spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்ருஷி வாக்கியம் (77) - ராமாயணமும் மகாபாரதமும் வன்முறையைத் தூண்டுகின்றனவா?

ருஷி வாக்கியம் (77) – ராமாயணமும் மகாபாரதமும் வன்முறையைத் தூண்டுகின்றனவா?

- Advertisement -


ஹிந்து தர்மத்தின் சிறப்பினை உலகில் அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளனர். ஹிந்து தர்மத்தில் விஸ்தாரமான இலக்கியம் உள்ளது. வேதம் புராணம் இதிகாசம் முதல் அநேக இந்திய மொழிகளில் ருஷிகளுக்குச் சமமான மகாத்மாக்கள் இயற்றிய நூல்களும் உள்ளன.

அதற்குத் துணையாக பலவித மார்க்கங்களில் உள்ள அழகும் சேர்ந்துள்ளது. சிலர் பூஜைகள் செய்வர். சிலர் கீர்த்தனைகள் பாடுவர். ஸ்ரவணம், மனனம், யோகம், ஞானம், பக்தி, உபாசனை… இவ்வாறு பல மார்க்கங்கள் உள்ளன. அனைத்து மார்க்கங்களையும் சேர்த்து அனுசரிப்பவர்களும் உள்ளார்கள். ஒரே ஒரு மார்க்கத்தை மட்டும் உறுதியாக பற்றிக் கொண்டு அனுசரிப்பவர்களும் உள்ளார்கள்.

இவ்விதம் இதற்கு இருக்கும் உயர்ந்த அம்சங்களையும் சிறந்த நூல்களையும் பார்த்து உலகினர் அனைவரும் ஹிந்து தர்மத்தை மதிக்கிறார்கள். ஹிந்து தர்மத்தில் உள்ள யோகம், ஜோதிட சாஸ்திர விஞ்ஞானம், அதேபோல் மந்திர சாஸ்திரத்தின் பிரபாவம்.. அனைத்தையும் ஆராய்ந்து இதில் உள்ள மந்திர, யந்திர, தந்திர விஞ்ஞானங்களையெல்லாம் ஆய்ந்தறிந்து மேல்நாட்டு மேதாவிகள் பல நூல்களை எழுதியுள்ளார்கள். அவற்றைக் கடைப்பிடித்து வருகிறார்கள் கூட!

ஆனால் நமக்கு மட்டும் நம் தர்மத்தின் மேல் இன்னும் சரியான புரிதல் இல்லை. புரிதல் ஏற்பட வேண்டும்! புரிதலை ஏற்படுத்த வேண்டும்!

உதாரணத்திற்கு சமீபத்தில் சிலர் ஹிந்து தர்மம் வன்முறையை ஊக்குவிக்கிறது என்றும் ராமாயணமும் மகாபாரதமும் வன்முறையைத் தூண்டுகின்றன என்றும் வாய்க்கு வந்தபடி பேசுகிறார்கள். ஆனால் உண்மையில் ராமாயணமும் மகாபாரதமும் படித்துவிட்டு வன்முறையாளராக மாறியவர் ஒருவர் கூட இல்லை.

ராமாயணமும் மகாபாரதமும் ஹிம்சையை ஊக்குவிக்கின்றனவா? இதனை நாம் ஆராயவேண்டும். ராவணன் செய்தது தீய செயல். அப்படிப்பட்ட தீய செயலுக்கு தண்டனை அளித்து தன் மனைவியைத் திரும்ப அழைத்து வந்தார் ராமச்சந்திரமூர்த்தி. இதில் தவறேதும் இல்லையே! அவர் போய் ஆக்கிரமிப்பு செய்யவில்லையே! தன்னுடைய மனைவியைத் தன்னிடம் ஒப்படைத்து விடும்படி கேட்டார். இல்லாவிட்டால் தண்டிப்பேன் என்றார். இதனை பௌருஷம் என்பார்கள். பராக்கிரமம் என்பார்கள். இது சிறந்த குணம்.

அதனால்தான் சிறந்த கதாநாயகர்களை சித்தரிக்கும்போது பராக்கிரமசாலியாகக் காட்டுவார்கள். பராக்ரமம் என்பது ராமச்சந்திர மூர்த்தியிடம் இருந்த உயர்ந்த குணம். அது இன்றி கையாலாகாதவனாக அமைதிப் பேச்சுக்கள் பேசுவது அசட்டுத்தனம் எனப்படும். தேவையானபோது பிரதாபத்தைக் காட்ட வேண்டும். எனவே பிரசன்னமான குணமும் இருக்க வேண்டும். பிரதாபமும் இருக்க வேண்டும்.

சிறந்த நாடுகள் வீரர்களின் சேனையை கொண்டிருக்கும். அதற்கான பயிற்சிகள், ஆயுதங்கள் இருக்கும். இது ஒவ்வொரு தேசத்திலும் இருக்கும். அதற்காக அவர்கள் ஹிம்சையைத் தூண்டுகிறார்கள் என்பது பொருளல்ல. தற்காப்புக்காகவும் நாட்டுப் பாதுகாப்புக்காகவும் அவ்விதம் வீரர்களை ஆயுதப் பயிற்சியில் ஈடுபடுத்துவார்கள். அவர்களை வன்முறைவாதிகள் என்று கூறக்கூடாது. ஒரு நாட்டில் வீரர்கள், சேனைகள், பாதுகாப்புத்துறை, போர்ப் படை அமைப்பு, ஆயுத அமைப்பு இவையனைத்தும் உள்ளன என்றால் அதற்கு தீவிரவாதம், வன்முறை வாதம் என்று பெயர் அல்ல.

ராமாயணமும் மகாபாரதமும் காட்டும் யுத்தங்களை பயங்கரவாதம் என்று கூறக்கூடாது. ராமச்சந்திர மூர்த்தி முதலில் சமாதானத்தை விரும்பி அனுமனையும் அங்கதனையும் தூது அனுப்பினார். இறுதியாக விபீஷணனுக்கு சரணாகதி அளிக்கும் போது கூட ஒரு வார்த்தை கூறினார். “விபீஷணன் மட்டுமல்ல. அவன் அண்ணன் ராவணனே வந்தால் கூட அவனுக்கு அபயம் அளிப்பேன்!” என்று கூறினார். எப்போது? “சீதாதேவியை திரும்ப ஒப்படைத்து மன்னிப்பு கேட்டால் கட்டாயம் அவனை மன்னிப்பேன்!” என்றார்.

அப்போது கருடன் ராமனைப் பார்த்து ஒரு வார்த்தை கூறுவார். “ரிபுணாமபி வத்சல” என்பார். “பகைவர்களிடம் கூட வாத்சல்யம் கொண்டவர்” என்றார்.

இதுவே ராமாயணம் காட்டும் சமாதானம். தன் மனைவியை அபகரித்த தீயவனும் கொடூரமானவனுமான அசுரனைக் கூட சரணடைந்தால் மன்னித்து அபயம் அளிப்பதாக வாக்களித்தார். ராமச்சந்திர மூர்த்தி அஹிம்சையே உருவானவர். அதனால் அஹிம்சைக்காக ஹிம்சை செய்வது என்பது கூட ஒரு தர்மமே!

மகாபாரதத்தை ஆராய்ந்து பார்த்தால் தர்மபுத்திரர் சமாதானத்தை விரும்பி ஐந்து ஊர்கள் அளித்தாலும் போதும் என்று கேட்டார். அத்தனை தூரம் அமைதிக்காக கீழே இறங்கி வந்தார்கள் பாண்டவர்கள். இம்சை வேண்டாம் என்று எண்ணினார்கள். ஆனால் ஹிம்சையே வடிவெடுத்தவர்களான….. சிறுவயது முதலே பிறரைத் துன்புறுத்தும் வழக்கம் கொண்டவர்களான… கௌரவர்கள் பிறர் சொத்தை அபகரிப்பது, அதர்மமாக பிறர் நிலத்தை அபகரிப்பது…. போன்ற செயல்களில் ஈடுபட்டார்கள். அப்படி இருக்கும்போது முறையாக அவற்றைத் திரும்பப் பெற்றார்கள் பாண்டவர்கள். இதனை கொண்டு அங்கு கூட வன்முறை எதுவும் இல்லை என்பது தெளிவாகிறது.

அதேபோல் பகவத்கீதையும் பயங்கரவாதத்தை குறிப்பிடவில்லை. கடமையைச் செய்யும்படியே வலியுறுத்துகிறது. தர்ம ரட்சணைக்காக ஹிம்சையை கடைபிடிப்பது கூட அஹிம்சையின் கீழ்தான் வரும். அது எப்படிப்பட்டதென்றால் ஒரு மருத்துவர் சிகிச்சை செய்யும்போது தேவையேற்பட்டால் உடலில் உள்ள கிருமிகள் நிறைந்த உறுப்பை நீக்கிவிடுவார். அதனை பயங்கரவாதம் என்று கூறுவோமா என்ன? அவர் அஹிம்சையின் நோக்கில் உடலில் உள்ள இன்ஃபெக்ஷனை வளர்த்து போஷித்தால் அதுதான் ஹிம்சை. அதனால் அஹிம்சைக்காக செய்யும் ஹிம்சை கூட அஹிம்சையே! இதனை அறிந்து கொள்ள வேண்டும்.

உலகம் முழுவதிலும் ஹிம்சை இன்றி, மதமாற்றம் இன்றி தர்மத்தோடும் ஞானத்தோடும் சாந்தியோடும் உயர்ந்த தர்ம குணங்களோடும் உள்ள ஒரே ஒரு மதம் ஹிந்து மதம். இதனை அறிய வேண்டும்.

ஹிந்துமதம் எங்கே அதிகம் காணப்படுகிறதோ அங்கே அகிம்சை நிலவும். இதனை கவனிக்க வேண்டும். இந்து மதத்தவர் அதிகம் வசிக்கும் இடங்களில் வேறுபாட்டு வாதங்கள் இருக்காது. கலகங்கள் இருக்காது. சண்டைகள் இருக்காது.

ஹிந்து தர்மத்தில் உள்ள சிறப்பு என்னவென்றால் பிற மதங்களோடு சேர்ந்து வாழும் உதார குணம் இந்து தர்மத்திற்கு உள்ளது. எனவே அகிம்சை குணம் இயல்பாகவே கொண்ட ஒரே ஒரு மதம் ஹிந்து மதம்.

ஹிந்து மதத்தின் சிறப்பின் காரணமாகத்தான் பாரத தேசம் அகிம்சைவாதத்தை உலகிற்கு அளிக்க முடிந்தது. புத்தர் கூட ஹிந்து மதத்தின் ஒரு பாகமான உபநிஷத்திலிருந்து ‘அகிம்சை’ யை எடுத்துக்கொண்டார். சத்தியம், அஹிம்சை, சௌசம், அஸ்தேயம் என்ற சொற்களில் அகிம்சை குணம் விவரிக்கப்படுகிறது.

அதேபோல் மகாபாரதத்தில் பீஷ்மர் ஒரு வார்த்தை கூறுவார். “யக்ஞத்திற்காகச் செய்யும் ஹிம்சை ஹிம்சை அல்ல!” என்கிறார். யக்ஞம் என்றால் லோக ரட்சணை என்று பொருள். உலகின் பாதுகாப்புக்காக செய்யும் இம்சை ஹிம்சை அல்ல என்பதை அறிய வேண்டும்.

குரூர காட்டு மிருகங்கள் கிராமங்களில் புகுந்து மனிதர்களையும் கால்நடைகளையும் குதறித் தின்னும்போது அந்த கொடூர மிருகங்களை வதைப்பது அகிம்சையின் பாகமாகவே பார்க்கப்படுகிறது.

இவ்வாறு ‘ஹிம்சை’ என்பதன் முழுமையான விளக்கத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும். அகிம்சையின் பிரயோஜனத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும். இதனை அறிய முடிந்தால் ஹிம்சையிடமிருந்து தூரமாக இருப்பவனே ஹிந்து என்ற விளக்கத்தை நாம் புரிந்து கொள்வோம்!

அப்படிப்பட்ட ஹிந்து தர்மத்தில் பிறந்ததற்காக பெருமிதம் கொள்வோம்! ஹிந்து தர்மத்தை வணங்குவோம்!

தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe