே உள்ளன.
மகோபநிஷத் என்று வேதத்தில் ஒரு உபநிஷத் உள்ளது. அதில் ஒரு கருத்து காணப்படுகிறது.
“ஏகோஹி வை நாராயண: சிருஷ்டி ஸ்திதி லயார்தம்
பிரஹ்ம விஷ்ணு ருத்ர ரூபேண த்ரிதா விபக்த: !!”
“இருப்பது ஒரே நாராயணனே! சிருஷ்டி ஸ்திதி லயத்திற்காக அவரே பிரம்மா விஷ்ணு ருத்ரன் ஆகிறார்” என்று கூறப்பட்டுள்ளது.
சிவபுராணத்தில் இங்கு நாராயணன் என்பதற்கு பதில் சதாசிவன் என்ற சொல் காணப்படுகிறது. “ஒரே சிவன் பிரம்மா விஷ்ணு ருத்ரன் என்று வடிவங்களை எடுத்தார்” என்று கூறப்பட்டுள்ளது.
அதாவது மூன்றாக ஆன ஒரு தத்துவம் உள்ளது. அந்த தத்துவத்திற்கு நாராயணன் என்றும் சிவன் என்றும் பெயர்கள் என்ற உயர்ந்த கருத்தொற்றுமை தென்படுகிறது. இவ்வாறு ஒன்றல்ல இரண்டல்ல…! அனைத்துப் புராணங்களும் கூறுகின்றன.
ஆனால் சிலர் ஏதோ கற்பனை செய்து சிவபுராணங்கள் அனைத்தும் தாமஸ நோக்கில் எழுதப்பட்டவை என்றும் விஷ்ணு புராணங்கள் அனைத்தும் சாத்வீக நோக்கில் எழுதப்பட்டவை என்று கூறி, தாமச புராணம், ராஜச புராணம், சாத்வீக புராணம் என்று பிரித்துப் பேசுகிறார்கள். இவையெல்லாம் விந்தையாக உள்ளன. சிவபுராணத்தைப் பற்றி கூறும்போது சாத்வீகமாக இயற்றப்பட்ட சிவபுராணங்கள் என்பார்கள். தாமசமாக இயற்றப்பட்டவை விஷ்ணு புராணங்கள் என்பார்கள்! அதே போல் விஷ்ணு புராணத்தில் சிவபுராணங்களில் தாமஸம் என்பார்கள்.
உண்மையில் இந்த தாமச, சத்துவ புராண பாகங்கள் வியாசர் இயற்றிய புராணங்களில் இல்லை. இவை பிற்காலத்தில் இடைச்செருகலாக கற்பித்து எழுதி சேர்க்கப்பட்டவை.
அதனால் தற்போது இளைஞர்களோ மதத்தை பின்பற்றுபவர்களோ இந்த வாக்கியங்களைப் படித்து விட்டு குழப்பத்தில் முழுகாமல் எந்த தெய்வத்தோடு தொடர்புடையதாக இருந்தாலும் அந்த தெய்வத்தை நாம் பரம தத்துவமாக உபாசனை செய்ய வேண்டும் என்பதை அறிவோமாக!
இவை வேதம் கூறியுள்ள தெய்வங்கள்! அதையும் கவனிக்க வேண்டும். விஷ்ணுவோ, சிவனோ, ராமனோ, கிருஷ்ணனோ, அம்பாளோ, கனபதியோ, சுப்ரமணியனோ, சூரியனோ….. ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு தெய்வத்தின் மீது விருப்பம் இருக்கும். எதன் மேல் ப்ரீத்தி உள்ளதோ அதனையே உறுதியாகப் பிடித்துக்கொண்டு உபாசனை செய்து வந்தால் தவறாமல் முக்தி அடைவான்.

இதே கருத்தை கீதையில் கண்ணன் கூறுகிறான். “யாருக்கு எதன் மேல் சிரத்தை ஏற்படுகிறதோ அந்த சிரத்தையை மேலும் அபிவிருத்தி செய்ய வேண்டுமே தவிர அவர்களுடைய அந்த சிரத்தையின் மேல் நிந்தை செய்யக் கூடாது” என்று எச்சரித்துள்ளான் கிருஷ்ணன். இதையும் அறிய வேண்டும்.
ஓரிடத்தில் விஷ்ணு சிறந்தவர் என்றும் மற்றோரிடத்தில் சிவன் சிறந்தவர் என்றும் கூறுவதற்கு காரணம் என்ன என்பதை அழகாக விவரித்து வாயு புராணத்தில் ஒரு வாக்கியம் காணப்படுகிறது. சில ஸ்லோகங்களில் அது குறித்து விவரித்துள்ளார்.
“த்ரயஸ்தே காரணாத்மானோ ஜாதாஸ்ஸாக்ஷான் மஹேஸ்வராத் !
ப்ரஹ்ம நாராயணௌ பூர்வம் ருத்ர: கல்பாந்தரே அஸ்ருஜத் !!”
“இருப்பது ஒரே பரப்ரஹ்மம். அவரே சிருஷ்டி, ஸ்திதி, லயத்திற்கு காரணமான பரமாத்மா. அவர் படைத்தல் காத்தல் அழித்தல் என்பதைக் காரணமாகக் கொண்டு மூன்று ரூபங்களை மேற்கொள்கிறார். அவையே பிரம்மா விஷ்ணு சிவன் என்ற மூன்று வடிவங்கள். முதன்முதலில் சிருஷ்டியின் தொடக்கத்தில் பிரம்மா, அதன்பின் நாராயணன். கல்பத்தின் இறுதியில் ருத்ரன்! இது ஒரே பரமாத்மாவின் மூன்று தோற்றங்கள்”.
“கல்பாந்தரே புனர் ப்ரஹ்மா ருத்ர விஷ்ணு ஜகன்மய: !”
ஒரு கல்பம் முடிந்தவுடன் மீண்டும் ஒரு கல்பம் ஆரம்பமாகும். ஒரு கல்பத்தின் தொடக்கத்தில் பரமாத்மா விஷ்ணுவாக வடிவமெடுப்பார். அவரிடமிருந்து பிரம்மா சிவன் போன்றோர் தோன்றுவர். மற்றுமொரு கல்பத்தின் ஆரம்பத்தில் பரமாத்மா பிரம்மாவின் வடிவில் வெளிப்படுவார். இன்னுமொரு கல்பத்தின் தொடக்கத்தில் அவர் சிவன் வடிவத்தில் வெளிப்படுவார்.
எனவே கல்பத்தின் ஆரம்பத்தில் சிவன் வடிவில் வெளிப்படும்போது அவருடைய முக்கியத்துவத்தை விவரித்து சிவபுராணம் இருக்கும். பிரம்மாவாக இருக்கும்போது பிரம்மாவின் முக்கியத்துவத்தை விவரிக்கும் புராணங்கள் இருக்கும்.
“ஏவம் ச கல்ப கல்பேஷு ப்ரஹ்ம விஷ்ணு மஹேஸ்வரா: !
பரஸ்பரேண ஜாயந்தே பரஸ்பர ஹிதைஷிண: !!”
இவ்விதம் ஒரே பரமாத்மா மாறி மாறி ஒரு கல்பத்தில் விஷ்ணுவாகவும் ஒரு கல்பத்தில் சிவனாகவும் பிரதானமாக தோன்றுவதால் அவர்களிடையே பேதம் இல்லை என்பதை அறிய வேண்டும்!
ஒருவேளை வேறுபாடு காட்டினால்….
“யாதுதானா பவந்த்யேவ பிஸாசாஸ்ய ந சம்ஸய: !”
அவ்வாறு வேறுபாடு காண்பவர்கள் ராட்சச, பிசாசு ஜென்மங்களை எடுப்பார்கள் என்று தெளிவாக வாயு புராணம் கூறுகிறது.
இவ்விதமாக வியாசபகவான் அநேக புராணங்களின் வழியே எந்தெந்த தெய்வத்தின் பக்தனுக்கு அந்தந்த தெய்வத்தின் மேல் நிஷ்டை ஏற்படும்படி புராணங்களை அளித்தபடியே இதர தெய்வங்கள் வெறுக்கக்கூடாது என்றும் சமமான எண்ணம் கொண்டிருக்க வேண்டும் என்றும் கூறுகிறார்.
இப்படிப்பட்ட சித்தாந்தங்களை ஒவ்வொரு ஆச்சாரியரும் வியாபிக்கச் செய்தால் சனாதன தர்மம் ஐக்கியத்தோடும் கருத்தொற்றுமையோடும் சமரசத்தோடும் முழுமையான அபிவிருத்தியை சாதிக்க இயலும்.
தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்



